செவ்வாய், 22 டிசம்பர், 2015

வாக்கு சீட்டிலும் ஸ்டிக்கர் ஓட்டுவோம்ல.....இனி அது மட்டும்தான் சாத்தியம்?

அரசுப் பணியில் இருந்தபோதே அம்மாதான் எனக்கு பிடித்த தலைவர் என்று பேட்டி கொடுக்கிறார் அந்த அதிகாரி. பணிக்காலம் முடிந்தபின் பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை பதவியே பரிசாக கிடைக்கிறது. அதுவும் காலாவதி ஆனபின் தோட்டத்துக்கே வரவழைத்து உறுப்பினர் அடையாள அட்டை கொடுத்து கட்சியில் சேர்த்துக் கொள்கிறார் தலைவி.
அப்படிப்பட்ட விசுவாசமான ஒரு உண்மைத் தொண்டன் ஒரு டீவி சேனலுக்கு அளித்த பேட்டியில் அரசை கடுமையாக விமர்சனம் செய்வதாக ஒரு தகவல் வருகிறது.
தலைவியின் இடத்தில் நீங்களோ நானோ இருந்தால் என்ன செய்வோம்? “அவருக்கு ஃபோன் போட்டு கொடு, என்னானு கேக்கிறேன்” என்பதுதானே குறைந்தபட்ச ரியாக்‌ஷனாக இருக்கும். “ஏன் அப்படி பேட்டி கொடுத்தார் என்று அவரிடம் விசாரித்து எனக்கு ஒரு ரிப்போர்ட் கொடுங்கள்” என்று கட்சியிலோ அரசிலோ நமது நம்பிக்கைக்கு உரிய நபரிடம் கேட்டுக் கொள்வோம், இல்லையா.அட்லீஸ்ட், “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் அந்த ஆள்? ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்புங்கள்” என்போம்.

“வண்டி அனுப்பி அவரை அழைத்துக் கொண்டு வாருங்கள். இன்னும் அரை மணி நேரத்தில் அவர் இங்கே இருக்க வேண்டும்” என்போம் கோபம் அதிகமாக இருந்தால்.
ஏனென்றால் அவரொன்றும் சாதாரண தொண்டன் அல்ல. தமிழக காவல் துறையின் முன்னாள் தலைவர். பணியில் இருந்தபோதும் சரி, அதன் பிறகும் சரி பலவகையிலும் கட்சிக்கும் தலைமைக்கும் அனுசரணையாக செயல்பட்டிருக்கிறார். சமூகத்தில் பிரபலமான ஒரு முக்கிய பிரமுகர். ஆனால் எந்த விசாரணைக்கும் இடமே தரவில்லை அம்மா.
“கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். கட்சிக்காரர்கள் அவரோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது” என்று நறுக்கென்று ஓர் அறிவிப்பு.
பேட்டி கொடுத்ததே அவர் அல்ல என்று சற்று நேரத்தில் உண்மை உறைக்கிறது. “அவரை நீக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது” என்று அடுத்த சில மணி நேரத்தில் இன்னொரு அறிவிப்பு.
என்ன ஆயிற்று புரட்சித் தலைவிக்கு?
பெயர் குளறுபடியால் ஆர்.நடராஜ் தலை உருண்ட சில மணி நேரங்களுக்கு முன்புதான் தமிழக அரசின் தலைமை செயலாளர் ஞானதேசிகன் பெயரில் 13 பக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
”செம்பரம்பாக்கம் ஏரியை முன்கூட்டியே திறந்துவிட தவறியதால்தான் சென்னை நகரம் வரலாறு காணாத பேரழிவை சந்தித்தது” என்ற தகவலை மறுப்பதுதான் தலைமை செயலாளர் அறிக்கையின் நோக்கம்.
ஏரி நீர் திறப்பு குறித்த சந்தேகங்கள் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பரவலாக பகிரப்பட்டன. நீர் செல்லும் பாதைகளில் வானளாவிய கட்டிடங்கள், கல்லூரிகள், அலுவலகங்கள், வீடுகள் கட்ட அனுமதித்தது அதிமுக அரசா திமுக அரசா என இரு கட்சிகளின் அனுதாபிகள் இடையே தொடங்கிய வார்த்தை யுத்தம், மெல்ல மெல்ல பலரின் கவனத்தையும் ஈர்த்ததால் தொழில் நுட்பம் அறிந்தவர்களின் கருத்துகளும் சமூக ஊடகங்களில் வெளியாக தொடங்கின.
சட்ட விரோதமாக நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பியதைவிட, ஏரி நீரை திடீரென அதிகமாக திறந்து விட்டதுதான் நகருக்குள் வெள்ளம் புக காரணம் என்ற வாதம் பொதுக் கருத்தாக உருவெடுத்தது அப்போதுதான்.
வெகுஜன ஊடகங்களிலும் அது செய்தியாக வெளியான பிறகும் அரசு தரப்பில் விளக்கமோ மறுப்போ வரவில்லை. அதிகாரபூர்வமாக ஒருமுகமான பதில் இல்லாத நிலையில், “விசாரணை கமிஷன் அமைப்பதன் மூலம்தான் ஏரி திறப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என்ற உண்மை வெளியே வரும்” என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
எதிர்க்கட்சிதானே, வேறு எப்படி பேசும் என்று மக்களும் ஸ்டாலின் கோரிக்கையை பத்தோடு பதினொன்றாக படித்து விட்டு போயிருப்பார்கள். விதி விடவில்லை. நத்தம் விசுவநாதன் என்ற அமைச்சரின் நாக்கில் அமர்ந்து நர்த்தனம் ஆடியது.
“இயற்கை பேரழிவுக்குகூட எவனாவது விசாரணை கமிஷன் கேட்பானா?” என்று எடுத்த எடுப்பிலேயே நக்கலின் உச்சிக்கு ஏறினார் நத்தம். உலகிலேயே அத்தகைய அறிவில்லாத ஒரே அரசியல்வாதி ஸ்டாலின்தான் என்று அடுக்கிக் கொண்டே போனார். குடித்துவிட்டு உளறுகிறார் ஸ்டாலின் என்று மட்டும்தான் சொல்லவில்லை, டாஸ்மாக் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அந்த அமைச்சர்.
ஒரு சாதாரண கோரிக்கைக்கு இப்படி ஒரு ரியாக்‌ஷனா, ரொம்ப ஓவராக தெரிகிறதே? என்ற எண்ணம் வேகமாக பரவியது. ஏரிகள் பொதுப்பணி துறையின் கீழ் வருபவை. அந்த துறைக்கு அமைச்சர் பன்னீர் செல்வம். அவர் வழக்கம்போல இருக்குமிடம் தெரியாமல் கைகட்டி வாய் புதைத்து மவுனம் காத்துவரும் நிலையில், ஏரிகளுக்கு சம்மந்தமே இல்லாத நத்தம் ஏன் இத்தனை சத்தம் போடுகிறார் என எல்லோரும் திகைத்தனர்.
டாக்டர் ராமதாஸ், இளங்கோவன், திருமாவளவன் என ஒவ்வொரு கட்சி தலைவராக வரிசையில் வந்தனர். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்த உண்மைகளை அறிய விசாரனை கமிஷன் தேவை என்ற குரல் வலுத்தது. ஆங்கில நாளேடுகளும் தேசிய டீவி சேனல்களும் விஷயத்தை கையில் எடுத்ததால் உலகெங்கும் விவாதப் பொருளாக மாறியது ஏரி திறப்பு விவகாரம். வெளிநாட்டு பத்திரிகைகள் பத்தி பத்தியாக எழுதி படங்கள், வரைபடங்கள் பிரசுரித்து விவரித்தன. திமுக தலைவர் கருணாநிதி கவர்னரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில்தான் எதையாவது சொல்லியாக வேண்டிய நிர்ப்பந்தம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது. தலைமை செயலாளர் பெயரில் அறிக்கையும் வந்தது. 13 பக்கமும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. டெல்லியில் இருந்து வரும் விசாரணைகளுக்கு விளக்கம் சொல்லும் பாணியிலும், நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளிக்கும் ரீதியிலும் அமைந்திருந்தன அறிக்கையின் வாசகங்கள்.
அரசியல் தலைவர்கள் ஞானதேசிகனின் அரிக்கையை அக்குவேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டு விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். பொய்கள், அரை உண்மைகள், சம்மந்தம் இல்லாத புள்ளி விவரங்கள், குமாரசாமி பாணியிலான கூட்டல் கழித்தல் குளறுபடிகள், தவறுகள், முரண்பாடுகள் அனைத்தும் ஞானதேசிகன் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தலைவர்கள் கூறுகின்றனர். ராமதாசும் ஸ்டாலினும் அந்த அறிக்கையின் வாசகங்களை பாயின்ட் பை பாயின்ட் மறுதலித்து வீசுகின்றனர்.
வழக்கத்தை விட 90 சதவீதம் கூடுதலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்ததை அனைவரும் சுட்டிக் காட்டுகின்றனர். இப்படி முன்கூட்டியே தகவல் தெரியவரும் நிலையில், மழைக்கு முன்பாக ஏரியின் நீர் மட்டத்தை குறைத்து, மழை நீரை ஏற்றுக் கொள்ள ஏரியை தயார் செய்ய வேண்டியது அதிகாரிகள் கடமை. நீர் மட்டத்தை எப்படி குறைப்பது? கொஞ்சமாக திறந்துவிட்டால் போதும்.
”செம்பரம்பாக்கம் ஏரியை நிர்வகிக்கும் பொறியாளர்கள் அவ்வாறு திறந்துவிட்டு ஏரியின் நீர் மட்டத்தை குறைக்க அனுமதி தாருங்கள் என்று நவம்பர் 26 ஆம் தேதி பொதுப்பணித்துறை செயலாளருக்கு தகவல் அனுப்பினர். அவர் அந்த தகவலை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி ஒப்புதல் கேட்டுள்ளார். அவர் தன் பங்குக்கு அந்த தகவலை முதல்வருக்கு அனுப்பியுள்ளார். 5 நாட்களாகியும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதலோ மறுப்போ எதுவும் வரவில்லை. இதனால் ஏரி பொறுப்பாளர்களான அதிகாரிகள் கையறு நிலையில் தவித்தனர். சென்னையை காப்பாற்ற முடியாமல் போனது” என்பது பெரிய ஊடகங்கள் சுயமாக நடத்திய விசாரணையில் ஊர்ஜிதமான தகவல்கள்.
இதற்கு பதிலளித்துள்ள ஞானதேசிகன், ”டிசம்பர் 1ஆம் தேதி 50 செ.மீ. மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கவில்லை; அதனால் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
இது கலப்படம் இல்லாத பொய். மழை எச்சரிக்கை பகிரங்கமாக அனைத்து ஊடகங்களிலும் வானிலை மைய இணைய தளங்களிலும் பதிவிடப்பட்ட உண்மை. வானிலை மையம் முன்னெச்சரிக்கை செய்யவில்லை என  கூறுவது அபாண்டம். இந்த மாதிரி பயங்கரமான மழை பெய்து சென்னை மிதக்க இருப்பதால் தப்பி விடுங்கள் என்று நம்ம அடையாளம் ஃபேஸ்புக் பக்கத்தில்கூட நவம்பர் 26 ஆம் தேதியே ஒரு பதிவு போடப்பட்டதை இங்கே சொல்லியாக வேண்டும். .  .
மிகவும் தாமதமாக டிசம்பர் 1 ஆம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் அளவு  குறித்து ஞானதேசிகன் தந்துள்ள தகவல்களும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. காலை 10 மணிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதமும், 12 மணிக்கு 12 ஆயிரம் கன அடி வீதமும், 2 மணிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டதாக சொல்கிறார். அடுத்த பக்கத்திலேயே, காலை 11.20 மணிக்கு 7500 கனஅடி வீதமும், 1.32 மணிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக சென்னை கலெக்டர் கூறியுள்ளதாக மேற்கோள் காட்டுகிறார். பொதுப்பணி துறையும் வருவாய் துறையும் தந்த இந்த இரு புள்ளி விவரங்களில் எது நிஜம்?
அன்று மாலை 6 மணிக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 29,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு, அடுத்த நாள் மாலை 3 மணி வரை அதே அளவு பராமரிக்கப்பட்டதாகவும் ஞானதேசிகன் கூறுகிறார். ஆனால் முதல் நாள் இரவே நீரின் அளவு 33,500 கன அடியாக உயர்த்தப்பட்டதாக பொதுப்பணி துறை தெரிவித்த தகவல் ஏற்கனவே ஊடகங்களில்   வெளியாகி விட்டன. அவ்வளவு திறந்து விட்டும் பலன் இல்லாமல் ஏரி நிரம்பி வழிய தொடங்கிவிட்டதாக அந்த துறையின் உயர் அதிகாரி பேட்டி அளித்திருந்தார். இதெல்லாம் ஞானதேசிகன் அறிக்கையில் மறைக்கப்பட்டுள்ளன.
வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் அடையாறில் வெள்ளம் வந்தால்தான் சைதாப்பேட்டை பாலம்,; ஈக்காட்டுதாங்கல் மேம்பாலம் ஆகியவை நீரில் மூழ்கும். அப்படி வடிவமைத்து கட்டியவை அந்த பாலங்கள். ஆகவே செம்பரம்பாக்கம் ஏரி தவிர வேறு சில வழிகளிலும்  அடையாற்றுக்கு தண்ணீர் வந்ததாக ஞானதேசிகன் சொல்வதை ஒப்புக் கொண்டாலும், அதில் வந்த லட்சம் கனஅடியில் பெரும்பகுதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறியதுதான் என்று ராமதாஸ்  கூறுவது சரியாகவே தெரிகிறது.
ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு எவரிடமும் ஏரி அதிகாரிகள் அனுமதி பெற தேவையே இல்லை என்று ஞானதேசிகன் சொல்லி இருப்பதுதான் கோட்டையில் வேலை செய்பவர்களையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளது.
டெக்னிகலாக அவர் சொல்வது சரிதான். ஸ்பாட்டில் இருக்கும் பொரியாலருக்கு தெரியாததா தலைமை செயலாலருக்கும் முதலமைச்சருக்கும் தெரிந்துவிட போகிறது? ஆனால், நடைமுறை அப்படி இல்லையே. தமிழகத்தில் எந்தக் கோடியில் எந்த ஏரி, அணை, கால்வாயில் நீர் திறப்பதாக இருந்தாலும் அது முதல்வர் ஆணையின்படி திறந்து விடப்படுவதாகத்தான் நாலரை ஆண்டுகளாக நாம் அறிந்திருக்கிறோம்.
பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மீறி அவரது கட்சியில் அணுவும், அசையாது என்பது எந்தளவு உண்மையோ, அதே போல முதல்வர் ஜெயலலிதா உத்தரவு இல்லாமல் தமிழக அரசு நிர்வாகத்தில் ஒரு காகிதம்கூட அசையாது என்பது நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கும் உண்மை.; ஆகவே, அம்மாவின் ஆணைக்காக ஏரி பொறியாளர் காத்திருந்தார் என்பது கேள்விக்கே இடமில்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய நடைமுறையாகத்தான் தெரிகிறது.
ஒரு வாதத்துக்காக இதை உண்மை என ஏற்றுக் கொண்டால். அதை 5 நாட்கள் காத்திருந்து அவர் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? தலைமை செயலாளராலேயே முதல்வரை உடனடியாக தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு இங்கே அரசு நிர்வாகம் நடக்கிறது என்று இணைய தளங்களிலும் வெளிமாநில ஊடகங்களிலும் எழுதுவதை இதுவரை யாரும் மறுக்கவில்லையே.
செம்பரம்பாக்கம் ஏரியின் அதிகாரி முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிட அனுமதி கேட்டு பொதுப்பணி துறை செயலருக்கு தகவல் அனுப்பினாரா, இல்லையா?
அந்த தகவலை தலைமைச் செயலாளருக்கு பொ.ப.து செயலாளர் அனுப்பி வைத்தாரா இல்லையா?
தலைமை செயலாளர் அதை முதல்வருக்கு அனுப்பினார இல்லையா?
இந்த அதிமுக்கியமான கேள்விகளுக்கு ஞானதேசிகன் அறிக்கையில் பதில் இல்லை. அது தெரியாதவரை உண்மைகள் வெளிவராது. எத்தனை கன அடி தண்ணீருக்குள் போட்டு அமுக்கினாலும் அந்த உண்மைகள் அழிந்துவிட போவதில்லை. வெள்ளம் வடியும்போது தானாக மேலே வரும். சம்மந்தப்பட்டவர்கள் அப்போது பதில் சொல்லியே ஆகவேண்டும்.
பெயரிலேயே ஞானம் கொண்ட தலைமை செயலாளருக்கு இது தெரியாமல் இருக்குமா? தெரிந்தும் அப்படி ஒரு அறிக்கை வெளியிடுகிறார் என்றால் என்ன காரணம்?
நடராஜை நீக்கியதாக ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட என்ன காரணமோ அதுதான் இதற்கும்.
பயம். குழப்பம். என்ன செய்வது என தெரியாத தவிப்பு.
ஏன் என்றால் இந்த அரசு இத்தகைய ஒரு சிக்கலில் இதுவரை மாட்டியது இல்லை. எதிர்க்கட்சிகள் எப்போதுமே இருப்பவை. புதிதாக முளைக்கவில்லை. அவர்களின் எதிர்ப்புகளும் அப்படியே. ஆனால் பொதுமக்களின் அதிருப்தியும் கோபமமும் ஆவேசமும் எல்லாத் திசையிலும் சூறாவளியாக எழுந்து கொண்டிருக்கிறது. புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தின் பாதிப்புகளில் இருந்து மீள அவகாசம் தேவைப்படுவதால் அதிகமாக ஆத்திரம் வெளிப்படவில்லை.
குப்புற தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக எங்கிருந்தோ யாரோ முகம் தெரியாத நல்லவர்கள் கொடுத்தனுப்பிய நிவாரண பொருட்களை பறித்து அவற்றின் மீது அம்மா ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பிய அராஜகம்தான் வண்டியை குடை சாய்த்த கடைசி மயிலிறகாக மாறிப்போனது.
சர்வதேச அரங்குகளில் விமர்சனத்துக்கு உள்ளான அந்த நிகழ்வு ஏதோ ஒரு விபத்தாக இருக்கும் என சமாதானம் தேடிய அபிமானிகள்கூட அடுத்தடுத்து போடப்படும் சேம்சைட் கோல்களை பார்த்து திகைத்து நிற்கிறார்கள்.
மக்களுக்கும் இந்த அரசுக்கும் இப்போதிருக்கும் ஒரே ஒற்றுமை: இதற்கு மேல் இழப்பதற்கு எதுவுமில்லை.
கதிர்
நன்றி : நம்ம அடையாளம்

கருத்துகள் இல்லை: