செவ்வாய், 22 டிசம்பர், 2015

அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என பிரதமர் சூசகமாக தெரிவித்துள்ளார்: சீதாரம் யெச்சூரி

புதுடெல்லி, ஊழல் புகாரில் சிக்கியுள்ள அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என்று பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்துள்ளார் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகளில் அருண் ஜெட்லிக்கு தொடர்பு இருப்பதாகவும் இதன் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்று இவ்விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ஹவாலா மோசடி வழக்கில் இருந்து குற்றமற்றவராக அத்வானி வெளிவந்தது போல, அருண் ஜெட்லியும் இந்த வழக்கில் இருந்து விடுபடுவார் என்று பேசியிருந்தார். இந்த நிலையில், இது குறித்து இன்று பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீதாராம் யெச்சூரி கூறியதாவது:- “அத்வானி பெயருடன் இணைத்து பேசியதன் மூலம், அருண் ஜேட்லி ராஜினாமா செய்து புகார்களிலிருந்து விடுபட்டு மீண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி சூசகமாகத் தெரிவிப்பதாகவே நான் நினைக்கிறேன். 


அதாவது அத்வானி ஹவாலா மோசடிப் புகார் எழுந்த போது ராஜினாமா செய்தார், அது போலவே ஜேட்லியும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரதமர் கூறியதாகவே நான் கருதுகிறேன். திடீரென அத்வானி பெயரை நினைவில் கொண்டு வந்து பிரதமர் மோடி பேசியதற்கு இதுவே காரணம். இதனை ஜேட்லி புரிந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கற்கள் இறக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து கருத்து தெரிவித்த யெச்சூரி, அங்கு மேற்கொண்டு எந்த  செயலிலும் இறங்க கூடாது என ஒருமித்த உடன்பாடு உள்ளது. இதை மீற அவர்கள் விரும்பினால், சட்டம் தன் கடமையை செய்யும்” என்றார். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: