டெல்லி: 2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் என சரமாரியான ஊழல் புகார்களில் சிக்கித் தவித்து வரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் இன்னொரு முறைகேடு குறித்த தகவலை மத்திய தலைமைக் கணக்கு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இந்த சிக்கலில் மத்திய தொலைத் தொடர்புத்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் சிக்கியுள்ளார்.
கபில் சிபல் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தபோது நடந்த முறைகேடு குறித்த விவரத்தை சிஏஜியின் வாஷிங்டன் பிரிவு கண்டறிந்து வெளியிட்டுள்ளது.
கபில் சிபல், அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தபோது, அமெரிக்காவில் செட்டிலான 5 லட்சம் இந்திய வம்சவாளி தொழிலாளர்கள் குறித்த டேட்டா பேஸை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 3 கட்டமாக இந்தப் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்தப் பணியை மேற்கொள்வதற்கான உரிமையை வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள், விதி மீறல்கள் நடந்துள்ளதாக சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.
அதாவது விதிமுறைகளுக்குப் புறம்பாக, பொது நிதி விதிகளுக்கு மாறாக, மேரிலேன்ட்டைச் சேர்ந்த பீனிக்ஸ் ரோஸ் எல்எல்சி என்ற நிறுவனத்தை சிபல் தேர்வு செய்து அந்த நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்துள்ளார் என்று சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பணிக்கான செலவுத் தொகையாக 1,20,000 டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பணியை ஏற்றுக் கொண்ட அந்த அமெரிக்க நிறுவனம், 3 ஆண்டுகளிலேயே தனது வேலையை அப்படியே நிறுத்தி விட்டது. அதாவது இலக்கு குறிக்கப்பட்ட பணியில் 16 சதவீதத்தை மட்டுமே அது செய்து அத்துடன் நிறுத்தி விட்டது.
ஆனால் முதல் கட்டப் பணிகள் முடிவதற்கு முன்பாகவே அந்த நிறுவனத்திற்கு திட்ட செலவுத் தொகையில் பெரும்பாலான பணத்தை கபில் சிபல் ஒதுக்கி விட்டார்.
2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25,000 டாலர், ஆகஸ்ட் மாதம் 26,200 டாலர் மற்றும் டிசம்பர் மாதத்தில் 38,000 டாலர் என பெரும் தொகையை அந்த நிறுவனத்திற்கு சிபல் ஒதுக்கியுள்ளார்.
மொத்தம் 20,000 பேரின் தகவல்களை முதல் கட்டத்தில் அந்த நிறுவனம் முடித்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 3300 பேர் குறித்த தகவல்களை மட்டுமே அது திரட்டியிருந்தது. அதிலும், எட்டே எட்டு பேரின் தகவல்களை மட்டுமே அது டேட்டா பேஸில் ஏற்றியிருந்தது.
முதல் கட்டப் பணிகளின் இலக்கை அந்த நிறுவனம் சரிவர நிறைவேற்றாத நிலையில், 2வது கட்டப் பணிக்காக அந்த நிறுவனத்திற்கு 30,000 டாலரை அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒதுக்கியது மிகவும் முறைகேடானது என்று சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.
வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள சிஏசியின் முதன்மை இயக்குநர்தான் இந்த முறைகேட்டை கண்டுபிடித்து அதுகுறித்த அறிக்கையை சிஏஜிக்கு அனுப்பியுள்ளார். இந்த தேவையில்லாத பண விரையத்தால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட ஒருவருக்கு சாதகமாக அறிவியல் தொழில்நுட்பத் துறை செயல்பட்டிருப்பதாகவும் அது கூறியுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய தூதரகத்தில் அறிவியல் ஆலோசகராக இருந்த டாக்டர் கே.சி. திவிவேதிதான் ஆலோசனை தெரிவித்துள்ளார். ஆனால் இந்தத் திட்டத்திற்கான ஒப்புதலை அளித்தவர் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் என்று சிஏஜி தெளிவாக கூறியுள்ளது.
திட்டத்தை செயல்படுத்துவதையும், அதை செயல்படுத்தும் நிறுவனத்தை தேர்வு செய்வதையும், அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர்தான் மேற்கொண்டார் எனறு திவிவேதி குறிப்பிட்டதாக சிஏஜி தெரிவித்துள்ளது.
மேலும் மேரிலேன்ட் நிறுவனத்தை தேர்வு செய்தது ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நடக்கவில்லை என்றும் திவிவேதி கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து சிபல் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்த முறைகேடுகள் குறித்த சிஏஜியின் அறிக்கை வருகிற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின்போது வைக்கப்படவுள்ளது. இந்த புதிய முறைகேடு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மேலும் ஒரு தலைவலியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக