வெள்ளி, 30 மே, 2014

370வது பிரிவை நீக்கினால் ஐ.நா. தீர்மானப்படி காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் நிலை வரும்"

ஸ்ரீநகர்: அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்கினால் இந்தியாவுடன் இருப்பதா? இல்லை பிரிந்து செல்வதா? என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி பொதுவாக்கெடுப்பு நடத்தும் உரிமை ஜம்மு காஷ்மீரத்துக்கு இயல்பாகவே வந்துவிடும் என்று அரசியல் சாசன வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஸ்ரீநகர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அரசியல் சாசன வல்லுநர் முசாஃபர் ஹூசைன் பெய்க் அளித்துள்ள பேட்டியின் முக்கிய அம்சங்கள்: ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது மொத்தம் 562 தேசங்கள் இங்கே இருந்தன. இவை பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைந்தவை அல்ல. தனி தேசங்கள். பின்னர் இந்த தேசங்கள் ஒவ்வொன்றாக இந்தியாவுடன் இந்தியாவின் ஒருபகுதியாகவே இணைந்தன. ஆனால் ஜம்மு காஷ்மீர விவகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்குப் போனது. இதனால் ஐக்கிய நாடுகள் சபையானது இந்த மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அந்த பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இந்திய அரசுக்கும் ஜம்மு காஷ்மீரத்துக்கும் இடையே 370வது பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயானது. இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும் ஜம்மு காஷ்மீரத்துக்கும் இடையே அரசியல் சாசன தொடர்பை ஏற்படுத்தியிருப்பது. இப்போது நீங்கள் 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் கோரி நீக்கிவிட்டால் இயல்பாகவே ஜம்மு காஷ்மீரத்து மக்கள் தங்களது தலைவிதியைத் தீர்மானித்துக் கொள்ளும் பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு உரிமை படைத்தவர்களாகிவிடுவர். இவ்வாறு முசாஃபர் ஹூசைன் பெய்க் கூறியுள்ளார்.
/tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: