வியாழன், 14 ஜூன், 2012

மடத்தில் கார் மாயம் சகுனம் பார்த்த மதுரை ஆதீனம்


மதுரை: பெங்களூரூ புறப்பட்ட மதுரை ஆதீனத்தின் கார், அடுத்தடுத்து பழுதானதால், "சகுனம் சரியில்லை' என மடத்திற்கு திரும்ப தயாரானவரை, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதே தொடர் சர்ச்சைகளுக்கு காரணம் என ஆதீன ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
மதுரை ஆதீனம் அருணகிரி, கடந்த ஏப்.,23ல் தனது "பென்ஸ்'காரில் பெங்களூரூவுக்கு புறப்பட்டார். அவரை பின்தொடர்ந்து, இரு கார்களில் நித்யானந்தா சீடர்கள் சென்றனர். மதுரை காளவாசல் சிக்னல் அருகே வந்தபோது, ஆதீனத்தின் கார் பழுதானது. அதை டிரைவர் சரிசெய்து, கோச்சடையை தாண்டியபோது, மீண்டும் பழுதானது. இதனால் வெறுத்துப்போன ஆதீனம், "சகுனம் சரியில்லை. திரும்ப மடத்திற்கே வண்டியை விடு' என்றுக்கூறி, மடத்திற்கு செல்ல தயாரானார். ஆனால் சில நிமிடங்களிலேயே, நித்யானந்தா சீடர்கள் ஏற்பாட்டின்பேரில், வாடகை "இன்னோவா' கார் வந்தது. அதில் பெங்களூரூவுக்கு ஆதீனம் பயணமானார். அங்கு சென்று இருநாட்களில், இளைய ஆதீனமாக நித்யானந்தாவை அறிவித்தார். அதுமுதல், நித்யானந்தாவும், மதுரை ஆதீனமும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினர். இதற்கு ஆதீனம் புறப்பட்ட போது, "சகுனம்' சரியில்லாதது, அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதே காரணம் என ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே, ஒரு மாதமாக ஆதீன மடத்தில் நித்யானந்தா ஆசிரமத்தின் 4 கார்கள் நின்றிருந்தன. இதில், கர்நாடக பதிவெண் கொண்ட "இண்டிகோ' கார் நேற்று காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.



மரகத லிங்கம் எங்கே: ஆதீன மடத்தில் வழிபாட்டிற்காக, முக்கால் அடி உயர பாம்பு உருவம் சுற்றி இருக்கும் மரகத லிங்கம் மற்றும் வைடூரியம் கல் ஒன்று இருந்ததாகவும், தற்போது அவை எங்கே உள்ளன என தெரியவில்லை எனவும் மடத்தின் முன்னாள் ஊழியர்கள் கூறுகின்றனர். இதை மறுத்துள்ள ஆதீன மட பொறுப்பாளர்கள், "வழக்கம் போல் பூஜைகள், அன்னதானம் நடக்கிறது. மடத்தில் தொடர்ந்து ஆன்மிக பணியில் அருணகிரி ஈடுபடுகிறார்' என்றனர்.

கருத்துகள் இல்லை: