வியாழன், 6 ஜூலை, 2017

GST- Lyca -- தமிழ்ப் படங்களை தயாரிக்க மறுக்கும் லைகா!

மின்னம்பலம் : விஜய்யின் கத்தி திரைப்படத்தில் தொடங்கிய லைகாவின் பயணம் தற்போது
2.0 திரைப்படத்தின்மூலம் டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறது. 2.0-வுக்குப் பிறகு உதயநிதியின் இப்படை வெல்லும், விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்கும் கரு ஆகிய இரண்டு திரைப்படங்களில் லைகாவின் கைவசம் உள்ளன. இந்நிலையில் லைகா தமிழ்ப்படங்களைத் தயாரிக்கமாட்டோம் என அறிவித்திருப்பது தமிழ் சினிமாவில் இன்றைய பரபரப்பை உருவாக்கிவிட்டது. லைக்காவின் சார்பில் 3D டிஜிட்டல் மீட்டிங் இன்று காலை(05.07.2017) ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் 3D திரையரங்குகள் தமிழகத்தில் அதிகளவில் உருவாகவேண்டிய அவசியத்தைப்பற்றி பலரும் கலந்துகொண்டு பேசினார்கள். தற்போதைய தமிழ்த் திரையுலக சூழ்நிலை நல்ல நிலையில் இல்லாததால், அதைப்பற்றிய விவாதமும் அரங்கேறியது. அப்போது பேசிய லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்தின் Creative Head ராஜு மஹாலிங்கம் பேசுகையில் நாங்கள் 2.0 திரைப்படத்துக்கு 400 கோடி செலவு செய்திருக்கிறோம்.

மேலும் பல படங்களை தயாரிக்கும் முடிவில் இருக்கிறோம். கையில் இரண்டு படங்கள் இருக்கின்றன. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகும் தமிழக அரசு 30% வரி விதித்திருப்பது, தமிழ் சினிமாவில் லைகா தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து இயங்க வேண்டுமா? என்ற கேள்வியை நிர்வாக இயக்குநர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால், அடுத்தபடியாக தமிழில் எந்தப்படத்தையும் கையெழுத்திட வேண்டாம் என்று லைகா தலைமையகத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கும் விஜய்யின் 62வது திரைப்படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனம் முனைப்புடன் இருந்தது. ஆனால், எந்திரன் திரைப்படத்துக்குப் பிறகு எந்த திரைப்படத்தையும் தயாரிக்காத சன் பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளே நுழைந்து லைகாவின் முயற்சியைத் தகர்த்தெறிந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: