வியாழன், 14 ஜூலை, 2011

வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மீது போர்க்குற்ற விசாரணை அவசியம்

- லியம் பொக்ஸுக்கு கொழும்பு ஆலோசனை

புதன்கிழமை, 13 யூலை 2011, 01:55.13 PM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் கொழும்புக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தும் வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களை நெருக்கடிகளுக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்களை இணைத்துக்கொண்டமை தொடர்பாக விடுதலைப் புலிகளிற்கு ஆதரவான வெளிநாட்டு தமிழ் அமைப்புகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக முன்வைத்து இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்த அரசாங்கம் திட்டம் போட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வெளிநாட்டு தமிழ் அமைப்புகள், சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் இணைத்துக்கொண்ட விடயத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்தளபதிகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு வெளிநாடுகளில் நிதி சேகரித்து ஆயுதங்களை கொள்வனவு செய்து அனுப்பிய வெளிநாட்டு தமிழ் அமைப்புகளை பொறுப்பு கூறவைப்பதற்கான முனைப்புகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில் வடக்கு கிழக்கில் காணாமற்போன சிறுவர்கள் தொடர்பில் யுனிசெவ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை கடந்த 9ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸிடம் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ கையளித்துள்ளார். இதன் போது வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் சமுகமளித்திருந்தனர்.

கருத்துகள் இல்லை: