திங்கள், 11 ஜூன், 2012

நித்தியானந்தாவை கைது செய்ய கர்நாடக அரசு உத்தரவு


 Nithyananda Bidadi Ashram Sealed
பிடதி: கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு சீல் வைத்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை கைது செய்யவும் போலீசாருக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்தவரான நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடதியில் ஆசிரம் அமைத்துள்ளார். இவரது செயல்பாடுகள் பற்றியும் ஆசிரம நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன. அண்மையில் மதுரை ஆதீனத்தில் இளைய சன்னிதானமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு உருவானது. இது தொடர்பாக வழக்குகளும் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கர்நாடகத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த நித்தியானந்தாவின்முன்னாள் சீடர் ஆர்த்திராவ், நித்தியானந்தா மீது பாலியல் புகாரைக் கூறியிருந்தார்.
இந்தப் புகாருக்கு விளக்கம் கொடுப்பதற்காக நித்தியானந்தா சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் செய்தியாளர்களுடன் கை கலப்பில் நித்தியானந்தாவும் அவரது சீடர்களும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நித்தியானந்தாவை பிடதியில் இருந்து வெளியேற்றக் கோரி கன்னட அமைப்பினர் போராட்டமும் நடத்தினர்.
இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி அசம்பாவிதங்களை உருவாக்கி வரும் நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தை அரசு கையகப்படுத்தும் என்றும் கர்நாடக அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பிடதி ஆசிரமத்தைச் சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மேலும் பிடதி ஆசிரமம் பற்றி ராமநகர மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர் ஆகியோர் முதல்வர் சதானந்தா கவுடாவை இன்று காலை நேரில் சந்தித்து இரண்டு அறிக்கைகளையும் தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கைகளின் படி பிடதி ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை கைது செய்யவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நித்தியானந்தா ஆசிரம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரமத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவரது ஜாமீனை ரத்து செய்யவும் கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: