செவ்வாய், 12 ஜூன், 2012

முலாயம் மம்தா காங்கிரசுக்கு நெருக்கடி

"எல்லாரும் அதிகாரப்பூர்வமாக தங்களின் வேட்பாளர்களை அறிவிக்கட்டும். அதன்பின், எங்களது ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிக்கிறோம்' என, முலாயம் சிங் கூறிவிட்டார். அதேபோல, மம்தாவின் தூதருடன் நடத்திய பேச்சு வார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலை சாக்காக வைத்து, முலாயமும், மம்தாவும் பேரம் பேசுவதால், காங்கிரசுக்கு திடீர் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் வெகுவிரைவில் நடைபெறப்போகும் சூழ்நிலையில், காங்கிரஸ் தரப்பில் வேட்பாளர் யார் என்பதில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், பிரணாப் முகர்ஜியைத் தான் அந்தக் கட்சி முன்னிறுத்தப்போகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் கூட, பிரணாப்பிற்கு முழுமையான ஆதரவை பிற கட்சிகளின் இருந்து பெற்றுவிட முடியுமா என்ற குழப்பமும், சந்தேகமும் காங்கிரஸ் கட்சியை ஆட்டிப் படைக்கிறது.


புதிய திருப்பம்:ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வரும் முக்கிய கட்சியான சமாஜ்வாதியின் நிலை என்னவென்பது, மிகவும் முக்கியமான
ஒன்றாக உள்ளது. காரணம், அந்த கட்சியிடம் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் ஓட்டுகள் உள்ளன. காங்கிரசின் வேட்பாளரை முலாயம் சிங் ஆதரிப்பார் என்று சொல்லப்பட்டாலும், இதிலும் நேற்று புதிய திருப்பம் தென்பட்டது.

டில்லியில் நிருபர்களை சந்தித்த முலாயம் சிங்கிடம், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கப்படும் என, கேட்கப்பட்டது. அதற்கு அவர் நேரடியாக எதையும் சொல்லாமல், மழுப்பி விட்டார்."ஜனாதிபதி தேர்தலில் யார், யார் வேட்பாளர்கள் என்பதே இன்னும் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில், எப்படி ஆதரவு தெரிவிக்க முடியும். அதிகாரப்பூர்வமாக யார், யாரெல்லாம் நிறுத்தப்படுகின்றனர் என்பது முதலில் தெரிய வரட்டும். அதன் பிறகு எங்களது கட்சியின் செயற்குழுவைக் கூட்டி ஆலோசனை நடத்தி, யாருக்கு ஆதரவு என்பதை அறிவிக்கிறோம்' என்றார்.

சமாதான முயற்சி:மம்தா பானர்ஜியின் தூதராக, மேற்கு வங்க அமைச்சர் அமித் மித்ரா நேற்று டில்லி வந்தார். நிதியமைச்சரும், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படும் நபருமான பிரணாப் முகர்ஜியை அவர் சந்தித்துப் பேசினார். இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்தும் கூட, எந்த முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதற்கு காரணம், மேற்கு வங்க மாநிலத்திற்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் வரை சிறப்பு நிதியாக மத்திய அரசு அளிக்க வேண்டும் என, மம்தா பானர்ஜி கேட்கிறார். அதை மத்திய அரசு தந்தால், நிச்சயம் பிரச்னை வெடிக்கும் என்பதால், மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. இதனால், மத்திய வரி விலக்குகளுடன் கூடிய நிதியுதவி ஏதாவது செய்திட முடியுமா என்ற சமாதான முயற்சியும் நடந்து வருகிறது.

திரைமறைவு பேச்சு:மம்தாவைப் போலவே மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதியை, முலாயம் சிங்கும் கேட்டு வருகிறார். உத்தர பிரதேச அரசிற்கு உதவிடும் வகையில், பெரும் தொகையை முலாயம் சிங் கேட்கிறார். இந்த தொகையை அளிக்க, மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. திரைமறைவில் நடைபெற்று வரும் இந்த பேச்சு வார்த்தைகளில், எந்த விதமான முன்னேற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் தவிப்பு:ஜனாதிபதி தேர்தலை முன் வைத்து, தங்களது ஆதரவை பேரமாக வைத்து மம்தாவும், முலாயம் சிங்கும் மத்திய அரசுடன் பேசி வருகின்றனர். இந்த பேரம் படியாத காரணத்தினாலேயே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்த அறிவிப்பை, அதிகாரப்பூர்வமாக வெளியிட முடியாமல் காங்கிரஸ் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக கட்சிகள் எப்படி?தமிழக அரசும் கூட நிதிப் பற்றாக்குறையால் திண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் இரண்டுமே, மற்ற எல்லா கட்சிகளையும் முந்திக் கொண்டு தங்களது ஆதரவை ஆளாளுக்கு தெரிவித்து விட்டன. ஆட்சியில் உள்ள அ.தி.மு.க., பல முறை மத்திய அரசிடம் நிதியுதவி கேட்டும் கிடைக்கவில்லை. அதை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, சங்மாவை ஜனாதிபதி வேட்பாளராக அ.தி.மு.க., முன்னிறுத்தி விட்டது. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணயியில் உள்ள தி.மு.க.,வோ எல்லாரையும் விட முந்திக்கொண்டு, "பிரணாப் தான் வேட்பாளர் என்றால், ஆதரிக்கத் தயார்' என்று கூறிவிட்டது.வட மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய கட்சிகள், ஜனாதிபதி தேர்தலையும் விட்டு வைக்காமல், அதையும் கூட ஒரு சாக்காக வைத்து, தங்களது மாநிலங்களுக்கு தேவையான நிதியைப் பெற, திரைமறைவு பேரங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்திலோ, "சுத்தம் சுய பிரகாசமாக' அரசியல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-நமது டில்லி நிருபர்- முலாயம் மம்தா காங்கிரசுக்கு நெருக்கடி 

கருத்துகள் இல்லை: