செவ்வாய், 12 ஜூன், 2012

ஹோட்டலில் இருந்து திரும்பிய மதுரை ஆதீனம் கூடுவிட்டு கூடு பாய்ந்தாரா?

Viruvirupu
நித்யானந்தா எங்கே மறைந்திருக்கிறார் என்ற மர்மம் தொடர்ந்து கொண்டுள்ள நிலையில், அவரது புதிய குருவான மதுரை ஆதீனத்தையும் காணவில்லை என்று மதுரையில் பரபரப்பாக உள்ளது. ஆதீன மடத்துக்குள் அவர் இருக்கிறார் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாலும், செய்தியாளர்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
“யாருடனும் பேசும் மூடில் அவர் இல்லை” என்கிறார்கள், மதுரை ஆதீன மடத்தில் உள்ள நித்தியானந்தா ஆட்கள். மதுரை ஆதீனத்தின் ஒரிஜினல் ஆட்களுக்கு இப்போது மடத்தில் வாய்ஸ் கிடையாது.
நித்தியானந்தாவின் பிடதி தியான பீடத்தில் போலீஸ் நுழையப் போகும் விஷயம் தெரிய வந்தவுடன், சுவாமிகள் அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருந்தார். அவர் எங்கே சென்றார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, பிடதியில் இருந்து தலைமறைவான நித்யானந்தா, சேலத்துக்கு வந்திருக்கிறார்.

சேலத்தில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறார் அவர். சேலம் ஹோட்டலில் நித்தியானந்தா தங்கியிருந்தபோது, மதுரை மூத்த ஆதீனமும் அதே மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்ததாக தெரியவருகிறது.
நிலைமை இறுகத் துவங்கவே, சேலத்தை விட்டு கிளம்பும் முடிவை எடுத்தார் நித்தியானந்தா. ஹோட்டலை காலி செய்துவிட்டு முக்கிய சிஷ்யர்கள், சிஷ்யைகளுடன் புறப்பட்ட அவர் எங்கே போனார் என்பது தெரியவில்லை. அவருடன் ஹோட்டல் அறையை காலி செய்த மதுரை ஆதீனம், சேலத்தில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார்.
மதுரை ஆதீனத்துடன் வைஷ்ணவி, கஸ்தூரி, அவர்களின் தாயார் கமலா ஆகிய மூவரும் சேலத்தில் இருந்து மதுரை திரும்பினார். ஆதீன மடத்துக்குள்ளும் சென்றனர்.
இந்த நிலையில், நேற்று மதுரை ஆதீனத்தை சந்திக்க சென்ற செய்தியாளர்கள் இருவருடன், மடத்தில் இருந்த நித்தியானந்தாவின் சிஷ்யர்கள் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டனர். நல்ல வேளையாக தனியே துணையில்லாமல் சென்ற இரு செய்தியாளர்கள் மீது சிஷ்யர்கள் கைவரிசையை காட்டவில்லை. செய்தியாளர்கள் இருவரும் வெளியே வந்த சில நிமிடங்களில், மடத்தின் கதவுகள் பூட்டப்பட்டன.
அந்த நிமிடத்தில் மதுரை மூத்த ஆதீனம் மடத்துக்குள்தான் இருந்தார் என்கிறார்கள், அங்கு சென்று திரும்பிய இரு செய்தியாளர்களும் ஆனால், அதன்பின் மதுரை ஆதீனத்தை சந்திக்க செய்தியாளர்கள் செய்த முயற்சிகள் ஏதும் பலிக்கவில்லை.
மடத்தின் பெரிய கதவு மூடப்பட்ட சிறிது நேரத்தில், உள்ளேயிருந்து கதவை லேசாகத் திறந்து வந்த ஒருவர், அறிவிப்பு பலகை ஒன்றை வெளியே வைத்துவிட்டு சென்றார். அறிவிப்பு பலகையில், “மடத்தின் பூஜைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன” என எழுதப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு பலகை பரபரப்பை ஏற்படுத்திவிட, மடத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சில ஏற்பாடுகள் நடந்தன. அதைத் தெரிந்துகொண்ட மதுரை போலீஸ் இதில் தலையிட்டு, மடத்தின் கதவுகளை திறக்கச் செய்தனர். அறிவிப்பு பலகையும் மாயமாக மறைந்து விட்டது.
இப்போது, ஆதீனம் உள்ளே இருக்கிறாரா, அல்லது பிளாக் மேஜிக் போல, ‘கூடு (மடம்) விட்டு கூடு பாய்ந்து’ விட்டாரா என்று கடும் குழப்பத்தில் உள்ளனர் மதுரை செய்தியாளர்கள்.

கருத்துகள் இல்லை: