புதன், 13 ஜூலை, 2011

ஐகோர்ட்டில் அனல்' பறந்தது சமச்சீர் கல்வி வழக்கு விசாரணையில்

சென்னை: சமச்சீர் கல்வி வழக்கு விசாரணையில், மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்தில், "அனல்' பறந்தது. இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் ஒத்திவைத்தார். சமச்சீர் கல்வி பாடத் திட்டம், புத்தகங்களை ஆராய, தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒன்பது பேர் குழு, தமது ஆய்வறிக்கையை கடந்த வாரம் ஐகோர்ட்டில் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை மீது நடந்துவந்த, மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் நேற்றுடன் முடிந்தது. நேற்று காலை 11 மணி முதல் மதியம் 1.15 மணி வரையிலும், உணவு இடைவேளைக்கு பின், 2.15 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், வழக்கறிஞர்களிடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர்கள் விடுதலை, சீனிவாசன், புரு÷ஷாத்தமன் ஆகியோரும், அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், சுப்ரீம் கோர்ட் சீனியர் வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார், மெட்ரிக் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் ஆகியோரும் வாதிட்டனர்.

ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய, "முதல் டிவிஷன் பெஞ்ச்' முன் நடந்த வழக்கறிஞர்களின் காரசார வாதம் விவரம்:

வழக்கறிஞர் விடுதலை: தமிழகத்தில் மொத்தம் ஒரு கோடியே 12 லட்சம் பள்ளி மாணவர்கள் உள்ளனர். இதில், பெரும்பகுதி மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் பயில்கின்றனர். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதை தரம் இல்லையென கூறி, இத்திட்டம் தொடர்பான சட்டத் தில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இது, முந்தைய அரசின் சட்டசபை நடவடிக்கைகளை மீறிய செயல். சமச்சீர் கல்விக்கு எதிரான மனநிலை கொண்டவர்களைக் கொண்டு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை செயலர் தயாரித்த ஆய்வறிக்கையில், குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கும், இப்பாடத் திட்டத்தின் பயன் கிடைக்கும்.

வழக்கறிஞர் புருஷோத்தமன்: தேசிய பாடத்திட்டத்தின் வழிகாட்டுதல் மற்றும் முத்துக்குமரன் கமிட்டியின் பரிந்துரையின்படி சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு முன், கல்வியாளர்கள், பெற்றோர் கருத்துகள் பெறப்பட்டன. இந்த ஆண்டு, பழைய பாடத்திட்டத்தை பின்பற்றுவதன் மூலம், மெட்ரிக் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுவர்.

அட்வகேட் ஜெனரல் நவநீதிகிருஷ்ணன்: முந்தைய தமிழக அரசு, சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வர அமைத்த குழுவில், சென்னை பல்கலை பேராசிரியர் பாலசுப்ரமணியன் போன்ற, பள்ளிக் கல்வியில் நிபுணத்துவம் பெறாதவர்கள் இடம்பெற்றிருந்தனர். இக்குழு, கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி, சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களுக்கு ஒரே நாளில் ஒப்புதல் அளித்தது. அவசர கதியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியில் தரம் இல்லை. மாணவர்களின் எதிர்காலம் கருதி, இதில் மாற்றம் கொண்டு வர வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது. இதனால், ஒரே நாளில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதில் அரசியலுக்கு இடம் இல்லை.

சுப்ரீம் கோர்ட் சீனியர் வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார்: கடந்த ஆண்டு ஒன்று மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது, 2 முதல் 5ம் வகுப்பு வரையிலும், 7 முதல் 10ம் வகுப்பு வரையிலும், நிபுணர் குழு ஒன்றை அமைத்து நன்கு ஆராய்ந்து இக்கல்வியை கொண்டு வரும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை, முந்தைய தமிழக அரசு செயல்படுத்தாததால், அப்பணியை தற்போதைய அரசு செய்ய வேண்டியுள்ளது. 1 மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை கொண்டுவர, கோர்ட் காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை. கல்வி போன்ற அடிப்படை விஷயங்களில், சட்ட திருத்தம் கொண்டுவர மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. எல்லாரும், 200 கோடி ரூபாய் செலவில் ஒன்பது கோடி சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விட்டதையே பெரிதாக பேசுகின்றனர். தமிழக அரசு, மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டுமென எண்ணுகிறது. தற்போதைய சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள், மாணவர்களின் படைப்பாற்றலை வளர்ப்பதாக இல்லை. சமச்சீர் கல்வியை ஆராய அமைக்கப்பட்ட குழுவில், மாநில பாடத்திட்டத்தை சார்ந்தவர்கள் இடம்பெறவில்லை என்று விமர்சிப்பவர்கள், இக்குழுவில் பள்ளிக் கல்வித் துறை இயக்குனரும் ஒரு உறுப்பினர் என்பதை மறந்து விட்டனர்.

வழக்கறிஞர் விஜயன்: தற்போது ஒன்று மற்றும் 6ம் வகுப்புகளுக்கு நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை தேவைப்பட்டால், ஐகோர்ட் ரத்து செய்யலாம் என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இது கோர்ட் அவமதிப்பு ஆகாது. எனவே, அடுத்த ஆண்டு முதல், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீர் கல்வியை கொண்டு வர ஐகோர்ட் உத்தரவிட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. இதையடுத்து, இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

கருத்துகள் இல்லை: