திங்கள், 11 ஜூன், 2012

Jeya அறிவித்த மின் திட்டங்கள் தி.மு.க., ஆட்சியில் துவங்கியவை

சென்னை :"புதுக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த மின்திட்டங்கள் அனைத்தும், தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட திட்டங்கள்' என, தி.மு.க., தலைவர்  கலைஞர் கூறியுள்ளார்.
கலைஞர்
அவரது அறிக்கை:புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க., போட்டியிடவில்லை. இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு தி.மு.க.,வையும், என்னையும் தாக்கிப் பேசாவிட்டால் பேச்சு வராது போலும். கடந்த தி.மு.க., ஆட்சியில் நடந்த 11 சட்டசபை இடைத்தேர்தல்கள் அனைத்திலும், தி.மு.க., வும், காங்கிரசும் தான் வெற்றி பெற்றன.பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., டொபசிட் தொகையை பறி கொடுத்தது. புதுக்கோட்டையில் பேசிய ஜெயலலிதா, மின்சாரத் தடை காரணமாக பொதுமக்கள் வருத்தமாக இருப்பார்கள் என்பதை அறிவேன் என்றும், அதற்குக் காரணம் ஏற்கனவே இருந்த தி.மு.க., ஆட்சி தான் என்றும், வருங்காலங்களில் மின்தேவை நிறைவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
எந்தெந்த மின் திட்டங்களிலிருந்து எவ்வளவு மின்சாரம் விரைவில் கிடைக்கும் என்று அவர் படித்த பட்டியலில் உள்ள அனைத்து மின் நிலையங்களும், தி.மு.க., ஆட்சியிலே அடிப்படை கட்டமைப்புப் பணிகள், துவக்கப்பட்ட திட்டங்கள் என்பதை பலமுறை அறிக்கைகள் மூலமாகச் சொல்லியிருக்கிறேன்.கடந்த 2006ல் தி.மு.க., ஆட்சி அமைந்த பின், வருங்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, 2010-2011ல் 1400 மெகாவாட் மின்சாரம், 2011-2012ல் 3316 மெகாவாட் மின்ராம், 2012-13ல் 1222 மெகாவாட் மின்சாரம், 2013-2014ல் 1860 மெகாவாட் மின்சாரம், ஆக மொத்தம் 7798 மெகாவாட் மின்சாரம் பல்வேறு மின் திட்டங்களின் மூலமாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

கடந்த 2006ம் ஆண்டு பல்வேறு தொழிற்சாலைகள் ஆங்காங்கு துவங்கப்பட்டதால், மின்தேவை அதிகமாயிற்று. கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டு வரை ஆட்சியிலே இருந்த ஜெயலலிதா, எதிர்காலத் தேவையைக் கணக்கிட்டு, இந்த அளவிற்கு அப்போதே முயற்சிகள் எடுத்திருப்பாரானால், தற்போது மின்பற்றாக்குறையே ஏற்பட்டிருக்காது. இதையெல்லாம் புதுக்கோட்டை தொகுதி வாக்காளர்கள் அறியமாட்டார்கள் என்ற தைரியத்தில், தி.மு.க., ஆட்சியில் தான் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டது. நான் தான் நிவர்த்தி செய்தேன் என்றெல்லாம் கதை விட்டிருப்பதை நன்றாகவே அறிவார்கள். சிலரை சில நாள் ஏமாற்றலாம். பலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: