புதன், 13 ஜூலை, 2011

.திருமாவளவன்: ஈழத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் வெறும் கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு

இனப்படுகொலைக் குற்றவாளி கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 இன்று சென்னையில் தொடங்கியது.

இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இதனை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு திருமாவளவன் பதில் அளித்தார்.

கேள்வி: ஈழத்தை ஆதரிக்கிற பல அமைப்புகள் தமிழகத்தில் இருக்கிறது. தனித் தனியாக போராடுவதைவிட கட்சியை மறந்து மற்ற மாநிலங்களைப் போல ஒற்றுமையோடு அனைவரும் போராடுகிற நிலை தமிழத்தில் ஏற்படுமா?

பதில்: அந்த முயற்சிகள் எல்லாம் எடுத்து நான் தோற்றுப்போன நிலையில்தான் இந்த முயற்சி எடுக்கிறோம். தமிழகத்தில் ஈழத்தை வெளிப்படையாக ஆதரிக்கிற கட்சிகள் மூன்றுதான். மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள். இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து ஒரு அணியை உருவாக்குவதற்கு என்று 2009 பாராளுமன்ற தேர்தலில் நான் போராடி பார்த்தேன். நெடுமாறன் அவர்களுடன் நான் இதைப்பற்றி பேசினேன்.

அன்று பாமகவும், மதிமுகவும் அதிமுகவை ஆதரித்து வந்தார்கள். என்னை திமுகவின் ஆதரவாளனாகவே பார்த்தார்கள். நான் அப்படி இருக்கவில்லை. திமுக அணியில் இருந்தபோதும் கூட, அவர்களோடு பயணம் செய்தேன். தமிழ்நாட்டில் திமுக எதிர்ப்பு, கருணாநிதியின் எதிர்ப்பு என்றே தமிழ்நாட்டில் ஈழப் பிரச்சனையை பார்க்கிறார்கள்.

இலங்கையை எதிர்ப்பதைவிட, சோனியா காந்தியை எதிர்ப்பதைவிட, ஈழத்துக்கு எதிரான சர்வதேச நாடுகளை அம்பலப்படுத்துவதைவிட தமிழ்நாட்டில் ஈழத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் வெறும் கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு என்கிற வகையில் இப்பிரச்சனையை சுருக்கி விட்டார்கள். இது ஒரு வெட்கக்கேடான, சாபக்கேடான நிலை.

கேள்வி: ஈழம் என்கிற ஒரு விஷயத்திற்காக இனி வரும் காலங்களிலாவது தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்கள் ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: வைகோவோடு கைகோர்ப்பதற்கும், நெடுமாறன் அவர்களோடு கைகோப்பதற்கும், பாமகவோடு கைகோப்பதற்கு நான் என்றும் தயாராக இருக்கிறேன். எந்த ஒரு நிபந்தனைகளும் இல்லாமல் ஈழத்தை ஆதரிக்கிறவர்களோடு பயணம் செய்ய நான் தயார் என்றார் திருமாவளவன்.

கருத்துகள் இல்லை: