சென்னை : மோட்டார் பைக் தயாரிப்பு நிறுவனமான எய்சர் மோட்டார், புதிய தொழிற்சாலை அமைக்க தாம்பரத்தை அடுத்த ஒரகடம் சிப்காட் வளாகத்தில் 50 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு நேற்று ஒதுக்கியது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது: எய்சர் மோட்டார் நிறுவனம், (முன்னாள் ராயல் என்பீல்ட்) 1955ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. டூ வீலர் விற்பனை ஆண்டொன்றுக்கு 35 சதவீதம் வளர்ச்சி பெற்று வருகிறது. தற்போது,
ரூ.350 கோடி முதலீட்டில் உற்பத்தி திறனை 50 ஆயிரத்தில் இருந்து 1,50,000 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த விரிவாக்க திட்டத்தை தமிழகத்தில் செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, எய்சர் மோட்டார் நிறுவன விரிவாக்கத்துக்கு, ஒரகடம் சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தார். அதற்கான ஆணையை அந்நிறுவன நிர்வாக இயக்குநர் சித்தார்த் லாலிடம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 300 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 600 பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஆர்வம்
சென்னை கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் முக்கிய வர்த்தக நகராகவும், முதலீடுக்கு ஏற்ற இடமாகவும் உருவாகி வருவதாக அமெரிக்க பொருளாதார துணை அமைச்சர் ராபர்ட் ஹார்மட்ஸ் கூறியுள்ளார். வாஷிங்டனில் நேற்று அவர் கூறுகையில், ‘‘இந்தியாவில் முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கு ஏற்ற நகரங்களில் சென்னை கடந்த சில ஆண்டுகளாக முக்கிய இடம் பிடித்துள்ளது. எனவே, வெளியுறவு அமைச்சர் ஹில்லரி இந்த முறை பயணத்தின்போது சென்னை செல்கிறார். இந்தியா & அமெரிக்கா இடையே வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவரது பயணம் அமையும்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக