இந்தியா மட்டும்தான் விசா பெறுவதற்காக வர அனுமதி அளிக்கிறது. அரபு நாடுகள் தங்கள் கதவுகளை மூடிவிட்டன. சிரியாவில் கடும் யுத்தம்
நடந்துகொண்டிருக்கும் நிலையில், சிரிய நாட்டவர்கள் ஜெர்மனிக்குச்
செல்வதற்கு விசா பெறுவதற்காக தமிழகத்தின் சென்னைக்கு வந்துசெல்வது சமீப
நாட்களாக அதிகரித்துள்ளது.
சிரியாவில் போர் தீவிரமடைந்த பின்னர்,
அங்கிருந்து தப்பி கடல் வழியாக ஜெர்மனி சென்று, அகதித் தஞ்சம் பெற்றுள்ள
ஆண்களின் குடும்பத்தினரே தற்போது விசா பெறுவதற்காக சென்னையில்
காத்திருக்கின்றனர்.சென்னையில் உள்ள ஜெர்மானிய தூதரகத்தில் "குடும்பத்தினருடன் இணைவதற்கான" விசாவுக்கு விண்ணப்பித்திருக்கும் இவர்களில் யாரும் தற்போது வெளிப்படையாக பேச விரும்பவில்லை.
இந்த நிலையில், அவர்களுக்காக மொழிபெயர்ப்பாளராக உதவிவரும் சிரியாவைச் சேர்ந்த அகமது ஹுசைன் என்பவர் பிபிசியிடம் பேசினார்.
பெரும்பாலான அரபு நாடுகள் தங்களை அனுமதிக்காத நிலையில், இந்தியாவில் இந்த அனுமதி எளிதில் கிடைப்பதால் அவர்கள் இங்கு வருவதாகக் கூறுகிறார் அஹ்மத்.
"இந்தியா மட்டும்தான் விசா பெறுவதற்காக வர அனுமதி அளிக்கிறது. அரபு நாடுகள் தங்கள் கதவுகளை மூடிவிட்டன. இரண்டு அரபு நாடுகள் மட்டுமே அங்கிருந்து விசாவுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளிக்கின்றன. ஒன்று ஜோர்தன் மற்றொன்று லெபனான். ஆனால், அங்கு நேர்முகச் சந்திப்பிற்கு நேரம் கிடைக்கவே ஒரு வருடம் ஆகிவிடுகிறது'' என்கிறார் அஹ்மத்.
தற்போது, சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 11 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 35 பேர் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். இவர்களது குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜெர்மனிக்குச் சென்றுவிட்டனர்.
'சென்னையில் செலவு குறைவு'
இந்தியாவில் தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய இடங்களிலும் ஜெர்மனியத் தூதரகங்கள் இருந்தாலும் செலவு குறைவு என்பதால் இவர்கள் சென்னையைத் தேர்வுசெய்ததாகச் சொல்கிறார் அஹ்மத்.
"இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மிகவும் எழைகள். அவர்கள் வீடுகள், பொருட்களை விற்றுத்தான் இங்கே வந்துசேர்ந்திருக்கிறார்கள்" என்கிறார் அஹ்மத்.
சென்னையிலிருந்து ஜெர்மனிக்கான விமானப் போக்குவரத்து வசதியாக இருப்பதும் இவர்கள் சென்னையைத் தேர்வு செய்வதற்கான ஒரு காரணமாக இருக்கிறது.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக இங்கிருக்கும் ஜெர்மனியத் தூதரகம் சில நாட்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டதால், பல சிரியக் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அஹமது சொல்கிறார்.
இங்கே வரும் சிரியர்கள் பெரும்பாலானவர்களுக்கு அரபு மொழியைத் தவிர பிற மொழிகள் தெரியாது. ஆகவே அஹமது போன்றவர்களே மொழிபெயர்ப்பாளர்களாக இருந்து உதவுகின்றனர்.
இந்தியாவைத் தவிர, மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் இவர்கள் ஜெர்மனியை சென்றடைகின்றனர்.
தங்களிடமிருக்கும் பணம் குறைந்துகொண்டேவரும் நிலையில் விரைவில் தங்களுக்கான விசாவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் இந்த சிரியர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக