வெள்ளி, 30 மே, 2014

தமிழக பா.ஜனதா பொறுப்பாளராக அமித்ஷா !

பா.ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக இருப்பவர் அமித்ஷா. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு உரியவராகவும், நெருக்கமான விசுவாசியாகவும் உள்ளார்.
நரேந்திர மோடியை பிரதமராக்க அமித்ஷா அரும் பாடுபட்டார். தன்னை கட்சி பிரதமர் வேட்பாளராக அறிவித்ததும் அமித்ஷாவை களம் இறக்கினார். உத்தர பிரதேச மாநில பொறுப்பாளராக அமித்ஷா நியமிக்கப்பட்டார்.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக இடங்களை கைப்பற்றினால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று திட்டம் போட்டு செயலாற்றினார்.

தங்கள் மாநிலத்தில் இருந்துதான் பிரதமர் உருவாக வேண்டும் என்ற உ.பி. மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப மோடியை வாரணாசி தொகுதியிலும் நிற்க வைத்தார். எதிர்பார்த்தபடி உ.பி.யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றியது.
காங்கிரசையும், முலாயம் சிங்கையும் வீழ்த்தியதுடன் மாயாவதி கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அமித்ஷாவின் தேர்தல் வியூகம் பா.ஜனதாவுக்கு கை கொடுத்தது.
இதைத் தொடர்ந்து அமித்ஷா மூலம் எதிர்காலத்தில் கட்சியை மேலும் பலப்படுத்த பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. பா.ஜனதா பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் கவனம் செலுத்த வியூகம் வகித்துள்ளது.
நாட்டிலேயே பா.ஜனதா தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தான் மிக மோசமாக பலவீனமான நிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும் பா.ஜனதாவால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.
மராட்டிய மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதிலும் பா.ஜனதா முழு கவனம் செலுத்தி வெற்றி பெற முடிவு செய்து உள்ளது.
இதற்காக தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் பா.ஜனதா மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட உள்ளார். தமிழ்நாடு பா.ஜனதா தலைவராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரியாக பதவி ஏற்றதால் புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார்.
தேர்தல் பணிக்குப்பின் குஜராத் சென்று ஓய்வு எடுத்து வரும் அமத்ஷா டெல்லி திரும்பியதும் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துவார். அதன் பிறகு அவர் தமிழ்நாடு உள்பட 3 மாநில பொறுப்பாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் பொறுப்பு ஏற்றதும் புதிய தலைவர் தேர்வு மற்றும் கட்சி வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: