வெள்ளி, 30 மே, 2014

தமிழக சட்ட சபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிகளை பெறுமா ? அல்லது இப்போதே கரைந்துவிடுமா ?

சென்னை: தமிழகத்தில் பாஜக தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒற்றுமையில்லாத காரணத்தினால் அது மரண குழியை நோக்கிச் செல்வதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் தேமுதிக, மதிமுக, பாமக, இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணியில் பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனும், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸும் தான் வெற்றி பெற்றனர். பிற கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தன. இந்நிலையில் 2016ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி ஆனால் கொஞ்சம் வலுவான கூட்டணி அமைய வேண்டும் என பாஜக எதிர்பார்க்கின்றது. ஆனால் தற்போதே தேர்தலின்போது இருந்த அன்யோன்யம் தேமுதிகவுக்கும், பாமகவுக்கும் இல்லை. எனவே இந்த கூட்டணி எதிர்காலத்தில் கரை சேருமா அல்லது இப்போதே கரைந்துவிடுமா என பல யூகங்களை ஏற்படுத்திவிட்டது. மேலும், தற்போது பாஜக கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் மத்தியில் ஒரு கவுரவமான பதவியை பாஜக அளிக்கும் என பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அவ்வாறு அவர்களுக்கு ஒரு கவுரவம் அளித்தால் மட்டுமே அவர்கள் பாஜக கூட்டணியில் தொடர வாய்ப்பு உண்டு என தகவல் வெளியானது. அதே போல, தமிழக பாஜக மூத்த தலைவர்களான இல.கணேசன், ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோரும் பாஜக தலைமை தங்களுக்கு நல்ல பதவி வழங்கும் என எதிர்பார்க்கின்றனர். இது போன்ற பல எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினால் தான் பாஜக கூட்டணி வண்டி தமிழகத்தில் தொடர்ந்து ஓடும். இல்லை எனில் அந்த வண்டி மரண குழியை நோக்கித் தான் செல்ல வேண்டி இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
tamil.oneindia.in 

கருத்துகள் இல்லை: