செவ்வாய், 22 டிசம்பர், 2015

மத்திய அமைச்சர் ஜவடேகர் : கனமழை பெய்யும் என்று மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டது ...மாநிலஅரசு.......?

கனமழை பெய்யும் என 3 நாட்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது: பிரகாஷ் ஜவடேகர்
நாட்டில் நிலவும் வறட்சி உள்ளிட்ட இயற்கை சார்ந்த பிரச்சனைகள் குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பெருமளவு வெள்ளம் ஏற்படப்போகிறது. மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுங்கள் என்ற எச்சரிக்கையைக் கூட மாநில அரசுக்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிர்வாகத் தோல்வியால் 400 உயிர்களை இழந்துள்ளோம். 

அனைத்தும் முடிந்த பிறகு பிரிட்டீஷ் ஆட்சியில் இருப்பது போல மத்திய அரசு நன்கொடை அளிக்கிறது. முதலில் 500 கோடி தருவோம் என்றார்கள். பின்னர் பிரதமர் நேரில் சென்றதும் ஆயிரம் கோடி ரூபாய் தரப்படும் என்றார். அடுத்து சென்ற நிதியமைச்சர் 4 வாரங்களில் அனைத்து இழப்பீடும் வழங்கப்படும். வங்கிகள் கடன் வழங்கும் என்கிறார். என்ன மாதிரியான கேலி இது.

இன்றும் பல பகுதிகளில் மக்கள் தவித்து வருகின்றனர். மக்கள் தண்ணீரில் தத்தளிப்பதை இன்றும் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது. ஆனால் இன்றுவரை தமிழக அரசிடம் நிலைமையை சமாளிப்பதற்கான செயல் திட்டம் இல்லை என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ரங்கராஜன், சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றிய விசாரணையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இறுதியில் விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கடற்கரை மற்றும் ஆற்றங்கரையோரங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டதும், வடிகால் மற்றும் கால்வாய்கள் அடைக்கப்பட்டதும் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு காரணம்.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை பொறுத்தவரை அதிகளவு பெய்த மழை. குடியிருப்புகள் கட்டப்பட்டதில் முறையான திட்டமிடல் இல்லை. நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன் கழிவு நீர் ஓடைகள் மற்றும் இயற்கையான வடிகால் வசதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலை சென்னையில் மட்டுமல்ல. கனமழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதே வெள்ளத்திற்கு காரணம் என தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
  
சென்னையில் பெருமழை பெய்யும் என்பதால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி 3 நாட்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறினார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: