ஞாயிறு, 2 ஜூலை, 2017

Dr.K.Subashini :பிரான்சில் 578 தமிழ் ஓலைச் சுவடிகள்.. பிரான்சு தேசிய நூலகம் Bibliothèque nationale de France


14 மில்லியன் ஆவணங்களைத் தன்னகத்தே கொண்ட மாபெரும் நூலகம் பிரான்சு தேசிய நூலகம். உலக மொழிகள் பலவற்றின் பழம் நூல்களும் ஆவணங்களும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. இந்திய மொழிகளில் தமிழ் மொழிகளில் எண்ணிக்கையில் அதிகம் கொண்ட சேகரத்தைக் கொண்டுள்ளது இந்த நூலகம். இதன் அரிய ஆவணச் சேகரங்கள் பகுதியில் 578 தமிழ் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த தமிழ்ச்சுவடிகளையும் ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்து குறிப்பிட்ட சில ஓலைச்சுவடிகளையும் கையெழுத்து ஆவணங்களையும் மின்னாக்கம் செய்து வர, கடந்த வாரம் அதாவது ஜூன் மாதம் 15ம் தேதி பிரான்சின் தலைநகரமான பாரீசுக்கு நான்கு நாட்கள் சென்றிருந்தேன். பிரான்சு தேசிய நூலகம் Bibliothèque nationale de France என்று பிரஞ்சு மொழியில் அழைக்கப்படுகின்றது. இந்த நூலகத்தின் நான்கு தனிப்பகுதிகள் பாரீசின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருக்கின்றன. நான் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக மின்னாக்கம் செய்யச் சென்றிருந்த பகுதி அரிய சுவடிகள் ஆவணப்பாதுகாப்பகம் அமைந்திருக்கும் ஐந்து மாடிக் கட்டிடம். இங்கு மூன்றாம் தளத்தில் தான் அரிய ஆவணங்களின் சேகரங்கள் ஆய்வாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.


இங்குச் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஆவணங்கள் வெவ்வேறு காலகட்டத்தைச் சார்ந்தவை. சில நூல்களைப் பார்த்த போது இவ்வளவு பெரிய அளவில் நூல்களைச் செய்தனரா, என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

உலகின் பல நாடுகளில் பல கால கட்டங்களில் நூல்கள் உருவாக்கப்பட்டன. பழமையான இந்த நூல்கள் உலக வரலாற்றின் முக்கியச்சான்றுகளாக அமைந்திருப்பவை. இத்தகைய அரிய நூல்களையும் ஆவணங்களையும் பெறுவதில் உலகின் முன்னணி நூலகங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். பிரித்தானிய நூலகம், ஹார்வர்ட் நூலகம், பெர்லின் நூலகம் போன்று இந்த பிரான்சு தேசிய நூலகமும், அத்தகைய பழம் நூல்களை ஏதாவது ஒரு வகையில் பெற்று பாதுகாத்து வருகின்றது. இந்த நூல்களைப் பார்த்து ஆய்வு செய்ய இவை அனுமதிக்கின்றன என்பதுதான் நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பெறும் பேறு எனக் கருதுகின்றேன்.

தமிழகத்திற்கு வெளியே பல்வேறு காரணங்களால் கொண்டு செல்லப்பட்ட தமிழ் நூல்கள் ஆங்காங்கே பாதுகாக்கப்படுகின்றன என்ற செய்திகளை சில ஆய்வறிக்கைகளில் காணமுடிகின்றது. இந்த பிரான்சு தேசிய நூலகத்தின் சேகரிப்புக்களை  இணையத் தேடலில் நான் அறிய வந்த பின்னர் இந்த நூல்களை வந்து பார்த்து ஆராய்ந்து அவற்றில் சிலவற்றை மின்னாக்கம் செய்ய வேண்டும் என அனுமதி கோரி நூலகப் பொறுப்பாளர்களுக்குக் கடிதம் அனுப்பினேன். எனது கோரிக்கையை ஏற்று, தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பற்றி அறிந்து இவற்றை வந்து பார்த்து ஆராய அனுமதி வழங்கிய நூலகப் பொறுப்பாளர்களுக்கு நிச்சயம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.

நூலகப் பட்டியலில் 578 தமிழ் நூல்களின் பெயர்கள் இருந்தன. பெரும்பாலானவை ஓலைச்சுவடிகளாகவும் மற்றும் சில கையெழுத்து நூல்களாகவும் காணப்பட்டன. அவற்றில் திருவள்ளுவர் குறள், குறள், வீரமாமுனிவர் குறளுறை, பரிமேலழகர் உரை, அவ்வைப்பாடினகுறள், மூதுரை, நீதிசாரம், விவேகசாரம், உலகநீதி, சுகிர்தமனிமாலை, கொலைமறுத்தல், சந்தனக்கொறடு, சாமுத்திரிகாபலாபலன், வயித்தியம், தன்மாதிரி உடற்கூறு, மணிமேகலை மூலம், பரதம், மாரியம்மன் பாடல்கள், சாதி நூல், மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், எண் சுவடி, பிரசங்கம் எனப் பல நூல்கள் உள்ளன. இவற்றில் 15 சுவடி நூல்களை அங்கிருந்த வேலையில் நான் மின்னாக்கம் செய்து வந்துள்ளேன். அவை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் படிப்படியாக வலையேற்றப்படும் என்ற செய்தியை வாசகர்களுக்கு அறியத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் பார்வையிட வேண்டிய நூல்களின் பட்டியலை என் வருகைக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே நூலக அதிகாரிக்கு நான் அனுப்பி வைத்து விட்டேன். என் பெயரில் நான் பட்டியலிட்டிருந்த 15 நூல்களும் எனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த மின்னாக்கப் பணியில் என்னுடன் இணைந்து கொண்டு உதவி செய்வதற்காக பிரான்சில் வசிக்கும் நண்பர் சாம் விஜய் அவர்களும் உடன் வந்து முதல் நாள் இணைந்து கொண்டார். எங்களுக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டு அரிய ஆவணங்கள் உள்ள மூன்றாம் தளத்திற்குச் சென்று அங்கு சில அடிப்படை சோதனைகளை முடித்த பின்னர் எங்களுக்காக வைக்கப்பட்டிருந்த ஓலைகளை அங்கிருந்த ஒரு ஊழியர் காட்டினார். அனைத்து ஓலைக்கட்டுக்களையும் எடுத்துப்பார்க்க அனுமதி வழங்கப்படுவதில்லை. மாறாக ஒரு நேரத்தில் ஒரு சுவடிக்கட்டு என்ற வகையில் தான் அனுமதி அளிக்கின்றனர். முதலில் நமக்கு வேண்டிய சுவடிக்கட்டை ஒரு ஊழியரிடமிருந்து பெற்ற பின்னர் இன்னொரு ஊழியர் நாம் எடுத்துச் செல்லும் அந்தச் சுவடிக்கட்டின் குறிப்பு எண்ணைக் கணினியில் பதிகின்றார். அவர் அனுமதி அளித்த பின்னரே சுவடிக் கட்டு நம் கைக்குக் கிடைக்கின்றது.

சுவடிக்கட்டுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக தூய்மையான பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பெட்டிக்கும் அதன் குறிப்பு எண் வழங்கப்பட்டுள்ளது. சுவடிக்கட்டுக்கள் ஒவ்வொன்றும் ஒரு மென்மையான வெள்ளைத்துணியால் போர்த்தப்பட்டிருக்கின்றன. சுவடிக்கட்டுக்கள் ஒவ்வொன்றும் வெவேறு வகை பனை ஓலைகளால் வெவ்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டவை என்பதை ஒவ்வொன்றையும் தொட்டு ஆராயும் போதே அறிய முடிகின்றது. தமிழ் எழுத்தர்கள் எழுதி உருவாக்கிய பனை ஓலைச் சுவடி நூல்களோடு தமிழகத்துக்கு வந்து அங்கே தமிழ் கற்று வாழ்ந்த ஐரோப்பிய பாதிரிமார்களின் கையெழுத்தில் அமைந்த சுவடி நூல்களும் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன என்பதும் ஒரு சிறப்பு.

இங்குள்ள சேகரத்தில் குறிப்பிடத்தக்க மூன்று நூல்கள் உள்ளன. ஒன்று 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் வழக்கில் இருந்த தொழில்கள், அத்தொழில்களைச் செய்த மக்களின் சமூகக் குறிப்புக்கள், ஆண் பெண் அவர்களின் உடையலங்காரத்துடன் கூடிய 200க்கும் மேற்பட்ட கையால் தீட்டப்பட்ட ஓவியங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று இங்கிருக்கின்றது. இன்றைக்குப் பதிவு செய்ய நாம் பயன்படுத்தும் கேமரா போன்ற கருவிகள் இல்லாத அக்காலகட்டத்தில் மிகத் தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியங்கள் இவை. இவற்றை 1830ம் ஆண்டில் வரைந்து உருவாக்கியவர் Mr. Philippe Etienne Ducler (1778-1840) என்பவர். இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்களின் உடையலங்காரம் எவ்வாறு இருந்தது என்பதைக் கண்டறிய உதவும் மிகச் சிறந்த ஆவணங்களுள் ஒன்று இது என நாம் தாராளமாகக் குறிப்பிடலாம்.

அதே போல, தமிழகத்தில் தாம் பார்த்த இறைவடிவங்களின் தோற்றத்தை ஓவியங்களாக வரைந்து அத்தெய்வங்களின் பெயர்களைத் தமிழிலும் பிரெஞ்சு மொழியிலும் வழங்கியிருக்கின்றனர். இது கோயில்களில் இருக்கின்ற சிற்பங்களின் பல்வேறு வடிவங்களைப் பதிந்து வைத்த சிறப்பானதொரு ஆவணம் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்துக்கு கிருத்துவ மதம் பரப்பும் நோக்கில் வந்த பாதிரிமார்களில் இத்தாலியிலிருந்து தமிழகம் வந்த வீரமாமுனிவர் என்ற கொண்ஸ்டான்சோ பெஸ்கி அவர்களைப் போல ரோபெர்ட்டொ டி நோபிலி அவர்களும் குறிப்பிடத்தக்கவர். இவர் இன்று கிருத்துவ மறை நூல்களில் மறை, வேதம், அருள் போன்ற சொற்கள் இடம்பெறக் காரணமாக இருந்தவர். அவர் கைப்பட தமிழில் எழுதிய நூலான "ஞானயுபதேசம்" என்ற தமிழ் நூல் இந்த நூலகத்தில் இருக்கின்றது. இதில் 16ம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த தமிழ் எழுத்து முறையை நன்கு காணலாம். இப்படிப் பல அரிய பொக்கிஷங்களைக் கொண்டிருக்கின்றது பிரான்சின் தேசிய நூலகம்.

இந்தச் சுவடி நூல்கள், அவை எழுதப்பட்ட நிலமான தமிழகத்தில் இன்று இல்லை என்றாலும்,  ஐரோப்பாவில் மிகப் பாதுகாப்பாக இவை வைக்கப்பட்டுள்ளன என்பது ஆறுதல் அளிக்கும் செய்தியே. ஆர்வம் உள்ள ஆய்வாலர்களுக்கு இவை ஆய்வு நோக்கத்திற்காகப் பார்வையிட  வழங்கப்படுகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளை  இத்தகைய அரிய ஆவணங்களைத் தொடர்ந்து மின்னாக்கம் செய்வதோடு உலகளாவிய அளவில் இந்த அரிய தமிழ் பழம் ஓலைச் சுவடிகள் இணையத்தின் வழியாக பார்வையிட இலவசமாகவும் வழங்குகின்றது என்பதைத்   தெரிவிப்பதில் பெருமையும் மகிழ்வும் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை: