கதிர்காம திருத்தல ஆடிவேல் மஹோற்சவத்தின் தீ மிதிப்பு இன்று (12 ஆம் திகதி) நடைபெறவுள்ளதாக பஷ்நாயக்க நிலமே சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.ஜுலை 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ் உற்சவத்தின் இறுதி நாள் ரன்தோலி பெரஹரா 15 ஆம் திகதி வீதியுலாவரவுள்ளதோடு 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நீர்வெட்டும் நிகழ்வோடு உற்சவம் நிறைவடையவுள்ளதோடு இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணம் உட்பட நாடு பூராவிலிருந்தும் பெரும் திரளான பக்தர்கள் கதிர்காம திருத்தல ஆடிவேல் மஹோற் சவத்தில் கலந்து கொள்ள வருகைதந்த வண்ணமுள்ளதாகவும் கதிர்காம திருத்தல பஸ்நாயக்க நிலமே சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
கதிர்காம தேவாலயத்தின் ஆடிவேல் மஹோற்சவத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்தே பாதயாத்திரையாக 25.000 இற்கும் மேற்பட்ட மக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து வருகை தந்துள்ளனர்.இவர்கள் மட்டக்களப்பு, அம்பாறை, அக்கரைப்பற்று, கோமாரி, திருக்கோவில், பொத்துவில், அருகம்பே, பாணம, உகந்தை மற்றும் குமண போன்ற பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் ஒரு மாதத்திற்கு முன்பு பாத யாத்திரையக பயணத்தை ஆரம்பித்து கும்புக்கன் ஓயாவை கடந்து யால தேசிய சரணால யத்தின் ஊடாக மாணிக்ககங்கையை கடந்து ஆரம்ப தினத்தில் கதிர்காமத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த இவர்கள் தொடர்ந்தும் 15 நாட்கள் தேவாலயத்தில் தங்கியிருந்து சமயக் கடமைகளில் ஈடுபட்டு நீர்வெட்டின் பின்பு பஸ்களில் ஊர் சென்றடைகின்றனர். இவர்கள் இங்கு தங்கி நிற்கும் காலங்களில் இவர்களது உணவு, சுகாதார மற்றும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை பஸ்நாயக்க நிலமே சஷிந்திர ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ளார்.இதேவேளை கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் வரலாற்று காணாத மக்கள் வெள்ளம் தினமும் அலைமோதுகின்றது.
சகல விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. ஆலய வளாகம், ஆலயச் சுற்றுப்புறச் சூழல் அனைத்திலும் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கியிருக்கின்றனர்.மாணிக்க கங்கையில் இரண்டு அடி நீர் சென்றபோதிலும் ஆலய வளாகத்திற்குட்பட்ட கங்கையில் குப்பை கூளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் செல்லக் கதிர்காமத்தில் கங்கையில் பக்தர்கள் திருப்தியுடன் நீராடி மகிழ்கின்றனர்.
கடைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இலட்சக்கணக்கான மக்கள் அங்குள்ள இரு குறுகிய ஒடுங்கிய பாலங்களூடாகவே உட்பிரவேசித்து வெளியேறவேண்டியுள்ளது. இதனால் விழா நேரங்களில் பலத்த நெரிசல் நிலவுகிறது.
யானை மிரண்டது
சனிக்கிழமையன்று இரவு இடம்பெற்ற பெரஹராவில் வந்த யானையொன்று மிரண்டதால் புனிதபூமி அல்லோல கல்லோலப்பட்டது. பெரஹரா ஆரம்பித்து 15 நிமிடம் சென்றவேளையில் இச்சம்பவம் இடம்பெற்றது. இரண்டாவதாக வந்த யானை வள்ளி அம்மன் ஆலயத்தை கடக்க முற்பட்ட வேளையில் திடீரென ஓடமுற்பட்டது.
முன்னே சென்ற பாண்ட் வாத்தியக்குழுவினர் சிதறி ஓட மக்கள் வெள்ளம் பெரும் சத்தத்துடன் சிதறி ஓடினர்.எங்கு பார்த்தாலும் ஒரே களேபரம். மக்கள் பெரும் பரபரப்புடன் பதற்றத்துடன் ஓடினர். யானையும் அப்பகுதியிலே அங்குமிங்கும் ஓடியது. யானைப்பாகன் பின் தொடர்ந்து ஒருவாறாக பிடித்து மின் கம்பத்தில் சங்கிலியால் கட்டியபோதும் மதம் பிடித்தது போல் ஆடிக் கொண்டிருந்தது.
மூவர் காயம்
யானைக் கிலியால் சிதறி ஓடியதில் மூவர் காயப்பட்டனர். பாண்ட் வாத்தியக் குழுவில் வந்த பெண் மூர்ச்சையற்று கிடந்தாள் மேலும் ஒருவர் படுகாயமுற்றார். பலருக்கு மிதிபட்ட காயங்கள் ஏற்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக