சென்னை: நில அபகரிப்பை விசாரிக்க தனி போலீஸ் பிரிவு உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, சிறுதாவூர் தலித் நில ஆக்கிரமிப்பையும் விசாரித்து நடவடிக்கை எடுப்பாரா என்று தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நில அபகரிப்பை விசாரிக்க தனி போலீஸ் பிரிவு- என்ற தலைப்பில் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிவிப்பைச் செய்துள்ளார். அந்த அறிவிப்பில் வழக்கம் போல் என் மீதும், என் தலைமையிலே உள்ள தி.மு.கவினர் மீதும், என் குடும்பத்தினர் மீதும் சேறு வாரி இறைத்துள்ளார்.
அது போகட்டும்! ஆனால் அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் காணப்படுவது போல- அவர் அமைக்கும் தனி போலீஸ் பிரிவு, நில அபகரிப்பை விசாரிப்பதற்கும், அதையொட்டி நியாயமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நமக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்பது மட்டுமல்ல - அந்தப் பணியை அம்மையாரின் ஆட்சி நியாயமாக சட்ட வழிமுறைகளின்படி நிறைவேற்றுமேயானால் அதைப் பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
உண்மையான வழக்குகளில் சிக்குகின்றவர்கள் யாராயினும் அவர்கள் கழகத்தவர்களாகவே இருப்பினும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்வதை நான் மனப்பூர்வமாக வரவேற்பவன் என்பது என்னுடைய ஆட்சிக் காலத்திலேயே, என் கட்சிக்காரர்களாக இருந்தவர்கள் சிலர் மீது பாரபட்சம் பார்க்காமல் நான் நடவடிக்கை எடுத்ததற்கும், அவர்கள் சிறைவாசம் செல்வதற்கும், அவர்கள் பதவி, பட்டங்களை இழந்ததற்கும் சான்றுகள் உண்டு.
ஆனால் இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கையில் நில அபகரிப்பை விசாரிக்கவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அமைக்கப்பட்டுள்ள தனி போலீஸ் பிரிவு 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற நில அபகரிப்பைப் பற்றி மட்டும் தான் விசாரிக்கும் என்று அறிவித்திருப்பதுதான் வியப்புக்குரியதாக இருக்கிறது.
2006 முதல் 2011 வரை நடைபெற்ற தி.மு.க. காலத்தில்தான் தனியார் நிலங்கள் அபகரிப்பு என்று அம்மையார் சொல்வாரேயானால்- இந்தக் காலக் கட்டத்திற்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த நில அபகரிப்புகளையெல்லாம் எந்தத் தனி போலீஸ் பிரிவைக் கொண்டு அம்மையார் விசாரிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
ஏனென்றால் யார்-யார் நிலங்களை யார்-யார் அபகரித்து தங்கள் நிலங்களோடு சேர்த்துக் கொண்டார்கள் என்பதையெல்லாம் அ.தி.மு.கவின் தோழமைக் கட்சியான கம்யூனிஸ்டு கட்சி நண்பர்களே கடந்த காலத்தில் புகார் மனுக்களாக அரசாங்கத்திடம் கொடுத்து- அதற்கு விசாரணையும், நடவடிக்கைகளும் வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள்.
எனவே 2006 முதல் 2011 வரை என்றில்லாம் 2006க்கு முன்பே நடைபெற்ற நில அபகரிப்புகளையும்- விசாரித்துக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுதான் எல்லோருடைய கருத்துமாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மோசடியாக பறிக்கப்பட்ட நிலத்தை மீட்டு பாதிக்கப்பட்ட சிறுதாவூர் தலித் மக்களுக்கு வழங்கிடுக என்ற தலைப்புடன் 13-5-2010 அன்று வெளியிட்ட பத்திரிகை செய்தியில், சிறுதாவூர் கிராமத்தில் தலித் மற்றும் இதர சமூகத்தைச் சேர்ந்த நிலமற்ற ஏழைகள் 20 குடும்பங்களுக்கு 1967-ம் ஆண்டு அரசால் வழங்கப்பட்ட நிலம் மற்றவர்களால் மோசடியாக அபரிக்கப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் வரதராசன் பாதிக்கப்பட்ட மக்களுடன் தமிழக முதல்வரை சந்தித்து மனு அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. கமிஷன் தனது அறிக்கையை 2 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. கம்யூனிஸ்டுகளின் வேண்டுகோளின்படி நில அபகரிப்பைப் பற்றி விசாரிப்பதற்காகவே அமைக்கப்பட்ட நீதியரசர் சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கையை நில அபகரிப்பை விசாரிக்க தனிப்பிரிவு அமைத்துள்ள அம்மையார் படித்துப் பார்த்து அதன்படியும் நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டவரல்லவா? என்ற ஐயப்பாட்டிற்கும் அவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஒரு கால கட்டத்தில் ஒருவர் முறைப்படி விற்பனை செய்த நிலத்தை இப்போது அதே இடம் இன்னும் அதிக விலைக்கு போகும் என்பதால் தன்னை ஏமாற்றி தன் நிலத்தை அபகரித்துக் கொண்டவர்கள் என்று ஒவ்வொருவரும் கூறி அம்மையார் அமைத்துள்ள தனி போலீஸ் பிரிவின் துணையை நாடுவோர்களும் உண்டு. அந்தப் பிரிவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு கொள்ளையடிக்க முனைவோரும் உண்டு.
இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் உண்மையிலே நியாய விலை கொடுத்து வாங்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்கள் மீது வேண்டுமென்றே இந்த பிரிவு பாயக்கூடாது என்றும் சில அ.தி.மு.க. ஆதரவு நாளேடுகளே குறிப்பிட்டிருப்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.
நில அபகரிப்பு, நில மோசடி என்பதெல்லாம் தவறு தான். ஆனால் அதை செய்தவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்தவர்கள் என்று மட்டும் இல்லாமல் இந்தத் தவறைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்தக் காலத்தில் செய்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு அரசு முன் வருவது தான் பொருத்தமாக இருக்க முடியும். இல்லாவிட்டால் வேண்டுமென்றே ஒருசிலர் மீது பழி போடுவதற்காக எடுக்கப்பட்ட முடிவாகத் தான் இது இருக்க முடியும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
சிறுதாவூர், கொடநாட்டையும் சேர்க்க வேண்டும்-சிஐடியு:
இந் நிலையில் நில ஆக்கிரமிப்பு வழக்குகளில் சிறுதாவூர், கொடநாடு போன்றவற்றையும் சேர்த்து, உரியவர்களுக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய தொழிற்சங்க மையத்தின் 41வது ஆண்டு நிறைவு விழா சேலத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சிஐடியு தொழிற்சங்க பொதுச்செயலாளர் சௌந்திரராஜன்,
நில ஆக்கிரமிப்பு வழக்குகளில் சிறுதாவூர், கொடநாடு போன்றவற்றையும் சேர்த்து, உரியவர்களுக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும். எந்த நிலமாக இருந்தாலும், யாரிடம் இருந்து யார் பறித்திருந்தாலும் உரியவர்களுக்கு போக வேண்டும் என்பதில் நாங்கள் பின்வாங்கியதில்லை. அதற்கான வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றபோது, நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக