செவ்வாய், 22 டிசம்பர், 2015

16 வயது சிறுவனையும் தண்டிக்க சட்டம்...டெல்லி மேல்–சபையில் இன்று விவாதம்

புதுடெல்லி கொடிய குற்றங்களுக்காக 16 வயது சிறுவனையும் விசாரிப்பதற்கான திருத்தத்துடன் கூடிய இளம் குற்றவாளிகள் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு குவிகிறது. டெல்லி மேல்–சபையில் அம்மசோதா இன்று விவாதத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரிக்கலாம் டெல்லியில் ஓடும் பஸ்சில் இளம்பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கின் இளம் குற்றவாளி விடுதலை செய்யப்பட்ட நிலையில், இளம் குற்றவாளிகள் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, டெல்லி மேல்–சபையில் இன்னும் நிறைவேறாமல் உள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள், கொடிய குற்றங்களில் ஈடுபடும்போது, அவர்களை வயது வந்தவர்களாக கருதி விசாரணை நடத்தலாம்.

நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடர், நாளையுடன் முடிவடைவதால், அதற்குள் இம்மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் நேற்று கோரிக்கை விடுத்தன.
திரிணாமுல் காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறியதாவது:–
இளம் குற்றவாளிகள் திருத்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாடே விரும்புகிறது. அம்மசோதாவை கூடிய விரைவில் மத்திய அரசு விவாதத்துக்கு கொண்டுவர வேண்டும். அதன் மீது நான்கு, ஐந்து மணி நேரம் விவாதம் நடத்தி விட்டு, புதன்கிழமைக்குள் நிறைவேற்ற வேண்டும்.
இதில் எந்த தாமதமும் கூடாது. கட்சி வேறுபாடுகளை கடந்து, எல்லா கட்சிகளும் இம்மசோதாவை ஆதரிக்க வேண்டும். காங்கிரசும் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் சமாஜ்வாடி எம்.பி. ராம்கோபால் யாதவ் கூறுகையில், ‘டெல்லி மேல்–சபையில் இந்த மசோதா 3 தடவை பட்டியலிடப்பட்டது. ஆனால், அரசியல் வேறுபாடு காரணமாக, நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. அதை நிறைவேற்ற விடாதவர்கள்தான், கற்பழிப்பு குற்றவாளி விடுதலையானதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அந்த மசோதா எப்போது தாக்கலானாலும் நிறைவேற்றப்படும்’ என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் பிருந்தா கரத், ‘இந்த சட்ட திருத்தம் நிறைவேறினாலும், இதை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது. ஆகவே, கற்பழிப்பு வழக்கில் விடுதலையான இளம் குற்றவாளியை ஒன்றும் செய்ய முடியாது’ என்றார்.
இன்று விவாதம் இளம் குற்றவாளிகள் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசும் ஆர்வமாக உள்ளது. டெல்லி மேல்–சபையில் இன்று அம்மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:–
இந்த மசோதாவை டெல்லி மேல்–சபையில் 3 தடவை பட்டியலிட்டோம். ஆனால், காங்கிரஸ் கட்சியின் அமளியால், சபை செயல்பட முடியவில்லை.
இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஆர்வமாகவும், தயாராகவும் உள்ளது. இன்றே (நேற்று) கூடுதல் நேரம் ஒதுக்கி, மசோதாவை நிறைவேற்றுவதற்கும் தயார். இதை காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உமா பாரதி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி உமா பாரதி, இந்த மசோதாவை ஆதரிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வேண்டுகோள் விடுக்கப்போவதாக கூறியுள்ளார். dailythanthi.com

கருத்துகள் இல்லை: