புதன், 28 மே, 2014

திமுகவின் வன்னியர் Belt ஒட்டு வங்கியில் பெரும் சரிவு ! ஸ்டாலின் வன்னிய விரோதம் ? கடிதம் எழுப்பும் கேள்வி?

சமீப காலமாக, தி.மு.க.,வில் வன்னியர்கள் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டு வருகின்றனர். அதனால் தான், வட மாவட்டங்களில் கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதை சரி செய்யவில்லை என்றால், கட்சியை வட மாவட்டங்களில் தூக்கி நிறுத்த முடியாது' என, வட மாவட்டத்தைச் சேர்ந்த கட்சித் தொண்டர் ஒருவர், கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதம், தி.மு.க., தலைமையை நிறைய சிந்திக்க வைத்திருப்பதாக, தி.மு.க., வட்டாரங்களில் தகவல் பரவி இருக்கிறது.<இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது:
அந்த கடிதங்களில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்களை படித்து விட்டு, கட்சியின் தலைவர் கருணாநிதி, வெகுவாக ஈர்க்கப்பட்டு விட்டார். கடிதத்தை உதவியாளர்களிடம் கொடுத்து, கட்சியின் முக்கியத் தலைவர்கள் வந்தால், படித்துப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்.


பிரதான எதிர்க்கட்சி:
கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விவரம் இது தான் - 1952ல் தி.மு.க., ஒரு சமுதாய இயக்கமாகத் தான் இருந்தது. ஆனால், அப்போது, வன்னிய இனத்தவர்கள் மத்தியில், இரு பெரும் தலைவர்கள் பிரபலமானவர்களாக இருந்தனர். உழைப்பாளர் தொழிலாளர் கட்சியின் ராமசாமி படையாச்சியும், பொதுநல கட்சியின் மாணிக்க வேல் நாயக்கரும் தான், அந்த இருவரும். 1952ல், நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், இரண்டு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. அதில் உழைப்பாளர் தொழிலாளர் கட்சி சார்பில், 19 பேர் வெற்றி பெற்றனர். பொதுநல கட்சி சார்பில், 7 பேர் வெற்றி பெற்றனர். இரண்டு கட்சிகளின் சார்பிலும், மொத்தமாக, 26 வன்னியர்கள் சட்டசபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதன்பின், 1957ல், தி.மு.க., முதன்முதலில் தமிழக சட்டசபைக்கு போட்டியிட்டது. 15 இடங்களில் வெற்றி பெற்றனர். அதில், 13 பேர் வன்னியர். பெரும்பான்மையாக வாழும், வட மாவட்டங்களில் இருந்து தேர்வாகினர். அடுத்து, 1962ல் நடந்த சட்டசபை தேர்தலில், 50 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதில், 35 இடங்கள் வட மாவட்டங்களைச் சேர்ந்தது.

கட்சி இனி தேறாது...
இதனால், தி.மு.க.,வின் ஏற்றத்துக்கு, வன்னியர்கள் பெரிய அளவில் உதவியது என்பதை, யாரும் மறுக்க முடியாது. அதேபோல், 1977ல் நடந்த சட்டசபை தேர்தலில் போது, தி.மு.க., மீது சர்க்காரியா கமிஷன் உட்பட, பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. அதனால், கட்சி படுதோல்வி அடையும் என்பதோடு, கட்சி இனி தேறாது என, பலரும் ஆருடம் சொன்னார்கள். அந்த தேர்தலில், தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் போட்டியிட்டன. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், தி.மு.க., 48 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பெரும்பாலான இடங்கள், வன்னியர்கள் அதிகமாக வாழும், வட மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகள். இப்படி, தி.மு.க.,வுக்கு, எப்போதெல்லாம் இறக்கம் வரக்கூடிய சூழ்நிலை இருந்ததோ, அப்போது கைகொடுத்து உதவியது, வன்னிய தொகுதிகள் தான். ஆனால், அந்த பகுதிகளிலும், தி.மு.க., தற்போதைய லோக்சபா தேர்தலில், பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது.அதற்கு காரணம், கட்சியின் அடுத்த தலைவராக வளர்ந்து கொண்டிருக்கும், ஸ்டாலின் தான். அவர், கட்சியில் தொடர்ந்து வன்னியர்களையும், வன்னிய இன தலைவர்களையும் புறக்கணித்து வருகிறார். தமிழகத்தின் பெரிய இனமான வன்னியர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு, அ.தி.மு.க.,வில் எட்டு பேர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தி.மு.க.,வில் நால்வருக்கு தான், வாய்ப்பு வழங்கப்பட்டது.

குறிப்பாக, கட்சியின் பிரதான தளபதிகளில் ஒருவராக இருந்து செயல்பட்ட, சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தை, உயிருடன் இருக்கும் போதே ஓரம் கட்டினார், ஸ்டாலின். அவர் இறந்த பின், அவருடைய குடும்பத்தினரையும் < ஆதரவாளர்களையும் ஓரம் கட்டினார். உச்சக்கட்டமாக, சேலம் தொகுதியில் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினருக்கு, போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என்பதால், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத, உமாராணி என்ற பெண்மணிக்கு, 'சீட்' வழங்கினார். கட்சி தோல்வியடைந்தது.

விரோதியாக...
அதாவது, காலம் காலமாக தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து வந்த வன்னியர்கள், இந்த முறை மாற்றி ஓட்டளித்து விட்டனர். அதற்கு காரணம், கட்சியில் வன்னிய இனத்தின் விரோதியாக பார்க்கப்படும், விடுதலை சிறுத்தைகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டதோடு, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின், சிறுத்தைகள் முரண்டு பிடித்ததால், கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்கியது, வன்னியர்கள் மத்தியில், தி.மு.க., மீது கோபத்தை ஏற்படுத்தியது. தி.மு.க., தலைமை பலவீனமாக இருப்பதை உணர்ந்தனர். அதனால், மாற்றி ஓட்டுப் போட்டுவிட்டனர்.

கவுரவமான தோல்வி
ஏற்கனவே, சங்கரன் கோவில் இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிட்டு 'டிபாசிட்' இழந்தது. ஆனால், ஏற்காடு இடைத்தேர்தலில், தி.மு.க., வன்னியர்கள் ஓட்டு வங்கியை கைப்பற்றி, கூடுதல் ஓட்டுகளை வாங்கியது. தோல்வி என்றாலும், கவுரவமான தோல்வி தான். இப்படியிருந்த வன்னிய மக்களுக்கு, தி.மு.க.,வில் முக்கியத்துவம் இல்லை.அதனால், வட மாவட்டங்களில் இனியாவது கட்சி தேற வேண்டும் என்றால், கட்சியின் மாவட்டங்களை இரண்டாக பிரிக்க வேண்டும். அங்கெல்லாம் வன்னியர்களை, மாவட்ட செயலர்களாக நியமித்து, கட்சியை வளர்க்க வேண்டும். ஸ்டாலினின் வன்னியர் விரோத மனப்பான்மை மாற வேண்டும்.இப்படி விளக்கமாக, அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதம் சரியான தகவல்களுடன் எழுதப்பட்டிருப்பதால், விரைவில் கட்சியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: