தயாநிதி மாறன், ஆ.ராசாவுக்குப் பதிலாக டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு)பதவியும் ஏ.கே.எஸ்.விஜயனுக்கு இணை அமைச்சர் பதவி
இன்று நடைபெறும் அமைச்சரவை மாற்றத்தின்போது தமிழகத்தைச் சேர்ந்த இருவரின் அமைச்சுகள் மாற்றப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சரவை மாற்றம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இல்லத்தில் சனிக்கிழமை மதியம் ஆலோசனை நடைபெற்றது. முன்னதாக பிரதமரை மத்திய அமைச்சர் கபில் சிபல் சந்தித்தார். அப்போது கபில் சிபல் வசம் உள்ள கூடுதல் பொறுப்பை அவரிடமிருந்து திரும்பப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னர் சோனியா காந்தியும் பிரதமரும் அமைச்சரவை குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை பிரணாப் சென்னையில் சனிக்கிழமை சந்தித்தபோது பதவி விலகிய தயாநிதி மாறன் உடன் இருந்துள்ளார். இது காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க இயலாத நிலையை கருணாநிதியின் கவனத்துக்கு பிரணாப் கொண்டு வந்ததாகத் தெரிகிறது. அத்துடன், இப்போது இணை அமைச்சராக உள்ள பழனி மாணிக்கத்தை வேறு துறைகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் பிரணாப் தெரிவித்ததாகக் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.
தி.மு.க. சார்பில் அமைச்சரவை அமைச்சராக உள்ள மு.க.அழகிரிக்கு சுமை இல்லாத ஒரு துறையை ஒதுக்குவது என்று பிரதமர் முடிவு செய்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் ரசாயனம் உரத்துறைக்குப் பதிலாக புதிய அமைச்சை ஒதுக்குவது குறித்து கருணாநிதியின் கவனத்துக்கு பிரணாப் கொண்டு வந்ததாகவும் தெரிகிறது.
தயாநிதி மாறன், ஆ.ராசாவுக்குப் பதிலாக டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு)பதவியும் ஏ.கே.எஸ்.விஜயனுக்கு இணை அமைச்சர் பதவியும் அளிப்பது என கருணாநிதி பிரணாப் முகர்ஜி இடையிலான பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.
அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது. எனவே கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்போது கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி.கே.வாசன் மாநிலத் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே அவரிடம் உள்ள கப்பல் போக்குவரத்துத் துறைக்குப் பதில் சுமை அதிகம் இல்லாத சுற்றுலாத் துறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக