சென்னை : உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெறவுள்ள மாற்றுமுறைத் தீர்வு மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர். உயர் நீதிமன்ற இளம் வக்கீல்கள் கூட்டமைப்பை சேர்ந்த வக்கீல்கள் இளம்பரிதி, ராஜ்குமார், ஜெயப்பிரகாஷ், சுகேந்திரன் உள்ளிட்ட ஏராளமான வக்கீல்கள் நேற்று உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் விமலாவிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
நீதித்துறைதான் நாட்டை ஒளிமயமாக மாற்றுகிறது. கிரேக்க, ரோமானிய இதிகாசங்களிலும் இப்படித்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் வாழ்க்கையில் மரியாதையும் நீதியும் பிரிக்க முடியாதவைகளாக உள்ளன. மனு சாஸ்திரத்திலும் இதேதான் கூறப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் மாற்றுமுறை தீர்வு மையத்தின் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா 16ம் தேதி (இன்று) காலை 10.30 மணியளவில் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாநிலத்தின் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. விழா அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்த வழக்கில் பொங்களூரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
ஜெயலலிதா மீதான வழக்கின் விசாரணை தமிழகத்தில் நடைபெற்றால், விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற காரணத்தினாலும், அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கின் போக்கை அவரால் மாற்ற முடியும் என்ற காரணத்தினாலும்தான் வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் வரும் 27ம் தேதி ஜெயலலிதா ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தான் சம்மன் அனுப்பப்பட்டுள்ள ஒருவர், முதலமைச்சரக இருந்தாலும்கூட உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அமர்ந்திருக்கும் மேடையில் அவர்களுக்கு சமமாக மேடையில் அமர்ந்தால், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குக்கு அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.
நீதிபதிகள் அமரும் மேடையில் குற்றம் சாட்டப்பட்டவரும் அமர்வது ஏற்கக்கூடியதாக இருக்காது. அந்த மேடையில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ள முதல்வருடன் அமர்வதை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் தவிர்க்க வேண்டும். சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதாவது ஜெயலலிதாவிடம் நீதிபதி கேள்வி கேட்கும் நடைமுறை வந்துள்ள நிலையில் நீதித்துறையின் மாண்பை காக்க வேண்டியது தர்மமாகும். கறைபடிந்த அரசியல்வாதிகளுடன் ஒரே மேடையில் நீதிபதிகள் அமர்வது நல்ல நடைமுறை அல்ல.
எனவே, இந்த மனுவை பரிசீலித்து தற்போது எழுந்துள்ள இந்த அசாதாரணமான சூழலை தவிர்க்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதி சதாசிவம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக