சனி, 16 ஜூன், 2012

சீனாவின் முதலிடம் பறிபோகும்: அதிக தொழிலாளர்களை உருவாக்கும் இந்தியா

புதுடில்லி: உலகில் அதிக தொழிலாளர்களை உருவாக்கும் நாடு என்ற பெருமையை, இன்னும் சில ஆண்டுகளில் சீனாவிடம் இருந்து, இந்தியா தட்டிப் பறிக்கவுள்ளது. அதேநேரத்தில், இந்தியாவில் உருவாகும் தொழிலாளர்களில், 5.8 கோடி பேர், குறைந்த தொழில் திறன் உடையவர்களாகவே இருப்பார்கள் என்றும், இவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது சிரமமாக இருக்கும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி வரும், பிரபல கன்சல்டிங் நிறுவனமான "மெகன்சி அன் கோ' சர்வதேச அளவிலான தொழிலாளர் பிரச்னைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


குறைந்த திறன்: உலகிற்கு அதிக தொழிலாளர்களை உருவாக்கி தரும் நாடு என்ற பெருமையை, தொடர்ந்து பல ஆண்டுகளாக சீனாவே தக்க வைத்துக் கொண்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், இந்த பெருமையை, சீனாவிடம் இருந்து, இந்தியா தட்டிப் பறிக்கும். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மிக அதிகமான தொழிலாளர்கள் உருவாக்கப்படுவார்கள். அதேநேரத்தில், இந்தியாவில் உருவாகும் தொழிலாளர்களில், 5.8 கோடி பேர் குறைந்த தொழில் திறன் கொண்ட தொழிலாளர்களாகவே இருப்பர். குறைந்த திறனுடைய தொழிலாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பதால், இவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும். குறைந்த சம்பளத்துக்கு பணியாற்றக் கூடிய தொழிலாளர்களின் எண்ணிக்கை, எதிர்காலத்தில் சீனாவில் குறைந்தாலும், கல்லூரி படிப்பை முடித்த திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்குவதில், சீனா முக்கிய பங்காற்றும். வரும் 2030ல், சர்வதேச அளவில் உருவாகும் 60 கோடி தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர், சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இதன்மூலம், உலகின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2030ல், 350 கோடியை எட்டும். அதாவது 25 வயது முதல் 50 வயது வரை உள்ள திறன் படைத்தவர்கள் ஆவர்.

உபரி தொழிலாளர்கள்: இந்தியாவிலும், மற்ற வளரும் நாடுகளிலும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், உபரியாக உள்ள குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 9.4 கோடியை எட்டும். அதேநேரத்தில், சர்வதேச அளவில் திறனுடைய தொழிலாளர்களுக்கான தேவை அதிகரிக்கும். குறிப்பாக, திறன் கொண்ட தொழிலாளர்கள், நான்கு கோடிக்கும் அதிகமாக தேவைப்படுவர். நவீன தொழில் நுட்ப தேவைகளுக்கு ஏற்ப இவர்கள் சந்தையில் பயன்படுத்தப்படாமல் இருப்பர். சர்வதேச அளவில், உபரியாக உள்ள 9.4 கோடி, குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களில், பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியர்களாக இருப்பது அபாயமாகும். இதன்மூலம், பொருளாதார ரீதியாக மற்ற நாடுகளுடன் போட்டியிடும் திறன், இங்கு குறைவாக இருக்கும்.

வளர்ச்சிக்கு பாதிப்பு: இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, 40 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், 1.2 கோடி தொழிலாளர்கள் புதிதாக உருவாகின்றனர். இந்தியாவில் குறைந்த திறனுடைய தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு தொடர்ந்தால், அது, தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தொழில் துறையில் அதி நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வரும் சூழலில், அவற்றை இயக்குவதற்கு, திறனுடைய தொழிலாளர்கள் இல்லாத நிலை ஏற்படும். குறைந்த திறனுடைய தொழிலாளர்களுக்கு போதிய வேலை வாய்ப்பும் கிடைக்காத சூழல் உருவாகும். எனவே, தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபாயம் எப்படி? ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான அனு மத்காவ்கார் கூறியதாவது: சீனா மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளை விட, தொழிலாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக உருவானாலும், இங்கு உருவாகும் தொழிலாளர்கள் திறன் குறைந்தவர்களாக இருப்பது, மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இந்தியாவில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு தேவையான, நடுத்தர திறன் கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படும். எனவே, இந்தியாவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, உயர்நிலை கல்வியுடன், போதிய தொழில் பயிற்சி பெற்ற, திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அனு மத்காவ்கார் கூறினார்.

பிரபல மனிதவளத் துறை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பாலாஜி கூறுகையில்,"தயாரிப்பு துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், நம் நாட்டின் தொழிலாளர் சட்டங்கள் இல்லை. தொழிலாளர்களை இடம் பெயர்க்கும் நடவடிக்கைகள் நம் நாட்டில் போதுமான அளவு இல்லை. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, விவசாயத் துறையின் பங்களிப்பு மிக குறைந்த அளவே உள்ளது. ஆனால், இத்துறையில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது, வேலை வாய்ப்பின்மையை விட, மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது' என்றார்.

கருத்துகள் இல்லை: