செவ்வாய், 22 டிசம்பர், 2015

உடுமலை வனத்தில் 3 கிமீ சட்டவிரோத சாலை....சந்தனமர கடத்தல்....

உடுமலை: உடுமலை வனத்தில் தடை மீறி 3 கிமீ சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மரங்களை வெட்டி சாய்த்து, பாறைகளை உடைத்துள்ளனர். இது குறித்து வனத்துறை குழு விசாரணையை துவக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை வனத்தில் தடை மீறி 3 கிமீ தூரத்துக்கு மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பாறைகள் உடைக்கப்பட்டு, ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இது சந்தனமர கடத்தல் கும்பலின் வேலையா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 30 பேர் கொண்ட வனத்துறையினர் இன்று அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இங்கு மலைவாழ் மக்கள் வாழும் ஏராளமான செட்டில்மென்ட் பகுதிகள் உள்ளன.


உடுமலை வனச்சரகத்தில் கோடந்தூர், திருமூர்த்திநகர், கருத்தமடம், குருமடம், குழிப்பிட்ட உள்ளிட்ட 12 செட்டில்மென்ட் உள்ளது. வனத்தில் கிடைக்கும் தேன், பழங்கள், விறகு உள்ளிட்டவற்றை பழங்குடியின மக்கள் தலைசுமையாக சுமந்து அடிவாரத்துக்கு வந்து, பின்னர் பஸ்சில் உடுமலை சென்று விற்று செல்கின்றனர்.இந்நிலையில், திருமூர்த்திநகர் அருகே குழிப்பட்டியில் இருந்து சோத்துப்பாறை வரை 3 கிமீ தூரத்துக்கு தடை மீறி மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பாறைகளும் உடைக்கப்பட்டுள்ளன. இது வனத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதி சந்தன மரங்கள் நிறைந்த பகுதியாகும். கடந்த 2000ம் முதல் 2009ம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கான சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன.

தற்போது சாலை அமைத்தது மலைவாழ் மக்களா, அல்லது சந்தன மர கடத்தல் கும்பலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சாலை அமைக்க வேண்டிய அவசியம் மலைவாழ் மக்களுக்கு இல்லாத நிலையில், சமூக விரோத கும்பல் இதில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. ஏற்கனவே வனத்தில் துப்பாக்கியுடன் நக்சலைட்கள் நடமாடியது கேமராவில் பதிவாகி உள்ளது. இதுபற்றி விசாரிக்க, மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் உடுமலை ரேஞ்சர் சுப்பையா தலைமையில், 4 வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள், வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 30 பேர் கொண்ட குழுவினர் இன்று குழிப்பட்டி விரைந்துள்ளனர்.

அங்கு மலைவாழ் மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வனத்துறையினர் அவ்வப்போது செட்டில்மென்ட் பகுதிக்கு சென்று ேசாதனை செய்வது வழக்கம். ஆனால், தற்போது 3 கிமீ தூரத்துக்கு சாலை அமைக்கும் வரை வனத்துறையினருக்கு தெரியாமல் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  dinakaran.com

கருத்துகள் இல்லை: