வியாழன், 14 ஜூலை, 2011

திரையுலகைப் புரட்டிப் போட்ட சன் பிக்சர்ஸ் கிளவுட் நைன்,ரெட் ஜெயன்ட் அஸ்தமனத்தில்'?

தமிழ்த் திரையுலகைப் புரட்டிப் போட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் இனிமேல் எழ முடியாது என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத நிறுவனங்கள் எத்தனையோ. ஏவிஎம், ஜெமினி என பல நிறுவனங்கள் சகாப்தங்களைக் கண்ட திரையுலகம் தமிழ். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இவை எதுவுமே தமிழில் படமெடுக்க முடியாத நிலை. இவர்களை விட மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் சிறு படத் தயாரிப்பாளர்கள்தான். சிறிய அளவிலான முதலீட்டில் படம் எடுத்து அதில் வரும் லாபத்தை வைத்து பிழைத்து வந்தவர்கள் இவர்கள்.

இப்படி அத்தனை பேரின் பிழைப்பிலும் கிட்டத்தட்ட மண்ணைப் போட்டு மூடிய நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்கிறார்கள் அதனால் பாதிக்கப்பட்ட திரையுலகினர்.

எங்கிருந்தோ வந்த டைனசோர் போல தடாலடியாக வந்து திரையுலகத்தையே வளைத்துப் போட்டு விட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது திரையுலகினரின் கருத்து.

ஆரம்பத்தி்ல விநியோகத்தில் இறங்கியது சன் பிக்சர்ஸ். அதாவது படத்தை எடுத்து முடித்து விட்டு அதை வெளியிட்டால் லாபம் கிடைக்குமா, நஷ்டம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களை அணுகி, அவர்களது தயாரிப்புச் செல்வை முழுமையாக கையில் கொடுத்து படத்தை அப்படியே வாங்கியது சன் பிக்சர்ஸ்.

இது ரிஸ்க் எடுக்கும் வாய்ப்பைக் குறைத்து, லாபத்தையும் கொடுத்ததால் பல தயாரிப்பாளர்கள் சன் பிக்சர்ஸிடம் படத்தைக் கொடுக்க முண்டியடித்தனர். ஆனால் அது நாளடைவில் சன் பிக்சர்ஸிடம்தான் படத்தைக் கொடுத்தாக வேண்டும் என்ற கஷ்ட காலத்திற்கு தயாரிப்பாளர்களைத் தள்ளி விட்டது.

ஆரம்பத்தில் சன் பிக்சர்ஸ் காட்டிய வழி சிறப்பாக இருப்பதாக கருதிய தயாரிப்பாளர்களுக்கு, பின்னர்தான் அது திரும்பி வரவே முடியாத ஒத்தையடிப் பாதை என்பது தெரிய வந்து திடுக்கிட்டனர்.

ஆனால் அவர்கள் விழித்து எழுவதற்குள் ரெட் ஜெயன்ட் மூவிஸ், கிளவுட் நைன் மூவிஸ் என்று கருணாநிதி குடும்பத்தினர் படையெடுத்து வந்து விட்டனர். இதனால் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ், தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என முக்கோணச் சிக்கலில் மாட்டிக் கொண்டனர் தமிழ்த் திரையுலகினர். எப்படி 'பெர்முடா' முக்கோணத்தில் சிக்கினால் அதோ கதியோ, அதே நிலைதான் தமிழ்ச் சினிமாக்காரர்களுக்கும் ஏற்பட்டது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்தனை காலத்தில் வாங்கி விநியோகித்த படங்களின் எண்ணிக்கை 18 ஆகும். அவர்கள் வாங்கி விநியோகித்த முதல் படம் காதலில் விழுந்தேன். கடைசியாக விநியோகித்த படம் எங்கேயும் காதல்.

சன் பிக்சர்ஸ் இதுவரை ஒரே ஒரு படத்தை மட்டுமே தயாரித்துள்ளது. அது ரஜினிகாந்த் நடித்த எந்திரன். இப்படத்தின் மூலம் ரூ. 179 கோடி அளவுக்கு சன் பிக்சர்ஸ் லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸால், சன் டிவிக்கு கிடைத்து வந்த லாபம் கிட்டத்தட்ட 11.5 சதவீதமாகும்.

சன் பிக்சர்ஸ் மீது தற்போது பெருமளவில் மோசடிப் புகார்களும், பண முறைகேடு புகார்களும் குவி்ந்து வருவதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவிலேயே முடங்கி விடும் என்று திரையுலகில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை: