ஞாயிறு, 10 ஜூன், 2012

நித்தியானந்தா Escape ஓட்டம் ஆரம்பம்

அடடா.. நித்தியானந்தா எதிர்பார்த்த ‘அந்த’ சிக்கல் வந்தே விட்டதே!

Viruvirupu

“நித்தியானந்தாவுக்கு கர்நாடகாவில் ‘ஏதோ சிக்கல்’ உருவாகிறது. அதனால்தான் அவர் தமிழகத்தில் காலூன்ற முயற்சித்து, மதுரை ஆதீனத்துக்குள் காலடி வைக்கிறார்” இப்படியொரு ‘கதை’ சில வாரங்களுக்கு நக்கீரனில்  அடிபட்டது. அப்போதுதான், நித்தி சுவாமிகள் மதுரை பெரிய ஆதீனத்துக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து மூடுமந்திரமாக முடிசூடிக் கொண்டார்.
அப்போது அடிபட்ட கதையின் ‘ஏதோ சிக்கல்’, கர்நாடக அரசிடம் இருந்து வருகிறது என்று இப்போது தெரிகிறது. நித்யானந்தாவுக்குச் சொந்தமான ஆசிரமம், மற்றும் தியானபீடத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்றுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில சட்டத் துறை அமைச்சர் சுரேஷ்குமார், “நித்தியானந்தா ஆசிரமத்திலும், தியானபீடத்திலும் ஆட்சேபத்திற்குரிய நடவடிக்கைகள் நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளன. இதனால், அவற்றின் நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள அரசு பரிசீலித்து வருகிறது. நித்யானந்தர் தியானப் பீடத்தை நிர்வகிப்பதற்கு தனி அதிகாரியை நியமிப்பது பற்றியும் அரசு யோசித்து வருகிறது” என்று நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் ராமநகரம் மாவட்டம், பிடதியில் அமைந்துள்ளன நித்யானந்தாவுக்குச் சொந்தமான ஆசிரமமும் தியானபீடமும். அங்குதான், ‘ஆட்சேபத்திற்குரிய நடவடிக்கைகள்’ நடைபெறுவதாக கர்நாடகா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில முதல்வர் சதானந்த கௌடா, மாநில உள்துறை அமைச்சர் ஆர். அசோக் ஆகியோருடன் இது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக, சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆசிரமம் அமைந்துள்ள ராமநகரம் மாவட்டத்துக்கு பொறுப்பாகவுள்ள அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், “நித்யானந்தா ஆசிரமத்தில் நடைபெற்றுவரும் சில சம்பவங்கள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. இதுபற்றி அறிக்கை அளிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நித்யானந்தர் ஆசிரமம் குறித்து முழுமையாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்
இந்த அறிவிப்புகளையடுத்து, நேற்று நித்யானந்தா ஆசிரமத்துக்கு போலீஸ் துணையுடன் சென்ற அரசு அதிகாரிகள், அங்குள்ள சிலரிடம் விசாரணை நடத்தினர். நித்தியானந்தா அங்கு தங்கியிருப்பதால், பிடதி பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, சில நாட்களுக்கு நித்யானந்தா அங்கு வசிக்கக்கூடாது என்று அதிகாரிகள் ஆசிரம நிர்வாகியிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.
ராமநகரம் மாவட்ட எஸ்.பி. அனுபம் அகர்வால், “இங்கே சட்டமேலவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், உடனடியாக நித்யானந்தாவைக் கைது செய்வது இயலாத காரியம். ஆனால், நாம் நித்தியானந்தர் ஆசிரமத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் பற்றி வந்த புகார்களை விசாரித்து வருகிறோம்” என்றார். 
ஆசிரமம் பற்றிய விரிவான அறிக்கையை அடுத்த சில தினங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு, மாவட்ட கலெக்டர் ஸ்ரீராம ரெட்டிக்கு, அமைச்சர் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
ஆசிரமம் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்கள், ஆசிரமத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக கொந்தளிப்பான மனநிலையில் இருப்பதால், பொதுமக்கள் ஆசிரமத்தை தாக்கலாம் என்ற நிலை காணப்படுகிறது. ஆசிரமத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பது பற்றி இன்னமும் முடிவாகவில்லை. ஆசிரமத்தில் இருந்து நித்தியானந்தா வெளியேறிவிட்ட தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரிந்தால், அவர்கள் அமைதியாகி விடுவார்கள் என்று காவல்துறை கருதுவதாக தெரிகிறது.
நித்தி, தமது ஓட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. கர்நாடகாவில் சிக்கல் ஏற்பட்டால், அருகே இருக்கவே இருக்கிறது தமிழகம்.

கருத்துகள் இல்லை: