ஞாயிறு, 2 ஜூலை, 2017

திருமதி. மீரா குமார் ... கலைஞர் சந்திப்பு ... தலையசைத்து ஆதரவை தெரியப்படுத்தினார்

சென்னை: சென்னையில் திமுக, காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமார் நேற்று சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளதால் நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியம் என்று கூறினார். குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் 17 கட்சிகள் ஒருங்கிணைந்து முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எம்பி, எம்எல்ஏக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். தமிழகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களின் ஆதரவு கேட்டு நேற்று சென்னைக்கு வருகை தந்தார். மாலை 5.30மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த அவர், மாலை 7.05 மணிக்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஓட்டலுக்கு வந்தார். அவரை திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கனிமொழி எம்பி, தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தங்கபாலு, குமரி அனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் டி.கே. ரங்கராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


பின்னர் அங்கிருந்த திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் மீராகுமார் ஆதரவு கேட்டார். அப்போது அவர்கள் மத்தியில் மீராகுமார் பேசியதாவது: நாட்டு மக்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமானது என்றே கருதுகிறேன். ஜனாதிபதி தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். தமிழகத்தில் எனக்கு ஆதரவு தருமாறு அனைத்து கட்சிகளின் எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அடித்தட்டு நிலையில் இருந்து வந்துள்ள எனக்கு எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தங்கள் மனசாட்சி படி வாக்களிக்க வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து எதிர்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் மீராகுமாரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நாங்கள் எல்லாம் உங்களோடு இருக்கிறோம். குறிப்பாக, சமூக நீதிக்காகவும், சமத்துவத்துக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் தலைவர் கருணாநிதியின் சார்பாக  இன்றைக்கு உங்களோடு இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கின்றபோது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மேன்மைக்குரிய இந்திய குடியரசுத் தலைவர்களாக பொறுப்பேற்று இருந்த வி.வி.கிரி, கே.ஆர்.நாராயணன், அப்துல்கலாம், பிரதீபா பாட்டீல் மற்றும் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகிய இவர்களை எல்லாம் தேர்தெடுக்க, துணை நின்ற தலைவர் கருணாநிதியின் சார்பாக, இங்கு உங்கள் மத்தியில் அமர்ந்திருப்பது, எங்களுக்கு மேலும் பெருமையை அளிப்பதாக இருக்கின்றது.

அதேநேரத்தில் இன்னொரு நிகழ்வையும் நான் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். 28-06-1990 தேதியானது திமுகவால் மறக்க முடியாத, மறக்க இயலாத நாளாகும். இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்தவரும், வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவரும், தலைவர் கருணாநிதியிடம் ஆழ்ந்த அன்பு கொண்டவருமான பாபு ஜெகஜீவன்ராமின் சிலைத் திறப்புவிழா, அன்றைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன்  தலைமையில், சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழாவில் நடைபெற்றது. தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தான் பாபு ஜெகஜீவன்ராமுக்கு சிலை வைத்தார்கள். இன்றைக்கும் சென்னை கடற்கரையில் உள்ள எழிலகத்தில் அந்தச் சிலை கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. அந்த விழாவினில், தற்போது 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, இங்கே அமர்ந்திருக்கும் மீராகுமாரும் கலந்து கொண்டதை நான் நினைத்துப் பார்க்கிறேன். இன்று நாடு மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. மெஜாரிட்டி இருந்தால் எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யலாம் என எண்ணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்றதொரு நேரத்தில் நாட்டின் குடியரசுத் தலைவர் பதவிக்குப் பொருத்தமான வேட்பாளரை எதிர்க்கட்சிகளான நாமெல்லாம் ஒன்று சேர்ந்து நிறுத்தியிருக்கிறோம். வெளியுறவுத்துறை அதிகாரியாக, பாராளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக, மக்களவையின் முதல் பெண் சபாநாயகராக இருந்து, அந்தப் பதவிக்குரிய கண்ணியத்தைக் காப்பாற்றியவர் நமது வேட்பாளர். எங்கள் வேட்பாளர், இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க நிறுத்தப்பட்டு இருக்கக்கூடிய வேட்பாளர். இந்திய திருநாட்டின், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டினைத் தூக்கி நிறுத்த களம் கண்டிருக்கிறார். சமூக நீதியின் சங்கநாதம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ஒலிக்க வேண்டும் என்பதற்காக இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.  இவ்வாறு அவர் பேசினார்.

கையை உயர்த்தி மீராகுமாருக்கு கருணாநிதி வாழ்த்து

நேற்றிரவு 8.40 மணிக்கு மீராகுமார் கோபாலபுரம் இல்லம் வந்தார். அவருடன் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மீராகுமார் மகன் அன்சுல் ஆகியோர் ஒரே காரில் வந்தனர். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தங்கபாலு மற்றும் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்பி, டிகேஎஸ். இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர். திமுக தலைவர் கருணாநிதியை மீராகுமார் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது மு.க.ஸ்டாலின், மீராகுமார் குறித்து எடுத்து சொன்னார்.  அதை கேட்ட கருணாநிதி கையை உயர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மீராகுமார் கீழே வந்ததும் கருணாநிதியின் மகள் செல்வி வாழ்த்து தெரிவித்தார்.

அனைவரும் ஆதரவு தர வேண்டும்

ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: சமூக நீதியும் கொள்கையும், நாட்டின் மதிப்புமிக்க சில தன்மைகளுமே திமுகவையும் காங்கிரசையும் இணைக்கும் முக்கிய காரணியாக உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் அரசியல் ரீதியான பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நேரத்தில் தமிழக மக்கள் தயவு கூர்ந்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கருணாநிதியைப்போல  மு.க.ஸ்டாலினும் மதச்சார்பின்மைக்காவும், சமூக நீதிக்காவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். குடியரசு தலைவர் தேர்தலிலும் திமுக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை தந்துள்ளனர். இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது கனிமொழிதான் கையெழுத்திட்டார். ஒட்டுமொத்தமாக திமுக சிறப்பான ஆதரவை தந்து வருகிறது.

சோனியா காந்தியின் தலைமையின் கீழ் ஒன்றுபட்டு, 17 முக்கிய அரசியல் கட்சிகள் என்னை குடியரசு தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளன. அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையின்படி செயல்படுவேன். தலித், பழங்குடியினர், ஏழைகள் என அனைவரின் கண்ணியத்தையும், உரிமைகளையும் காப்பாற்றப் பாடுபடுவேன். ஊடகங்கள் அச்சத்தில் உள்ளன. பயமின்றி தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியவில்லை.  ஊடகங்களின் சுதந்திரம், பொதுமக்களின் பேச்சுரிமைக்காகப் பாடுபடுவேன்.  இவ்வாறு அவர் கூறினார். tamilhehindu

கருத்துகள் இல்லை: