ஞாயிறு, 2 ஜூலை, 2017

மூவாயிரம் தமிழக மீனவர்கள் மீது பாய்ந்த இலங்கை! நேற்று நடந்த சம்பவம்!

மூவாயிரம் தமிழக மீனவர்கள் மீது பாய்ந்த இலங்கை!
மின்னம்பலம் : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை விரட்டியடித்த சம்பவம் நேற்று ஜூலை 1ஆம் தேதி இரவு நடைபெற்றுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட படகுகளில் 3,000 தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்த விசைப் படகுகள் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது, அங்கே 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களைப் போகச் சொல்லியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், சில இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களின் படகுகளில் ஏறி மீனவர்களைத் தாக்கியதோடு அவர்களுடைய வலைகளை அறுத்துள்ளனர். மேலும், கற்களைக்கொண்டு மீனவர்களைத் தாக்கியுள்ளனர்.
இதனால், நிலைகுலைந்த தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு அவசரமாக அங்கிருந்து புறப்பட்டனர். இதையடுத்து, தமிழக மீனவர்கள் இன்று ஜூன் 2ஆம் தேதி காலை ராமேஸ்வரத்துக்கு கரை திரும்பினர். இதனால், ராமேஸ்வரம் மீனவர்களிடையே பதற்றம் நிலவுகிறது.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களைக் கைது செய்வதும் வலைகளை சேதப்படுத்தி படகுகளைப் பறிமுதல் செய்வதுமான அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்னைக்கு மத்திய அரசு விரைவாகத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மீன் பிடி தடைக்காலம் முடிவடைந்த பிறகு கடந்த இரண்டு வாரங்களில் 40-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: