சனி, 16 ஜூலை, 2011

சங்கிலியன் சிலை விவகாரத்தை விஷமாக்கும் புலிப்பினாமிகளின் பரப்புரைகள்!

யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியனின் உருவச் சிலையை புதுப்பொலிவுடன் உருவாக்குவதற்காக பழைய சிலை மாநகரசபையால் அகற்றப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குடாநாட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ். மாநகரசபையின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் இறுதியாக நடைபெற்ற மாநகர பொதுக்கூட்டத்தில் முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டுள்ள சங்கிலிய மன்னனின் சிலையை உடைத்து புதிய சிலையை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில் இந்த சிலையை முழுமையாக புனரமைக்க வேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதனடிப்படையில் மாநகரசபையால் சங்கிலியனின் சிலை அகற்றப்பட்டு சிலை இருந்த பகுதி முற்றுமுழுதாக மறைக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.சரணபவனின் செய்தி
கடந்த 30 வருட கால யுத்தத்தில் குண்டுகள், சன்னங்கள் பட்டு சிலை உருக்குலைந்து விட்டது என்றும் – இதனால் சிலையை புனருத்தாரணம் செய்கின்றமை சாத்தியப்படாது என துறை சார்ந்த வல்லுனர்கள்  தெரிவித்துள்ள நிலையில் இந்திய சிற்ப கலைஞர்களால் புதிய சிலை வடிவமைக்கப்பட உள்ளதாக உண்மை நிலையினை ஆணையாளர் எடுத்துரைத்தார்.
ஆணையாளரின் விளக்கங்கள் இளவரசருக்கு பூரண திருப்தியை கொடுத்து உள்ள நிலையில்  சங்கிலியின் சிலை விவகாரம் தொடர்பாக புலிப்பினாமிகளால் முடுக்கிவிடப்பட்டுள்ள இணையத்தள பிரச்சாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கின்ற வகையில் இளவரசருக்கு மாநகர சபை ஆணையாளரால் அளிக்கப்பட்ட விளக்கம் அமைந்துள்ளது.
மாநகரசபை முதல்வரின் செய்தி

நல்லூர் முத்திரைச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலை இடித்து நொருக்கப்படுவதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்று யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். இந்தியாவின் பிரபல சிற்பக் கலைஞரான புருஷோத்மனின் கைவண்ணத்தில் சங்கிலியன் சிலையை மீள வடிவமைக்கவுள்ளதாகவும், இதற்கென ஒன்றரை இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் அது உயிரோட்டத்துடன் புதிதாக உருவாக்கப்படவிருப்பதாக யாழ் மாநகரசபை உறுப்பினரும், சுகாதாரக்குழுத் தலைவருமான மங்கள நேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னனான சங்கிலியனின் உருவச்சிலை உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதனாலும், வீதி பெரிதாக்கும் பணிகளிற்கு இடையூறாக உள்ள காரணத்தினாலும், இந்தச் சிலையை புதிதாக நிர்மாணிக்கவேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.
குட்டையைக் குழப்பும் செய்திகள்
சங்கிலியனின் சிலை தொடர்பான உண்மையான செய்திகள் இவ்வாறு அமைந்திருக்க புலிப்பினாமிகளால் நடத்தப்படும் இணையங்கள் சங்கிலியன் சிலை திட்டமிட்டு ஸ்ரீலங்கா அரசினால் இடிக்கப்பட்டது. தமிழரின் வரலாற்று சின்னங்களை அழிப்பது என்பது தமிழரின் அடையாளத்தை அழிப்பது, தமிழர்களின் வரலாற்றை, தமிழர்களின் அடையாளத்தை அழிப்பது,என ஸ்ரீலங்கா அரசு திட்டமிட்டுச் செயற்படுகின்றது. ஈபிடிபி துணைநிற்கின்றது.. சங்கிலியினின் வாள் அகற்றப்படவுள்ளது. சங்கிலியினின் வாளை அகற்றுவதானால் ஸ்ரீலங்காவின் தேசியக்கொடியிலுள்ள சிங்கம் ஏந்தி நிற்கும் வாளையும் அகற்றவேண்டுமே.. இப்படி ……ஒன்றல்ல பல்லாயிரம்…..  அவர்களின் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு அவர்களது மனதில் வந்ததையெல்லாம் செய்திகளாக… கட்டுரைகளாக….. பவனி வர விட்டுள்ளார்கள்…
வதந்திகளை இணையத்தளங்கள் மூலம் உலகெங்கும் பரந்து வாழும் புலம் (புலன்) பெயர் தமிழர்களுக்கு பரப்பியே பழக்கப்பட்டுப் போனவர்கள் இந்த சிலை விடயத்தையும் விட்டு வைக்கவில்லை.
இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் எமது மக்களுக்கு சமாதி கட்டுவதற்கு எப்படி எப்படி எல்லாம் புலம்பெயர்நாடுகளில் தமது பரப்புரைகளைக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்தார்களோ (உலைத்தார்கள்) அப்படியே இன்றும் இந்த சங்கிலியின் சிலை விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கி தமிழர் சின்னம் அளிக்கப்பட்டு விடுகின்றது , தமிழ் மக்களின் விடுதலை உணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன  என்று உச்சாரத்தொனியில் கூப்பாடு போடுகின்றார்கள். இந்தக் கூப்பாடுகளை இவர்கள் இங்கிருந்து போட்டுவிட்டு தத்தம் புலம்பெயர் நாடுகளின் தேசியப் பிரஜைகளாக வலம் வருகின்றார்கள்.அங்குள்ளவர்களோ தங்கள் வாழ்க்கை நிலையினை நகர்த்திச் செல்ல அவஸ்தைப்படுகின்றார்கள்.அவர்களுக்கு சிலையிருந்தால் என்ன  வாள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன….?
அவ்வப்போது இந்த பிரச்சாரப் பரப்புரைகளை முடுக்கிவிட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் புலன்பெயர்ந்த மக்களுக்கு புலிப்பூச்சாண்டி, விடுதலை உணர்வு, தமிழ்த்தேசியம் என்றெல்லாம் உசுப்பேத்தி விடுவதில் இவர்கள் பலே கில்லாடிகள். ஆனால் இங்கு வாழும் இவர்களோ தமிழ்க்கலாச்சாரத்தையே கழற்றிவிட்டு மேற்கத்தைய நாகரீக மோகத்தில் தாமும் தம் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர். பொழுதுபோக்கிற்காக அவ்வப்போது தமிழ்த்தேசியத்தையும் புலிக்கொடியையும் பிடித்து ஆட்டுவதற்கு விழைகின்றார்கள். இந்தப் பரப்புரையாளர்களின் இளந்தலைமுறையினர் எத்தனை பேருக்கு தம் தாய்மொழி தமிழ் தெரியும் என்று கேட்டுப்பாருங்கள். அதற்குக் கூட பதில் அவரவர் வாழும் புலம்பெயர் நாட்டு மொழியில் தான் வரும்.
சங்கிலியின் சிலை விவகாரத்தை தீனியாக்கும் பரப்புரை செய்திகளை செய்திகளின் உண்மைத்தன்மை கண்டு வெளிக்கொணருங்கள். மீண்டும் மீண்டும் முள்ளிவாய்க்காலில் அங்கு வாழும் எமது மக்களைத் கொண்டு போய் தள்ளுவதற்கு முண்டியடிக்காதீர்கள். நீங்கள் விடுமுறைக்குச் சென்று பார்த்து வருவதற்கு சங்கிலியின் சிலை தேவைப்படுவதற்காய் ஆக்ரோஷமாக கத்துகின்றீர்களோ தெரியவில்லை.அல்லது உங்கள் வாரிசுகளுக்கு உங்களது அடையாளமாக நல்லூரிலுள்ள சங்கிலியன் சிலையை மட்டும் தான் சொல்லி வைத்துள்ளீர்களோ தெரியவில்லை.
புலம்பெயர்ந்து வாழும் நாம் எமது எந்த தமிழ் தேசிய அடையாளத்தை பேணிப் பாதுகாத்து வைத்திருக்கின்றோம் என்ற வினாவுக்கு நாம் என்ன விடை பகிரலாம்……? ஒன்றுமே இல்லை… நாட்டில் வாழும் சொந்தங்களின் நலன்களில் அக்கறை கொள்ளுங்கள். அவர்களுக்கு இருப்பிடம், கல்வி, மருத்துவம் இந்த வகையில் உதவுவதற்கு உங்களது பரப்புரைகளை பயன்படுத்துங்கள். அதனை விட்டு பொய்யான செய்திகளை பரப்பி அவற்றுக்கு கட்டுரைகளும் புனைந்து கதையளந்து வாழும் வாழ்க்கையை விட்டு விடுங்கள். அங்குள்ளவர்கள் உங்களைக் கேட்டார்களா சங்கிலியன் சிலையை காப்பாற்றித் தாருங்கள்…அது தான் எங்களுக்கு சோறு போடும் . தேசியத்தைக் காக்கும் என்று……..
இனியாவது புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் உண்மைகளை உணர்ந்து இங்கு வாழும் புலியின் எச்சங்கள் வீசி எறியும் பரப்புரைகளுக்கு துணைபோகாமல் முள்ளிவாய்க்காலில் சிதறிப்போன நம் சொந்தங்களின் நல்வாழ்வுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிரத்தையுடன் சிந்தித்து செயற்படுவோம்.
புலம்பெயரும்போது நீங்கள் அனாதரவாக விட்டு வந்த சங்கிலியனின் சிலை புதுப்பொலிவுடன் மீண்டும் நல்லூர் முத்திரைச் சந்தையில் அமர்த்தப்படும். அடுத்த கோடைகால விடுமுறைக்கு செல்லும்போது நீங்கள் அதனைப் பார்த்து தமிழ்த்தேசியத்தின் அடையாளம் சிலை வடிவில் சிதைக்கப்படவில்லை என்பது உணர்ந்து கொள்வீர்கள். சங்கிலியன் சிலையில் வாள் வைக்கப்படவில்லை என்றால் நீங்கள் போகும் போது பவுணில் ஒரு வாளைச் செய்து கொண்டு போய் வைத்துவிட்டு வாருங்கள். தமிழ்த்தேசியத்தை காக்க காலம் காலமாய் புலம்பெயர்நாடுகளில் பவுண் கொடுத்தவர்கள் வரிசையில் உங்கள் பெயரும்  இடம்பெறலாம்.
-நல்லூரான்

கருத்துகள் இல்லை: