செவ்வாய், 22 டிசம்பர், 2015

அனுஷ்கா சருமா :100 கோடி வசூலை குறி வைப்பதால் நல்ல படங்களே வருவதில்லை....

அழகான நடிகை அனுஷ்கா சருமா கோபத்தில் கொதிக்கிறார். திரையுலகில் நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையே பெரும் பாகுபாடு
காட்டப்படுகிறது, பெண்கள் வெறும் அழகுப் பொம்மைகளாகத்தான் நடத்தப்படுகின்றனர் என்பது அனுஷ்காவின் ஆத்திரத்துக்குக் காரணம். ‘‘சினிமாவில் பெண்கள் மிகவும் அழகாக இருக்க வேண்டும். நாயகனை ஈர்க்கக்கூடிய அளவுக்கு அவர்கள் தேவதை போன்று தோன்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்கள் மட்டும் தங்கள் வயது தாண்டியும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்க, ஹீரோயின் மட்டும் இளம்பெண்ணாகவே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? இதில் ஒரு பாலியல் சார்ந்த பார்வை இருக்கிறது. நடிகைகள் தங்களின் சில அங்கங்களைக் காட்டுவது, அழகாக நடனமாடுவது தவிர நமது சினிமாக்களில் அவர்களுக்கு என்ன இடம் இருக்கிறது? இதுபோன்ற படங்களை பெரிய நடிகர்கள் ஆதரிப்பதுதான் இம்மாதிரியான படங்கள் வெளியாகக் காரணம்’’  என்று சீறித் தள்ளுகிறார், அனுஷ்கா.


தனது பெற்றோர், தனக்கும், தன்னுடைய சகோதரன் கர்னேஷுக்கும் இடையே  எந்தப்  பாகுபாடும்     காட்டியதில்லை என்று சொல்லும் அனுஷ்கா, திரையுலகில் நுழைந்தபோது அந்த வேறுபாட்டை உணர்ந்ததாகக் கூறுகிறார்.

‘‘தைரியமுள்ள பெண்ணை சினிமா உலகில் யாருக்கும் பிடிப்பதில்லை. இந்தியாவில் எல்லோரது ரசனையும் சாதாரணமாக உள்ளதால்தான் இங்கே பலரால் நட்சத்திரங்களாக இருக்க முடிகிறது. அந்தவகையில் அவர்களெல்லாம்  அதிர்ஷ்டசாலிகள் என்று என் சக திரை நண்பர் ஒருவரிடம் ஒருமுறை கூறினேன். அது உண்மை’’ என்கிறார் அனுஷ்கா கிண்டலாக.

திரையுலகில் நாம் நமக்குத் தகுதியானதைக் கேட்டாலே திமிர் பிடித்தவர்களாக பெயர் சூட்டப்படுகிறோம் என்றும் அனுஷ்கா சொல்கிறார்.

‘‘நடிகைகளான நாங்கள் ஒன்றும் முட்டாள்களோ, ஒன்றும் தெரியாதவர்களோ அல்ல. எங்களுக்கும் மனம் இருக்கிறது, அறிவு இருக்கிறது. நாங்கள் கூறும் ஆலோசனைக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.’’

ஒரு படத்தில் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்றாலே அதை ஹீரோக்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்று கூறும் அனுஷ்கா, சம்பள விஷயத்திலும் பெரும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்கிறார்.

‘‘அதென்னவோ ஆண்களுக்குத்தான் அதிக செலவு இருக்கிறது, அவர்கள்தான் ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது போல, பெண்கள் எல்லாம் மற்றவர்கள் சம்பாத்தியத்தில்தான் வாழ்கிறார்கள் என்பதைப் போல சம்பள விஷயமும் இருக்கிறது.

இப்போதெல்லாம் படங்கள் 100 கோடி வசூலைக் குவிக்க வேண்டும் என்று நிறைய நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அது, இந்தி திரைப்பட உலகையே கெடுத்து வைத்திருக்கிறது. நடிகர்களும் புதிதாக ‘ரிஸ்க்’ எடுக்கத் தயங்குகிறார்கள். நடிகைகளிடம் பெரிதாக எதுவும் எதிர்பார்க்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் ‘ரிஸ்க்’ எடுப்பது எளிது’’ என்று பதில் சொல்கிறார், அனுஷ்கா.

கடைசியாக, இவரையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியையும் விரட்டி வரும் கிசுகிசுக்கள் பற்றிக் கேட்டால்,

‘‘நானும் விராட்டும் நெருக்கமான உறவில் இருக்கிறோம். விராட் கிரிக்கெட் ஆடுவதை நான் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பு கிறார், அவர் ஆடுவதை நானும் பார்க்க விரும்புகிறேன். அவ்வளவுதான். இதில் மற்றவர்கள் சொல்வதைப் பற்றியெல்லாம் நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? அவர் சரியாக ஆடவில்லை என்றால், அதற்குக் காரணம் நான்தான் என்று கூறுவதெல்லாம் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை!’’ –வெடித்து முடிக்கிறார், அனுஷ்கா சருமா.

கருத்துகள் இல்லை: