புதன், 28 மே, 2014

புதையல் ! மகளை நரபலி கொடுக்க முயன்ற தந்தை கைது

 துறையூர்: திருச்சி அருகே வீட்டில் புதையல் இருப்பதாக சாமியார் கூறியதை நம்பி, மாணவியை நரபலி கொடுக்க முயன்ற தந்தை, சித்தி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சாமியார் உள்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அடுத்த கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (42). லாரி டிரைவர். இவரது முதல் மனைவி இறந்து விட்டார். ரவிச்சந்திரன் அதே பகுதியை சேர்ந்த ராணி (40) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு சங்கீதா, பானுபிரிய £(16) என இரு மகள்கள். சங்கீதாவுக்கு திருமணமாகிவிட்டது. பானுபிரியா மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்,1 முடித்து விட்டு தற்போது, பிளஸ் 2 செல்கிறார். கோடை விடுமுறைக்காக பானுப்பிரியா ஈரோட்டில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்றிருந்தார்.


நேற்று ரவிச்சந்திரன் தனது சகோதரி சுமதி மூலம் பானுபிரியாவுக்கு போன் செய்து கல்வி உதவித்தொகை வந்துள்ளது. அதற்கு நீ கையெழுத்திட வேண்டும் என்று கூறி வரவழைத்தார். பானுபிரியா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் நடுமையத்தில் ஒரு ஆள் உயரத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அதன் அருகில் எலுமிச்சை, வாழைப்பழம் மற்றும் 2 பெரிய மூட்டைகளில் ஹோமத்திற்கு குச்சிகள் இருந்தன. 55 வயதுள்ள பூசாரி ஒருவர் மந்திரம் சொல்ல, 6 இளைஞர்கள் குடிபோதையில் அமர்ந்து அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தனர். இதைக்கண்டதும் பானுபிரியாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டுக்கு வெளியில் வந்து அமர்ந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் பானுபிரியாவை தந்தை ரவிச்சந்திரன், சித்தி ராணி, சித்தியின் தந்தை நல்லுசாமி (60) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மணி (40) ஆகியோர் வீட்டிற்குள் அழைத்தனர். ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த பானுபிரியா அங்கிருந்து தப்பி ஓடி, அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆசிரியையின் கணவரிடம் சென்று, தனது வீட்டில் நடப்பதை கூறினார். அவர் உப்பிலியபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து துறையூர் இன்ஸ்பெக்டர் செழியன், எஸ்ஐ ஜெயசித்ரா, தாசில்தார் காதர்மொய்தீன், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், விஏஓ ராமராஜ் ஆகியோர் அங்கு வந்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. கொளக்குடியை சேர்ந்த சாமியார் ஒருவர் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு உனது வீட்டில் புதையல் உள்ளது. அதை எடுக்க உனது மகளை நரபலி கொடுக்க வேண்டும்‘ என்று கூறி உள்ளார்.

இதை நம்பிய ரவிச்சந்திரன் தனது மகளை நரபலி கொடுக்க முயற்சித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரன், 2வது மனைவி ராணி, மாமனார் நல்லுசாமி, மணி ஆகியோரை கைது செய்து எரகுடி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். மேலும் தப்பி ஓடிய கொளக்குடி சாமியார், அவருடன் வந்திருந்த 6 இளைஞர்கள் ஆகியோரை தேடி நாமக்கல், கொளக்குடிக்கு போலீசார் விரைந்துள்ளனர். இதுதொடர்பாக மாணவி பானுப்பிரியா கூறுகையில், ‘வீட்டில் பெரிய குழிவெட்டி பூஜை நடத்தினர். எனக்கும் என் சித்திக்கும் அடிக்கடி தகராறு வரும். எனவே என்னை தீர்த்து கட்டத்தான் இந்த பூஜை நடப்பதாக சந்தேகப்படுகிறேன்‘ என்று கூறினார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.dinakaran.com

கருத்துகள் இல்லை: