சனி, 31 மே, 2014

அமைச்சரவை குழுக்களை கலைத்தார் மோடி

புதுடில்லி: அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழுக்கள் மற்றும் அமைச்சரவை குழுக்களை கலைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இதன் மூலம் மத்திய அமைச்சகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளே விரைவாக முடிவு எடுக்க முடியும் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 9 அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்களும், 21 அமைச்சரவை குழுக்களும் இருந்தன. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு முன் எந்த முடிவும் எடுக்கும் முன்னரும், அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழு பரிசீலனை செய்யும். அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்கள் பெரும்பாலனவற்றிற்கு ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த அந்தோணி தலைமை வகித்தார். ஊழல், நதிநீர் பிரச்னை, நிர்வாக சீர்திருத்தம், எரிவாயு மற்றும் டெலிகாம் விலை தொடர்பாக அமைச்சரவை குழுக்கள் அமைக்கப்பட்டன.


தற்போது இந்த குழுக்கள் கலைக்கப்பட்டதன் மூலம், முடிவுகள் விரைவாகவும், நேர்மையாகவும் எடுக்க முடியும் எனவும், இந்த அமைச்சரவை குழுக்கள் முன் உள்ள பிரச்னைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள், தங்கள் ஆலோசனை கூட்டத்தின் போது முடிவெடுத்து கொள்ளலாம் எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும் போது, பிரதமர் அலுவலகமும், மத்திய செயலகமும் தகுந்த உதவி செய்யும் எனவும், இந்த அமைச்சரவை குழுக்கள் மற்றும் அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்கள் கலைக்கப்படுவதால் அமைச்சகங்களும், துறைகளும் அதிகாரம் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நிர்வாகம் சிறப்பாக செயல்பட, அமைச்சகங்களுக்கு 10 கட்டளைகள் பிறப்பித்து 2 நாட்கள் ஆன நிலையில், மோடி அமைச்சரவை குழுக்களை கலைக்கும் முடிவை எடுத்துள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: