வியாழன், 24 டிசம்பர், 2015

அமெரிக்காவுக்கு வரும் முஸ்லிம் பயணிகள் தடுக்கப்படுகின்றனர்? லண்டனில் முஸ்லிம் குடும்பம்...

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்லும் விமானத்தில் ஏறும் சமயத்தில் அவர்கள் தமது பயணத்தை தொடர்வதற்குத் திடீரென தடை விதிக்கப்பட்டது ஏன் என்று அமெரிக்காவிடம் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் விளக்கம் கோர வேண்டும் என்று பிரிட்டனின் நாடளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீசி கோரியுள்ளார்.
இந்த குறிப்பிட்ட குடும்பம் அவரது தொகுதியைச்சேர்ந்தவர்கள் என்பதால் அவர் இந்த பிரச்சனையை எழுப்பியுள்ளார்.
வால்தாம்ஸ்டோ தொகுதியில் வசிக்கும் குடும்பத்தைச்சேர்ந்த 11 பேர் அமெரிக்காவின் டிஸ்னி லாண்டில் தங்களது விடுமுறையைக் கழிக்க திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் டிசம்பர் 15ஆம் தேதியன்று அவர்களது பயணம் கடைசி நிமிடம் இடைநிறுத்தப்பட்டது.

தங்களின் பயணத்துக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறித்த தெளிவான காரணத்தை அமெரிக்க அதிகாரிகள் அளிக்க மறுத்துவிட்டதாக அந்த குடும்பத்தைச்சேர்ந்த முஹமது ஸாஹிட் மஹ்மூத் கூறினார்.
"அமெரிக்கத் தூதரகம் தெளிவான காரணத்தை தெரிவிக்கவில்லை"
இதுகுறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு பிரதமர் டேவிட் காமரன் பதிலளிப்பார் என்று அவரது அலுவலகத்திலிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது.

பிரிட்டனைச் சேர்ந்த முஸ்லிம்கள் தகுந்த விளக்கம் தரப்படாமல் அமெரிக்கவுக்கு செல்லத் தடை விதிப்பது ஒரு வளர்ந்து வரும் பிரச்சனையாக மாறிவருவது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் எனக்கோரி நாடளுமன்ற உறுப்பினர் கிரீஸி கடிதம் எழுதியுள்ளார்.
தான் எவ்வளவோ முயன்றும் இதற்கான உரிய பதிலை அமெரிக்க தூதரகத்திடம் இருந்து தம்மால் பெற முடியவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பதைச்சேர்ந்த மஹ்மூத் கூறும்போது, “நானும் எனது சகோதரர் மற்றும் எங்கள் குழந்தைகள் என 11 பேர் கொண்ட குடும்பத்தினர் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள எங்கள் உறவினர் இல்லத்தில் தங்கி அங்குள்ள பொழுதுபோக்கு பூங்காக்களை பார்த்து ரசிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் கேட்விக் விமான நிலையத்தில் பூர்வாங்க சோதனைகள் முடிக்கப் பெற்று, விமானம் புறப்படும் தளத்தின் அருகே இங்கிலாந்து எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், வாஷிங்க்டன் டிசியில் இருந்து அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிகாரிகள் எங்கள் குடும்பம் அந்த விமானத்தில் பயணிக்க அனுமதி இல்லை என்று கூறியதாகத் தெரிவித்து எங்கள் பயணத்தை தடை செய்தனர்," என்று தெரிவித்தார்.
பிரிட்டனில் அமைதியாக வாழ தம் குழந்தைகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வுகள் குறித்து பேசுவதற்காக பள்ளிகளில் இருந்து தனக்கு அழைப்புகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கும் மஹ்மூத், தனக்கு விமானத்தில் நடந்த செயல் "கண்டிப்பாக பாரபட்சமான பாகுபாட்டின் அடையாளமாக நடந்த ஒரு சம்பவம்" என்று தெரிவித்தார்.

தனக்குத் தாடி இருப்பதாலும் இஸ்லாமிய பாரம்பரிய உடையை சில சமயங்களில் தான் அணிவதாலும் விமான நிலையங்களில் தன்னைத் தடுத்து நிறுத்தி கேள்விகள் கேட்கப்படுவது வழக்கமே என்று கூறிய அவர் அது விமான நிலைய விதிகளில் ஒன்று என்று தனக்கு புரிவதாகவும் கூறினார்.
"விமான கட்டணம் ஒன்பதாயிரம் ஸ்டெர்லிங் பவுண்ட்கள் திரும்பத்தரப்படவில்லை"
"ஆசிய அல்லது இஸ்லாமிய தோற்றத்தில் நாங்கள் இருப்பதினால் மட்டுமே எங்களை அங்கே விமான நிலைய வரிசையிலிருந்து தனிமைப்படுத்தியது தர்மசங்கடமாக இருந்தது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இதை ஏற்றுக்கொள்வது இன்னமும் கடினமாக இருந்தது", என்றார் மஹ்மூத்.
மேலும் இந்த பயணத்திற்காக அவர் செலவு செய்த ஒன்பதாயிரம் ஸ்டெர்லிங் பவுண்டுகள் பணமும் அவருக்குத் திருப்பி அளிக்கப்பட மாட்டாது என அந்த குறிப்பிட்ட விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாகவும், கேட்விக் விமான நிலையத்தில்இருந்து வெளியே வழிநடத்தப்பட்ட போது தாங்கள் வாங்கி இருந்த வரிவிலக்கப்பட்ட பொருட்களைக்கூட திருப்பி அளிக்கும்படி விமான நிலைய அதிகாரிகள் தங்களை கட்டாயப்படுத்தி திருப்பிக்கொடுக்கச் செய்ததாகவும் அவர் கூறினார்.
இங்கிலாந்து அரசு இந்த விடயத்தில் நிச்சயம் விசாரணை செய்யும் என்றும் எனினும் இதில் இறுதி முடிவு அமெரிக்க அதிகாரிகளின் கையில் தான் உள்ளது என்றும் குடிவரவு அமைச்சர் ஜேம்ஸ் ஃபுரோக்கன்ஷேர் கூறியுள்ளார்.  bbc.tamil.com

கருத்துகள் இல்லை: