சனி, 16 ஜூன், 2012

பொதுமக்கள், நித்தியை படீர் படீர் என தாக்கத்தொடங்க,

ஏய்.. கள்ளச்சாமி நித்யா னந்தா...''’என்றபடி ஆவேசமாக ஓடிவந்த பொதுமக்கள்,

 அந்த நித்தி ஆபாசப் படங்களை அடிக்கடி போட்டுப் பார்த்துட்டு அந்த வெறியோடு ஆசிரமப் பக்தைகளை சீரழிக்கிறார்'ன்னு என்னிடம் கண்ணீர் விட்டார்
கர்நாடகாவில் நித்திக்கு எதிரான சூறாவளியைக் கிளப்பிய ஆர்த்தி ராவின் பகிரங்கப் பேட்டியையும், நித்தியின் பிடதி ஆசிரமத்தை கர்நாடக போலீஸ் 11-ந் தேதி சுற்றி வளைத்ததையும் கடந்த நக்கீரன் இதழில் "கும்பமேளாவில் நித்தி அடித்த ஆபாசக்கூத்து! ஆர்த்தி ராவ் கண்ணீர் வாக்குமூலம்' என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரையாகத் தந்திருந்தோம்.
அடுத்த நிகழ்வுகளை பதிவுசெய்யும் நோக்கத்தில் 12-ந் தேதி பிடதியை நோக்கிப் பயணமானோம். பெங்களூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 50-வது கிலோ மீட்டரில் பிரமாண்ட மாகக் காட்சியளித்தது பிடதி ஆசிரமம். அங்கே நித்தியின் படத்தோடு வைக்கப்பட்டி ருந்த வினைல் போர்டுகள் எல்லாம் கர்நாடக மக்க ளின் கோபத்தால் கிழித் தெறியப்பட்டிருந்தது. விளம்பர போர்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. ஆசிரமத்தைச் சுற்றிலும் போலீஸ் தலைகளே தென்பட்டன.
ஆசிரமத்தில் தங்கியிருந்த பணி யாளர்கள் தங்கள் மூட்டை முடிச்சைக் கட்டிகொண்டு வெளியே வருவதையும் நாம் பார்க்க முடிந்தது.


அப்போது ராம்நகர் மாவட்ட எஸ்.பி.அனுபம் அகர்வால், அடிஷனல் கலெக்டர் அர்ச்சனா, ரெவின்யூ அதிகாரி மரியசாமி கவுடா உள்ளிட்ட அதிகாரி கள் டீம், ரெய்டுக்கான உத்தரவோடு நுழைந்தது. நாமும் அவர்களுடன் ஆசிரமத்திற்குள் நுழைந்தோம். ஆசிரமத்தின் முதல்கேட் வழியாக உள்ளே நுழைந்தபோது, அங்கே பக்கவாட்டுப்பகுதியில் 41 கண்டெய்னர் லாரிகள் மறைவாக நிறுத்தப்பட்டிருப்பதை அதிகாரிகள் வியப்பாகப் பார்த்தனர். ஆசிரம சீடர்கள் முன்னிலையில் அவற்றை திறந்து பார்த்த போது உள்ளே சாமி சிலைகளோடு தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் போன்றவை இருந்தன. அவற்றை அப்படியே வைத்து சீல் வைத்தனர்.

உள்ளே ஐந்து மாடிகளைக் கொண்ட 2 பெரிய ஆசிரமக் கட்டிடங்கள் தென்பட்டன. ஒரு பகுதியில் 15 மாடுகள் கட்டப்பட்டிருந்தன. எல்லாம் ராஜஸ்தானில் இருந்து தருவிக்கப் பட்டவை. ஆசிரமத்தில் 5 வெளிநாட்டினரும் 25 சீடர்களும் மட்டுமே இருந்தனர். காம்பவுண்ட் சுவர் அருகே ஏதேதோ பொருட்கள் எரிக்கப் பட்டதுபோல் தெரிய, அங்கே சென்று பார்த் தனர். சி.டி.க்களும் நிறைய ஆவணங்களும் ஏதேதோ பொருட்களும் எரிந்துபோய்க் கிடப் பதைப் பார்த்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டனர். பக்கத்திலேயே பெரிய கஞ்சா பாக்கெட் கிடந்தது. அதையும் கைப்பற்றினர். அருகில் ஆணுறைகள், காலி மதுப்புட்டிகள், பீடிகள், மாத்திரைகள் போன்றவையும் வீசப்பட்டிருந்தன.

அப்போது ஏரியாவாசியான ஹரீஸ் என்பவர் வந்து எஸ்.பி.யிடம் ""ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி இங்க இருந்து பல கார்கள்ல எதை எதையோ எடுத்துக்கிட்டு ஆசிரம சீடர்கள் போனாங்க. ஒரு ஃபாரின் பக்தை நீங்க வர்றதைப் பார்த்துட்டு, தான் கையில் எடுத்துட்டு வந்த கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்கை கீழே போட்டு எரிச்சாங்க'' என்று சொல்ல, அவரை கொஞ்சம் தள்ளி அழைத்துசென்று அவரிடம் மேலும் விசாரித்த எஸ்.பி., அந்த ஹரீஸிடம் தான் பார்த்த காட்சிகளைப் பற்றி எழுதி வாங்கிக்கொண்டார்.

இதன் பின் ஆசிரம உள்பகுதிக்கு கர்நாடக காக்கிகள் யாரையும் அனுமதிக்கவில்லை.

உள்ளே ஒவ்வொரு அறையாக சோதனை செய்த அதிகாரிகள் டீம், வீடியோவில் எல்லா வற்றையும் பதிவு செய்துகொண்டு ஒவ்வொரு அறையையும் பூட்டி சீல் வைத்தன. அப்போது ரமேஷ் என்பவர் தலைமையில் ஒரு டீம் வந்தது. அனுமதி வாங்கிக்கொண்டு போய் அதிகாரி களைப் பார்த்துவிட்டு, அந்த டீம் திரும்பியது.

ரமேஷிடம் என்ன ஏது என விசாரித்த போது ""நாங்கள்லாம் விவசாயிகள். இந்த பிடதி என்பது மைசூரின் தலைப்பகுதி. இது முழுக்க முழுக்க விவசாய ஏரியா. இங்க இருக்கும் விவசாய நிலத்தை விவசாயிகள்தான் வாங்கணும்னு கர்நாடகாவில் சட்டமே இருக்கு. ஆனா இந்த நித்யானந்தா அந்த சட்டத்தைப் பற்றியெல் லாம் கவலைப்படாமல் விவசாயிகளிடமிருந்து 32 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அந்த விவசாய நிலத்தில் பில்டிங்குகளைக் கட்டி யிருக்கார். அதோட பக்கத் தில் இருந்த அரசு நிலங் களையும் ஆக்கிரமித்து 32 ஏக்கரை 52 ஏக்கரா ஆக்கிவச்சிருக்கார். இங்க கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களுக்கும் அவர் முறையா அனுமதி வாங்கலை. இது சம்பந்தமா இப்ப அதிகாரிகளிடம் புகார் கொடுத்தோம். உடனே ரெவின்யூ அதிகாரி மரியசாமி கவுடா, அந்த இடங்களையெல்லாம் அளக்கப் போகிறோம்ன்னு சொல்லியிருக்கார். நில மோசடி விவகாரத்திலும் நித்தி சிக்கியிருக்கார்'' என்றார் காரமாக.

ஆசிரமத்திற்குள் நிறைய அண்டர் கிரவுண்ட் சீக்ரெட் அறைகள் இருப்பதையும் பார்த்து திகைத்துப்போனது அதிகாரிகள் டீம். ஆசிரமத்தில் நடக்கும் விசயங்கள் குறித்து அங்கிருந்த சீடர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது நவீன் செல்லம் என்ற சமூக சேவகர், எஸ்.பி.யைப் பார்க்கவேண்டும் என்று உள்ளே போனார். அவர் போனதும் உள்ளே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஏதேதோ விசாரணைகள் நடந்தன. அதே பரபரப்போடு வெளியே வந்த நவீன் செல்லத்திடம், ""எதுக்கு சார் எஸ்.பி.யைப் பார்த்தீங்க?'' என்றோம், நம்மை அறிமுகம் செய்துகொண்டு. நவீன் செல்லமோ ""இந்த பிடதி ஆசிரமத்தில் பலரையும் எனக்குத் தெரியும். ரெண்டு மாசத்துக்கு முன்ன, இங்க தங்கியிருக்கும் ஒரு பெண் சீடர் என்னிடம், "அந்த நித்தி ஆபாசப் படங்களை அடிக்கடி போட்டுப் பார்த்துட்டு அந்த வெறியோடு ஆசிரமப் பக்தைகளை சீரழிக்கிறார்'ன்னு என்னிடம் கண்ணீர் விட்டார். அதைத்தான் இப்ப எஸ்.பி.யிடம் சொன் னேன். அவர் அந்த பெண்ணை அடையாளம் காட்டச்சொன்னார். அவரை காட்டினேன். எஸ்.பி.யும் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினார். ஆன் மீகத்தின் பெயரில் அந்த ஆள் என்னென்ன அசிங்கம் பண்ணி யிருக்கார் பாருங்க'' என்றார் காட்டமாக.

பொழுது போனதால், அன்றைய சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் டீம் வெளியே வந்தது.

எஸ்.பி.அனுபம் அகர்வாலிடம் ரெய்டு குறித்துக் கேட்டபோது ""நிருபர் அஜித் மற்றும் நவநிர்மாண் அமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது பெயிலபிள் செக்ஷன்லதான் வழக்கைப் போட்டிருக்கிறோம். ஆசிரமத்தை சீல் வைக்கும் விவகாரத்தில் நிதானமாகத்தான் செயல்பட முடியும். ஆசிரமத்தின் அறைகளும் அங்கே இருக்கும் எவிடன்ஸுகளுமே எங்களுக் குப் போதும்'' என்றார் நம்மிடம்.

அடிஷனல் கலெக்டர் அர்ச்சனாவோ ""நில அபகரிப்புப் புகாரையும் தீவிரமாக விசாரித்து வருகிறோம்'' என்றார்.

அப்போது அதிகாரிகள் டீமோடு பேசிவிட்டு வந்த இந்து ஜாகி ரணவேதி அமைப்பைச் சேர்ந்த வாசுதேவ் காஸ்யப் என்பவர் நம்மிடம் ""ரஞ்சிதாவோடு அந்தப் பயல் இருந்த சி.டி.வெளியே வந்தப்ப, அந்தப் பயல் என்னிடம் ஓடிவந்து, "படத்தை வெளியிட்ட லெனின் தர்மானந்தா மீது புகார் கொடுங்க'ன்னு கெஞ்சினான். அவனுக்காக லெனின் தர்மானந்தா மீது புகார் கொடுத் தேன். இப்ப அந்த ஆர்த்தி ராவின் பேட்டி யைப் பார்த்தப்ப நான் கொதிச்சுப் போய்ட் டேன். எவ்வளவு மோசமா நடந்திருக்கான் அவன். அவனையெல்லாம் நாட்டில் நடமாட விடக்கூடாது. நான் முதல் காரியமா, லெனின் தர்மானந்தா மீது தொடுத்த வழக்கை வாபஸ் வாங்கப்போறேன்''’ என்றார் நித்தி மீதான கோபத்தோடு. நித்திக்கு அவர் நடத்திய அர்ச்சனையை முழுதாக பிரசுரிக்க முடியாது.

13-ஆம் தேதியும் அதிகாரிகள் டீம் ஆசிரமத்தில் சோதனையை நடத்தியது. பிற்பகல் 2.30-க்கு ‘நித்யானந்தா ராம்நகர் கோர்ட்டில் இருக்கிறார்’ என நமக்குத் தகவல் வர, பிடதியில் இருந்து 20-வது கி.மீ.யில் இருக்கும் ராம்நகர் கோர்ட்டிற்கு விரைந் தோம்.

நித்தி எப்போது வந்தார் என கோர்ட் ஊழியர்களிடம் விசாரித்தபோது ""முதல்ல 2 ஃபாரின் கார்கள் கோர்ட்டுக்குள் வந்து நின்னது. அதில் இருந்த நித்தியின் சீடர்கள், காரில் இருந்தபடியே போலீஸ் காரங்க இருக்காங்களா? பத்திரிகைக் காரங்க இருக்காங்களான்னு விசாரிச் சாங்க. இல்லைன்னு தெரிஞ்சதும் தகவல் கொடுத்தாங்க. அடுத்த கொஞ்ச நேரத்தில் கேரள ரிஜிஸ்டிரேஷன் வண்டியில் சர்ருன்னு ஒரு ஆள் குர்தா வேட்டி தொப்பி சகிதம் வந்து இறங்கினார். சரசரன்னு வேட்டியையும் குர்தாவையும் தொப்பியையும் கழட்டினார். அப்பதான் அவர் நித்தின்னு தெரிஞ்சிது. வழக்கமான காவி ஆடைக்கு மேல் வேறு ஆடை யைப் போட்டுக்கிட்டு வந்திருக்கார். உள்ளே நீதிபதியிடம் ஓடிப்போய் கும்பிடு போட்டு "எனக்கு ஜாமீன் கொடுங்க'ன்னு கேட்டார். நீதிபதியோ "உங்களை யார்ன்னு எனக்குத் தெரியாது. போலீஸை வரச் சொல்கிறேன்'னு அங்கே உட்காரவச்சிட்டாங்க'' என்றனர் புன்னகையோடு..

ஆசிரம ரெய்டில் இருந்த எஸ்.பி.அனுபம் அகர் வால், காக்கிகள் டீமோடு அரக்க பரக்க நீதிமன்றத்துக்கு வந்தார். அதற்குள் பொதுமக்களும் பத்திரிகையாளர் களும் நீதிமன்றத்தின் முன் குவிந்துவிட்டனர்.

எஸ்.பி.யிடம் நீதிபதி கோமளா ""என்ன வழக்கு?'' என்று விசாரிக்க, எஸ்.பி.யோ ""இவரை நாங்க தேடிக்கொண்டிருக்கிறோம். இவரை எங்களிடம் ஒப்படையுங்கள்'' என்றார். நீதிபதியோ ""சரி, நாளைக்கு இவரை ஆஜர்படுத்துங்கள்'' என்றார்.

இதைத் தொடர்ந்து நித்தியை வெளியே போலீஸ் அழைத்து வர.. ""ஏய்.. கள்ளச்சாமி நித்யா னந்தா...''’என்றபடி ஆவேசமாக ஓடிவந்த பொதுமக்கள், நித்தியை படீர் படீர் என தாக்கத்தொடங்க, போலீஸ் படாதபாடுபட்டு நித்தியை சுற்றிவளைத்து, போலீஸ் ஜீப்பிற்குள் குண்டு கட்டாய்த் தூக்கிப்போட்டது. அப்போதும் ஆவேசம் அடங்காத பொதுமக்கள் போலீஸ் ஜீப்பையும் கைகளால் அடித்தனர். நித்தியுடன் வந்திருந்த சீடர்கள் அடி உதைக்கு பயந்து அங்கிருந்து எஸ்கேப் ஆயினர். சென்னப்பட்னா பகுதியில் இருக்கும் போலீஸ் பயிற்சிக் கல்லூரிக்கு நித்தியை போலீஸ் கொண்டுபோனது. அங்கும் ஆவேசமாக பொதுமக்கள் கூட, அங்கிருந்து மஞ்சுபாலா பகுதியில் இருக்கும் இன்ஸ்பெக்ஷன் பங்களாவுக்கு கொண்டுவந்தனர். அங்கும் பொதுமக்கள் நித்தியைத் துரத்திவர, கடைசியாக எஸ்.பி. அலுவலகத்துக்குக் கொண்டு போனார்கள். அங்கு நித்தியிடம் விசாரணை நடந்தது.

"ஆசிரமத்தில் எதற்காக கண்டெய்னர் கள் நிற்கிறது?' என்ற கேள்விக்கு, ’""நாங்கள் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனமும் நடத்துகிறோம்'' என்றார் நித்தி. "ஆசிரமத்தில் எதற்கு ரகசிய அறைகள்?' என்ற கேள்விக்கு, ""தியான காரியங்களுக்காக'' என்றார். "கஞ்சா, ஆபாச சி.டி.க்கள் எல்லாம் ஆசிரமத்தில் இருந்ததே' என்று காக்கிகள் கேட்டபோது ‘""என் எதிரிகள் யாராவது கொண்டுவந்து போட்டிருப்பார்கள்'' என்று சமாளித்தார். இப்படி மேலோட்டமான விசாரணையை முடித்த காக்கிகள் நள்ளிரவு 2 மணியளவில் நித்தியை, நீதிபதி கோமளா வீட்டில் கொண்டு போய் ""ஆஜர்படுத்தி ""நிறைய புகார்கள் இருப்பதால் அவரை கஸ்டடி விசாரணைக்கு அனுமதிக்கவேண்டும்''’ என்றனர். நீதிபதியோ ""இப்படி நள்ளிரவில் கொண்டுவராதீர்கள். பகலில் வாருங்கள்''‘என அனுப்பிவிட்டார்..



14-ந் தேதி முழுக்க கோர்ட்டில் மீடியாக்கள் காத்திருக்க, நித்தியை எஸ்.பி. அலுவலகத்திலேயே வைத்து மதியம் 2 மணிவரை விசாரித்தபடியே இருந்தனர். பொதுமக்களின் கோபம் இன்றும் வெடிக்கலாம் என யோசித்த போலீஸ், வஜ்ரா வாகன பாதுகாப்புடன் நித்தியைக் கோர்ட்டுக்கு மதியம் 3 மணிக்குக் கொண்டு வந்தது. திரண்டிருந்த பொதுமக்கள் "கள்ளச்சாமி' என கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். கோர்ட்டில் நித்தியை ஆஜர் படுத்தியபோது, அவரை ஜாமீனில் விடவேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அரசு வழக்கறிஞர் நாகராஜோ ""நித்யானந்தா ஒரு கிரிமினல் பேர்வழி. ஏற்கனவே பெண்களின் பாலியல் புகார்கள் இவர் மீது இருக்கிறது. இவரை வெளியே விட்டால் சட்டம்- ஒழுங்கிற்கு பிரச்சினை ஏற்படும்'' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ""ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 87 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதால், இவரையும் ஜாமீனில் விடுவிக்கிறேன். அதே சமயம், இவர் மீது வைக்கப்பட்டிருக்கும் பாலியல் உள்ளிட்ட மற்ற குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் முடிந்தபின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும்'' என்றார் அழுத்தமாக.
ராம்நகர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த நித்தியை எதிர்த்து பொதுமக்கள் கோஷம் எழுப்பியபடியே தாக்க முனைந்தனர். எனவே அவரை அதே வஜ்ரா வாகனத்தில் போலீஸார் ஏற்றினர்.

அந்த வண்டியையும் பொதுமக்கள் அங்கங்கே வழிமறிக்க, திகைத்துப் போன போலீஸ், அவரை மறுபடியும் எஸ்.பி. அலுவலகத்துக்கே கொண்டு போய் உட்கார வைத்தது.

அதேநேரம் கர்நாடக சி.எம். அலுவலகத்தில் இருந்து ""நித்தியை வெளியே விட்டால் பொது அமைதிக்குக் குந்தகம் நேரும். எனவே அவரை மறுபடியும் கைது செய்யுங்கள்'' என தகவல் வந்தது.

உடனே 107, 151 ஆகிய செக்ஷன் களில் நித்தியை மறுபடியும் கைது செய்தது போலீஸ். அரசின் நேரடி உத்தரவில் இந்தக் கைது நடப்பதால் நித்தியை மாவட்ட ஆட்சியர் முன் ஆஜர்படுத்தி, அவரை மைசூர் சிறையில் அடைத்தனர்.

அதிர்ந்து போன நித்தி தனது டிரேட் மார்க் சிரிப்பை தொலைத்துவிட்டு கண்கள் கலங்க தங்களிடம் கெஞ்சியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

நித்திக்கு ரஞ்சிதாவுடன் இருந்த பாலியல் தொடர்பான வழக்கில் கிடைத்த ஜாமீனை ரத்து செய்யும் தீவிரத்தில் இருக்கிறது கர்நாடக அரசு.

நித்தியின் எபிசோடில் அடுத்து என்னென்ன காட்சிகள் அரங்கேறப் போகிறதோ?

-பிடதியில் இருந்து பிரகாஷ்
அட்டை மற்றும் படங்கள்: ஸ்டாலின்

நித்தி விவகாரத்தால் மனரீதியாக ரொம்பவே குழம்பிப் போயிருக்கிறார் மதுரை ஆதீனம் அருணகிரி. நித்தியின் கைதை எதிர்பார்க்காத ஆதீனம், அவர் கைதானதும் தனக்கு நெருக்கமான பலரிடமும் ""அவசரப்பட்டு நித்தியை இளைய ஆதீனமா அறிவிச்சிட்டேன். உங்கள்ல யாரிடமும் இதுபத்தி கலந்து பேசாமக் கூட அப்படியொரு முடிவெடுத் திட்டேன். நித்தியை இளைய ஆதீனப் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு இருக்கு. அதை பயன்படுத்த லாமா வேண்டாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்'' என மனம் திறந்திருக்கிறார். அவரது நட்பு வட்டாரத்தைச் சேர்ந்தவர்களோ ""இனிமேலாவது விழிச்சிக்கங்க. உங்க அவசர முடிவால் மதுரை ஆதீன மடமே தேவையில்லாத சர்ச்சைகளிலும் சிக்கல்லயும் மாட்டிக்கிட்டிருக்கு'' என அவரை நித்தியின் பிடியில் இருந்து மீட்டுவிடத் துடித்தனர்.

இந்த நிலையில் நித்திக்கு ராம்நகர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதும், ஆதீனத்தின் மனநிலை மெல்ல மெல்ல மாறியது. ""நீதிமன்றமே ஜாமீன் கொடுத்துடுச்சே. அப்புறம் என்ன? கோர்ட்டில் நித்திக்கு எதிரா தீர்ப்பு வந்தா பார்த்துக்கலாம்'' என நண்பர்களிடம் பேச ஆரம்பித்தார்.

அடுத்த கொஞ்ச நேரத்திலேயே நித்தி மீண்டும் கைது என தகவல் வர, ""நிலைமை சரியா இல்லையே, என்ன பண்றதுன்னு குழப்பமா இருக்கு. அடிக்கடி கைதாகும் நபரை, இளைய ஆதீனமா எப்படி வச்சிக்க முடியும்?'' என ஆதங்கப்பட ஆரம்பித்தார் ஆதீனம். அவரது நண்பர்களும் ""இதுக்கு மேலும் அவரை நீங்க வச்சிருந்தா, உங்களுக்குதான் இழுக்கு. இன்னும் என்னென்ன விவகாரங்கள் வெடிக்கப் போகுதோ... எச்சரிக்கையா அவர்ட்ட இருந்து விடுபடுங்க. இதுதான் சரியான நேரம். நல்ல முடிவை எடுங்க. ஆதீனத்தின் பெருமையைக் காப்பாத்துங்க'' என வலியுறுத்தத் தொடங்கினர்.

இந்த நிலையில் மீண்டும் கைதான நித்தி, தன் முக்கிய சீடர்களை தொலைபேசியில் அழைத்து ""இனி நாம் பெங்களூரில் ஆசிரமம் நடத்த முடியாது. இங்க பப்ளிக் நமக்கெதிரா கிளம்பிட்டாங்க. அதனால் மதுரையில்தான் நாம் ஆசிரமத்தை நடத்தியாகணும். நமக்கெதிரா ஆதீனத்தின் மனதை சிலர் திருப்பப் பார்ப்பாங்க. விடாதீங்க. ஆதீனத்திடம் பேசி அவரை நம்ம பக்கமே வச்சிக்கங்க. அலட்சியமா இருந்துடாதீங்க'' என அவர்களை உசுப்பி விட்டுத்தான் சென்றுள்ளார்.

-முகில்
படங்கள்: அண்ணல்

கருத்துகள் இல்லை: