சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கல்வியாண்டில் பிற வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்துள்ளது. சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்று கூறி அதை இந்த ஆண்டில் பிற வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்துவதை நிறுத்து வைப்பது என்று முடிவு செய்தது. அதற்காக சமச்சீர் கல்வித் திட்டத்தில் திருத்தம் செய்தது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சமச்சீர் கல்வித் திட்டத்தை திருத்தும் தமிழக அரசின் முயற்சிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடரலாம் என்றும், 10-ம் வகுப்பு வரையிலான மற்ற வகுப்புகளுக்கு தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை வைத்து ஆராய வேண்டும் என்றும், அந்த குழுவின் அறி்ககையை வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி 9 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழுவும் ஆய்வு மேற்கொண்டு கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி தனது அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்பித்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி முதல் இது தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் முன்பு நடந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையின்போது சமச்சீர் கல்வியை இந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி மனு தாக்கல் செய்திருந்து ஓய்வு பெற்ற ஆசிரியை மனோன்மணி என்பவர் சார்பில் வழக்கறிஞர் விடுதலை ஆஜராகி வாதாடியதாவது,
தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 12 லட்சம் மாணவர்கள் உள்ளனர். இதில் 1 கோடியே 7 லட்சம் பேர் மாநில அரசின் பாடத் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், மீதமுள்ள 2 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் மெட்ரிக் பாடத் திட்டத்திலும் படிக்கிறார்கள்.
இப்படி பெரும்பான்மையான மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பதால் அவர்களின் மேம்பாட்டிற்கு சமச்சீர் கல்வித் திட்டம் மிகவும் அவசியம். ஆனால் இந்த மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய ஒருவர் கூட தற்போதைய நிபுணர் குழுவில் இல்லை.
சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயத் தான் நிபுணர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நிபுணர் குழு இந்தப் பணியை மேற்கொள்ளவில்லை என்றார்.
மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வராஜ் கூறியதாவது,
சமச்சீர் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள கணக்குப் பாடப் புத்தகத்தில் நிபுணர் குழு எந்த ஒரு குறையையும் கண்டுபிடிக்கவில்லை. மற்ற பாடப் புத்தகங்களில் நிபுணர் குழு கண்டுபிடித்துள்ள குறைகளுக்கான காரணங்கள் பொருத்தமாக இல்லை.
அதிலும் குறிப்பாக 8-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் தமிழ் நாடகத் துறை வளர்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பங்களிப்பு பற்றி ஒரு சில வரிகள் இருக்கின்றது என்பதற்காக அந்த புத்தகத்தையே நிபுணர் குழு நிராகரித்துள்ளது. அந்த குழு சுட்டிக்காட்டியுள்ள மற்ற குறைகளும் இது போன்று தான் உள்ளன.
எனவே, முறையான ஆய்வு நடத்தாத நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றார்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:
முந்தைய திமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு ஒரே நாளில் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்துவிட்டது. இதை ஏற்க முடியாது.
புதிய அரசு பொறுப்பேற்றவுடன் சமச்சீர் கல்வி குறித்து முதல்வருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. மாணவர்களின் கல்வி எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது.
அதனால் தான் தரமான சமச்சீர் கல்வி அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு ஒன்றும் கைவிடவில்லை. மாறாக குறைகளை சரி செய்து, தரமான சமச்சீர் கல்வியை மாணவர்களுக்கு அளிக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான உச்ச நீதிமன்றத்துக்கான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் கூறியதாவது:
சமச்சீர் கல்விச் சட்டத்தில் தமிழக அரசு மேற்கொண்ட சட்ட திருத்தம் செல்லக் கூடியது தான். அதற்கான அதிகராரமும் அதற்கு உண்டு.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தான் சமச்சீர் கல்வி குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. உரிய தகுதியுள்ளவர்கள் தான் அந்த குழுவில் உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நிபுணர் குழுவில் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்பது தவறான வாதமாகும்.
ஏனெனில், இந்த நிபுணர் குழுவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குத் தலைமைப் பொறுப்பில் உள்ள பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உள்ளார்.
இந்த நிபுணர் குழு ஆய்வு செய்து சமச்சீர் கல்வித் திட்டமும், பாட நூல்களும் தரமற்றவைகளாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. இன்னும் கூடுதலாக ஆய்வு செய்து குறைகளைக் களைந்து சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தான் அரசின் நோக்கம்.
ஆகையால் நடப்பு கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை செயல்படுத்துவது இல்லை என்ற தமிழக அரசின் முடிவு நியாயமானது தான் என்றார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் சமச்சீர் கல்வித் திட்ட வழக்கில் இத்துடன் வாதங்கள் முடிவடைவதாகவும், தீர்ப்பு தள்ளி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக