வெள்ளி, 7 ஜூலை, 2017

போலீஸ் குடும்பத்தினர் போராட்டம்!

 mபோலீஸ் குடும்பத்தினர் போராட்டம்!பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வுபெற்ற காவல்துறையினர் மற்றும் காவல்துறை குடும்பத்தினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டனர்.
ஜூலை 6ஆம் தேதி, சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. இந்த நேரத்தில் ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெறும் வகையில் காவல்துறை குடும்பத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை சங்கத்தினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மனு கொடுக்கப் போவதாகவும், காவல்துறையினரின் குடும்பத்தினர் மெரினாவில் இருந்து கோட்டைக்கு, பேரணியாகச் சென்று மனு கொடுப்பார்கள், இதில் போலீஸாரும் கலந்து கொள்வார்கள் என்றும் கடந்த சில நாள்களாகவே சமூக வலைதளங்களில் அவர்கள் அறிவித்து வந்தனர். இதனால், ஜூலை 6ஆம் தேதி தலைமைச் செயலகம் வளாகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.


இந்நிலையில் அவர்களின் மனுவில், ‘காவல்துறைக்கென்று சங்கம் அமைக்க வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கருணை அடிப்படையில் காவல்துறையினருக்குப் பணி வழங்க வேண்டும். காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும். ஆபத்தான சூழ்நிலைகளில் வழங்கப்படும் உதவித்தொகையின் அளவை உயர்த்த வேண்டும். காவல் துறையினரின் குறைகளைக் கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்யும் வகையில், காவல்துறையினர் நலப் பிரிவு என்று கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது, அப்பிரிவு தற்போது செயல்படாமல் உள்ளது. அதை, செயல்படுத்த வேண்டும். மற்றும் கான்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கான்ஸ்டபிளுக்கு 10 வருடங்கள் என்பதை 5 வருடங்களாக குறைக்க வேண்டும்’ போன்ற 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால், அவர்கள் மனு கொடுப்பதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அவர்களைத் தடுத்து காவல்துறை கைது செய்தது.

அதில் கலந்துகொண்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்படும்போது. “உங்களுக்கும் சேர்த்துத் தானே போராடுகிறோம் நீங்களே இதை ஒடுக்கினால் எப்படி?” என்று காவல்துறையினரிடம் உணர்வுபூர்வமாகக் கோரிக்கை வைத்தனர். இப்போராட்டத்தில், தஞ்சை, மதுரை, திருவாரூர் போன்ற தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஓய்வுபெற்ற காவல்துறையினர் மற்றும் காவல்துறையினரின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். பின்பு, அவர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது.

மேலும், காவல்துறையினர் சங்கம் தொடங்குவது தொடர்பாக சென்னையில் சில இடங்களிலும், தமிழகத்தில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. நீண்ட நாள்களாகவே இக்கோரிக்கைகள் இருந்துவந்தாலும், தற்போது அதற்காக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல், தமிழக அரசு அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: