சனி, 16 ஜூலை, 2011

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் - 5

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் - 5
5. புலிகளின் முகாமில் எனது முதல் சிறைவாசம்
Ltte prisonபுலிகளின் புலனாய்வுப் பிரிவினருடன் நான் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர், கடைசியாக ஒரு தடவை எனது மனைவி அவர்களிடம் “அவரை எப்ப விடுவியள்?” என வினவினார்.
அதற்கு அவர்கள் “இன்று இரவுக்குள்ளை அல்லது நாளைக்கு காலையிலை வந்திடுவார்” எனப் பதிலளித்தனர்.
இது முழுக்க முழுக்கப் பொய் என எனக்குத் தெரியும். ஏனெனில் பொதுவாக அப்போது நான் கேள்விப்பட்ட வகையில், புலிகள் ஒருவரை விசாரணைக்கென அழைத்துச் சென்றால், அது பாரதூரமான பிரச்சினையாக இல்லாவிட்டாலும் கூட, இரண்டு மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்வது வழமையில்லை என அறிந்திருந்தேன். இருந்தாலும், அவர்கள் பொய்யாகத்தன்னும் எனது மனைவிக்கு அவ்வாறு கூறியது, அவருக்கு ஒரு மன ஆறுதலை அளிக்கும் என நம்பினேன்.
வீட்டைவிட்டு வீதிக்கு வந்ததும் நான் அவர்களிடம், “சரி, இப்ப எண்டாலும் எனக்கு உண்மையைச் சொல்லுங்கோ, என்னுடைய விசாரணை எப்ப முடியும்?” என வினவினேன்.
அதற்கு சின்னவன், “அது உங்கடை விசாரணையைப் பொறுத்தது” எனச் சுருக்கமாகப் பதிலளித்தான். அது சம்பந்தமாக வேறு எதுவும் அவன் என்னுடன் பேச விரும்பவில்லை என்பது தெரிந்தது. அதன் பின்னர் சின்னவன் கூட வந்த ஜெயந்தன் என்பவனிடம் ஏதோ சொல்லி சொல்லிவிட்டு, என்னை அவனது சைக்கிளில் ஏறும்படி கூறினான். ஆனால் ஜெயந்தன் சற்றுத் தயங்கி நின்றான். அதைக்கண்ட சின்னவன், “அவர் பிரச்சனையான ஆளில்லை. நீ பயப்பிடாமல் கொண்டு போ” என அவனுக்கு உத்தரவிடுவது போலச் சொன்னான்.
அதன்பின்னர் ஜெயந்தன் என்னைத் தனது சைக்கிளில் ஏற்றிக்கொள்ள, சின்னவனும் அவனுடன் கூட வந்த மற்றவனும் வேறு ஒரு வீதியில் திரும்பிச் செல்ல ஆரம்பித்தனர்.
ஜெயந்தன் என்னை ஏற்றிக்கொண்டு நல்லூர் கந்தசாமி கோவில் பின் வீதியால் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது முதல்நாள் நத்தார் பண்டிகையை ஒட்டி, நத்தார் தாத்தா வேடம் தரித்த ஒருவருடன் சில இளைஞர்களும் சிறுவர்களும் அவ்வீதி வழியால் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களைக் கண்ட ஜெயந்தனுக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறிவிட்டது. அவர்களுக்குக் கேட்காமல் எனக்கு மட்டும் கேட்கக்கூடியதாக, அவர்களை இதில் எழுதமுடியாத தூசண வார்த்தைகளால் திட்டினான். அவனது வசையின் சாராம்சம் இதுதான்: “பேய்ப் .....மக்களே நாங்கள் கஸ்டப்பட்டு ஆமியோடை சண்டை பிடிச்சுச்சாக, உங்களுக்கு முசுப்பாத்தியும் கொண்டாட்டமுமோடா”.
அதன்பின்னர், அவன் என்னை நல்லூர் கோவிலுக்கு அருகிலுள்ள பண்டாரக்குளம் ஒழுங்கையால் கொண்டு சென்று, அங்கிருந்த ஒரு இரண்டு மாடி வீட்டுக்குள் நுழைந்தான். அந்த வீட்டுக்குள் நுழைவதற்குத் திரும்பும் போது, அதற்கு முன்பாக, அந்த ஒழுங்கையில் இருக்கின்ற எனது நெருங்கிய உறவினர் ஒருவர் வேறு ஒருவருடன் கதைத்துக்கொண்டு நிற்பதைக்  கண்டேன்.
எனக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்ற, அவரை நோக்கிக் கையை அசைத்தேன். ஏனெனில் அவர் என்னைக் கண்டுவிட்டார் என்றால், பின்னர் புலிகள் என்னைக் கைதுசெய்ததை அறியும் போது, இந்த வீட்டுக்குள்தான் அவர்கள் என்னைக்கொண்டு சென்றார்கள் என்பதை எனது வீட்டாருக்கு அவர் தெரிவிக்க வாய்ப்பாக இருக்கும் என நான் நம்பினேன். ஆனால் எனது தூரதிஸ்டம், அவர் என்னைக் கவனிக்கவேயில்லை. அத்துடன் என்னைக்கொண்டு சென்றவனும் நான் அவருக்குக் கைகாட்டியதை அவதானித்துவிட்டு, வேகமாக என்னை உள்ளே கொண்டு சென்றுவிட்டான்.
என்னைக் கொண்டுசென்ற முகாம், புலிகளின் புலனாய்வுப்பிரிவு முக்கிய நபர்களில் ஒருவனான ‘பைப்’ என்பவனின் பொறுப்பில் உள்ள ஒரு முகாம் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன். புலிகளின் புலனாய்வுப் பிரிவிலுள்ள ஒவ்வொரு முக்கிய நபர்களின் பொறுப்பிலும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முகாம்கள் இருப்பது வழமை என்பதை நான் முன்னரே கேள்விப்பட்டிருந்தேன்.
இப்பொழுதுதான் என் வாழ்நாளில் முதல்தடவையாக நான் புலிகளின் ஒரு முகாமுக்குள் செல்கின்றேன். இதற்கு முன்னர் ஆயுதப்போராட்ட இயக்கங்களைப் பொறுத்தவரையில், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் ஓரிரு முகாம்களுக்கு மட்டுமே பொதுமக்களின் சில பிரச்சினைகள் சம்பந்தமாகச் சென்றிருக்கிறேன்.
மாலை மங்கும் அந்த நேரப்பொழுதில், நாம் அந்த முகாமுக்குள் சென்ற போது, அந்த இருமாடிக் கட்டிடத்திற்கு முன்னால் உள்ள வட்டவடிவமான ஒரு திறந்த கொட்டிலுக்குள், ஒருவன் ஒரு LMG துப்பாக்கியை வாசலை நோக்கிக் குறிபார்த்தபடி காவல் கடமையில் ஈடுபட்டிருந்தான். அவன் என்னை மிகவும் கூர்மையாகவும், ஒரு விரோத மனோபாவத்துடனும், எச்சரிக்கை உணர்வுடனும் நோக்குவதை நான் அவதானித்தேன்.
என்னைக் கொண்டு சென்றவன், அந்தக் கட்டிடத்தின் விறாந்தையிலுள்ள ஒரு வாங்கில் இருக்கும்படி எனக்குச் சொல்லிவிட்டு, காவல் கடமையில் இருந்தவனை நோக்கி “ இவர் இங்கை இருக்கட்டும். சின்னவன் அண்ணை இரவு வந்து பொறுப்பெடுப்பார்” எனக் கூறினான்.
“என்னெண்டாலும் ஆளை அறைக்குள்ளை விடு” என காவல் கடமையில் இருந்தவன் பதிலளித்தான்.
“அவர் பிரச்சனையான ஆள் இல்லை. இதிலை இருக்கட்டும்” என என்னைக்கொண்டு சென்றவன் திரும்பவும் கூறினான்.
“வேண்டாம், வேண்டாம். உவங்களை நம்பேலாது. நேற்று உப்பிடித்தான் ஒருதனை இருக்க விட, கம்பி நீட்டீட்டான். ஆனபடியாலை உள்ளுக்கைதான் விட வேணும்” என்று காவலில் நின்றவன் மீண்டும் திட்டவட்டமாகக் கூறினான்.
அதன் பின்னர் இன்னொருவன் வந்து, என்னை வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று, அறையொன்றைத் திறந்து உள்ளே போகும்படி கூறினான். மிகச்சிறிய அந்த அறையைத் திறந்ததுமே, நான் ஒருபோதுமே அனுபவித்திராத, சகிக்க முடியாத ஒரு துர்நாற்றம் மூக்கைத் துளைத்து தலைசுற்ற வைத்தது.
முதலில் அறைக்குள் இருந்த ஒன்றும் எனது கண்களுக்கு தெளிவாகப் புலப்படவில்லை. பின்னர் அறையின் ஒரு மூலையில் எரிந்து கொண்டிருந்த சிறிய மண்ணெண்ணெய் கைவிளக்கின் மங்கலான வெளிச்சத்தில், நான் அங்கு கண்ட காட்சி என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது!
தொடரும்


கருத்துகள் இல்லை: