செவ்வாய், 12 ஜூலை, 2011

ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ். அங்காடிதெரு படத்தில் வருவதையும் மிஞ்சிய தொழிலாளர் ஒடுக்குமுறை

தேவி- செல்வராஜ்ஆனந்த்  எலக்ட்ரானிக்ஸ் அதிகாரி பெரியசாமிக்கு  செருப்படி!பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக முதலாளித்துவ பயங்கரவாதத்தின் மீது விழுந்த இடி! வீரப்பெண்மணி தேவி வாழ்க!
கூலி உழைப்பு மூலம் லாபத்தை குவிப்பது என்ற முதலாளித்துவ விதியின் படி குறைந்த கூலியை நோக்கி மூலதனம் ஓடுகிறது. அந்த வகையில் குறைந்த கூலியின் வடிங்களில் ஒன்றாக ஆண்,பெண் இடையேயான வேறுபாட்டைக் கண்டு பெண்களைப் பயன்படுத்துகிறது. ஆம், ஆணாதிக்க சமுதாயத்தின் அடிமை நிலைக்குத் தள்ளப்படும் பெண்கள் குறைந்த கூலியின் மூலம் மூலதனத்தைக் குவிக்கப் பயன்படும் கருவியாக உள்ளனர். இதுமட்டுமல்ல, பாலியல் ரீதியாகவும் ஆணாதிக்கம் என்ற வகையிலும் பெண்கள் ஒடுக்கப்படுவதும் நடக்கின்றன. இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்துதான் முதலாளித்துவ நிறுவனங்களில் பெண்கள் மீதான அடக்குமுறையாக வெளிப்படுகிறது.

ஒசூர் பிரிமியர் மில்லில் இளம் பெண் தொழிலாளர்கள் சுமங்கலித்திட்டம் என்ற பெயரில் கொத்தடிமையாக நடத்தப்பட்டு வதைக்கப்படுவது முதல் பல இடங்களில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் வெளிப்படையாக நடந்து வருகின்றன. இந்த ஒடுக்குமுறைகள் பெண்கள் மீது திணிக்கப்படுவதற்கும் பெண்கள் ஆண்களைவிட அதிகமாக சுரண்டப்படுவதற்கும் மேலும் சில காரணங்கள் உள்ளன. அதாவது, “பெண் என்றால் போராடமாட்டாள், பெண் என்றால் அடிமை, பெண்கள் எப்போதும் ஒற்றுமையை விரும்பமாட்டார்கள், சங்கம் சேரமாட்டார்கள், போராட்டம் என்றால் ஒதுங்கிக் கொள்வார்கள் காரணம் அவர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கறைக் கொண்டவர்கள்” என்றெல்லாம் முதலாளித்துவம் பெண்களுக்கு எதிராக கருத்துக்களை உருவாக்கி அந்தக் கோணத்திலேயே நடத்தியும் வருகிறது.
பெண்கள் குறித்து முதலாளித்துவம் உருவாக்கியுள்ள இந்த கருத்தாடல்கள், ஆணாதிக்கக் கருத்துக்கள் எல்லாவற்றையும் பொய் என்றும், பெண்கள் மீது திணித்து வரும் முதலாளித்துவ கொடிய அடக்குமுறைகள் அடித்து நொறுக்கப்படவேண்டியவை மட்டுமல்ல, அது நடைமுறையில் சாத்தியமானது என்றும் தனது நடைமுறை மூலம் நிரூபித்துள்ளார், ஒசூரை சேர்ந்த வீரப் பெண்மணி தேவி!
_____________________________________________
சூர் சிப்காட்-2ல் எலக்ட்ரானிக் சர்க்கியூட் போர்டுகளை உற்பத்தி செய்யும் ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் எனும் தனியார் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோடிக்கணக்கில் லாபமீட்டும் இவ்வாலையில் பணிபுரியும் நிரந்திரத் தொழிலாளர்களோ பெண்கள் உள்ளிட்டு சுமார் 25 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி ஆணைப் பெற்று அதன்படி தங்களது பயிற்சிக்காலம் இரண்டாண்டுகளுக்கும் மேல் முடித்தும் நிரந்திரம் செய்யப்படாததால், இனிமேலும், அற்பக்கூலியுடன் அடக்குமுறைகளோடு காலம் தள்ளமுடியாத நிலையில் கம்பெனியை விட்டு வெளியேறியுள்ளனர். இது மாதிரியான நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும் இழி சொற்களையும் சகித்துக் கொண்டு அங்கு வேலை செய்யும் பெண்களில் ஒருவர் தான் தேவி!

 விவசாய பெண் தேவி, தொழிலாளியான கதை!

அசோக் லேலாண்டில் வேலை செய்யும் தொழிலாளியான செல்வராஜ் , விருத்தாச்சலத்தை பூர்வீகமாகக் கொண்ட விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்தாண்டுகளுக்கும் மேலாக அசோக் லேலாண்டில் வேலை செய்து வருகிறார். விவசாயத்தின் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால், அவர் ஒசூரில் தொழிலாளி ஆன பின்னும், சிறிது நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வந்துள்ளார். சில கறவை மாடுகள் வாங்கி பராமரித்து வந்தார். இவருக்கு மனைவியாக அமைந்தவர்தான் தேவி. கணவரின் விவசாய வேலைக்கு உதவியாக இருந்து அதனை பராமரித்து வந்தார்.
விவசாயத்தின் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தாலும், மறுகாலனியாக்கத்தின் மூலமாக விவசாயம் செய்யமுடியாத சூழல் அவரையும் நிர்பந்தித்துள்ளது. பலமுறை பயிர் செய்தும் இவரால் வெற்றிகரமாக செய்ய இயலவில்லை. எதையாவது விவசாயத்தில் சாதிக்க முடியும் என்று கருதியவர், தான் நினைத்த வகையில் செய்ய முடியாத காரணத்தினால் அதனைக் கைவிட நேர்ந்தது. விவசாயத்தை கைவிட்டாலும் உழைக்காமல் இருப்பதை வழக்கமாக கொண்டிராத தேவி, வேலைக்கு செல்ல முற்பட்டார். பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்த தேவி, ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். விவசாயத்தில் அவர் காட்டிய அதே ஈடுபாட்டை முதலாளியின் கீழ் வேலை செய்யும் இந்த ஆலையிலும் காட்டினார். எல்லோரும் மனிதர்கள் என்று கருதும் இயல்பான விவசாய மனநிலையும், லாப நோக்கம் பார்க்காத அர்ப்பணிப்பான உழைப்பையும் முதலாளிக்குக் காட்டினார் தேவி! காசு தான் முதலாளித்துவத்தின் அடிப்படை என்பதையும், அதற்காக எப்படிப்பட்ட சுரண்டலையும் கொடிய அடக்குமுறையும் செய்வதற்கு அது தயாங்காது என்பதையும் புரிந்து கொள்ளும் மனநிலை அன்று தேவிக்கு இல்லை. ஆனால், முதலாளித்துவத்தின் விதி அவருக்கு புரியவைக்காமல் போகாது!

தொழிலாளியான தேவி வர்க்க உணர்வு பெற்ற கதை!

ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் முதலாளி முத்துசாமி. இவர் தனது மகளை சென்னையில் உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த பின், இவரும் மகளுடன் சென்று தங்கிவிட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை, அங்கே வேலை செய்து வந்த உற்பத்தி பிரிவு மேலாளர் பெரியசாமி என்பவனிடம் ஒப்படைத்துச் சென்றார். முத்துசாமி, பெரியசாமியிடம் ஆலை நிர்வாகத்தை ஒப்படைப்பதற்கு காரணமில்லாமல் இல்லை. 44 வயது அடைந்த அரைக்கிழடு பெரியசாமி, ஒரு வக்கிரப் புத்திக்காரன். தொழிலாளர்களை மனிதர்களாகக் கருதுவதைவிட, தொழிலாளர்களாகக் கருதுவதைவிட அடிமைகளாகவே கருதி நடத்துவதே அவனது இயல்பு.
இதனால், தொழிலாளர்களை எப்பொழுதும் ஒருமையில் தான் விளிப்பான். பெண்கள் என்பதற்காகக் கூட மரியாதையாகக் கூட நடத்தமாட்டான். “அங்காடித்தெரு” படத்தில் வரும் அண்ணாச்சியின் கைக்கூலி மேனஜரின் மறுவடிவம் தான் இந்த பெரியசாமி! ஆலையின் குடியிருப்பில் தங்கியுள்ள பெரியசாமி, முதலாளித்துவ நிர்வாகி என்பதைவிட ஒரு நிலப்பிரபுத்துவ ஆண்டை என்றால் அது சிறிதும் தவறல்ல. திருமணமாகி இரண்டு பிள்ளைகளை பெற்றுப் போட்ட பெரியசாமி, காமவெறியன் போல பெண்களிடம் எப்போதும் தகாதவார்த்தைகளை பேசுவதையே பழக்கமாகக் கொண்டவன்.
சட்டப்படி ஒரு தொழிலாளி 480 நாட்கள் நிறைவு செய்தால் அவரை நிரந்தரத் தொழிலாளியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கம்பெனியில் பணியில் அமர்த்தப்பட்ட மறுநாள் முதலாகவே, அவருக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., போன்ற அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும். ஆனால், இதனை முதலாளிகள் யாரும் ஒரு மயிரளவிற்குக் கூட மதிப்பதில்லை. அவரவருக்கு ஒரு விதியை வைத்துள்ளனர். இதனையும் முறையாகக் கையாள்வதில்லை.
ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் முதலாளியும் இதற்கு விதிவிலக்கல்ல. இரண்டாண்டுகள் பயிற்சி காலம், அதற்குபிறகு நிரந்தரம் செய்வதாக வாயளவில் சொல்கிறது, இந்த ஆலை நிர்வாகம். இரண்டாண்டுகள் முடிந்த பின்னர், அடுத்த மறுநாளிலிருந்தே அந்த தொழிலாளியிடமான பெரியசாமியின் அணுகுமுறை மாறிவிடும். முற்றிலுமான ஒரு மிருகமாக, நடந்து கொள்வான் பெரியசாமி. அசிங்கமான வார்த்தைகள், அதிக அளவில் ஒடுக்குமுறைகளை திணிக்கத் தொடங்குவான். ஒரு தொழிலாளி எவ்வளவு உண்மையாக வேலை செய்திருந்தாலும் அது பற்றி அவனுக்குக் கவலையில்லை, காரணம் கூலி அடிமைகள் எப்போதும் வாசலில் காத்துக் கிடக்கிறார்கள் என்ற திமிர் அவனுக்கு.
இதனால், பலரும் இரண்டாண்டுகள் பயிற்சி காலம் முடிந்த பின்னர், இந்த அடக்குமுறைகளை சகித்துக் கொள்ள முடியாமல், ஏன் வம்பு என்று கருதிக் கொண்டு தங்களது உரிமைக்காக போராடாமல் வேலையை விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். இதனை எதிர்ப்பார்த்திருக்கும் பெரியசாமி, அந்த இடத்திற்கு தேவையான அளவுக்கு புதிதாக ஆள் எடுப்பு செய்து கொள்வான். இது மட்டுமல்ல, இரண்டாண்டுகள் பயிற்சி காலம் முழுவதற்கும் இவர்களது கல்விச் சான்றிதழ்கள் எல்லாவற்றையும் வாங்கி வைத்துக் கொள்வான். இடையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்குக் கேட்டாலும் தரமாட்டான். வேறு நல்ல ஊதியத்தில் எங்காவது வேலை கிடைத்தாலும், சான்றிதழ் கொடுக்கமாட்டான். கல்விச் சான்றிதழ் கொடுக்குமாறு கேட்டாலும், “நான் உனக்கு நிரந்தர வேலை கொடுக்கப் போறேன், பிறகு எதற்கு சர்ட்டிபிக்கேட்” என்று கூறுவான்.
இவ்வளவு ஒடுக்குமுறைகளை செய்யும் பெரியசாமி, தொழிலாளிக்கு கூலியை மட்டும் சராசரி அளவிற்கு கொடுத்துவிடுவானா என்ன.? கூலியை குறைத்து கொடுப்பதற்குத்தான்  இவ்வளவு ஒடுக்குமுறைகளை செய்து வருகிறான். இந்த இரண்டாண்டுகள் தொழிலாளர்களுக்கு இவன் கொடுக்கும் கூலி ரூ.3,000க்கும் குறைவான தொகைதான்!
வேலைக்கு சேர்ந்த காலத்தில் உணராத தேவி, கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகள் பயிற்சி காலம் முடிந்த பின், தான் நேர்மையாக வேலை செய்துள்ளதால், வேலை நிரந்தரம் செய்யப்படுவோம் என்று நினைத்திருந்தார். ஆனால், இரண்டாண்டுகள் பயிற்சி காலம் முடிந்த மறுநாள், ஆலை நிர்வாகம், உனது வேலை நிலைமை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை, ஆகையால், ஆறுமாதங்கள் பயிற்சிகாலம் நீட்டிக்கப்பட்டதாக தெரிவித்தது.
இதனை அரைமனதாக ஏற்றுக் கொண்ட தேவி ஆலையில் அந்த ஆறுமாதங்களில் அதிகமான ஒடுக்குமுறைகள் சந்தித்து வந்தார். இந்த ஆறுமாதங்கள் நீட்டிக்கப்பட்ட பயிற்சி காலம் முடிந்த பின், வேலை நிரந்தரம் செய்ய சொல்லி கேட்ட தேவிக்கு மீண்டும் ஒரு முறை ஆறுமாதங்கள் பயிற்சி காலம் நீட்டிப்பு என்ற அறிவிப்பு மட்டும்தான் கிடைத்தது. மூன்றாவது முறை நீட்டிக்கமாட்டார்கள், பணி நிரந்தரம் செய்துவிடுவார்கள் என்று நம்பிய தேவி, அற்பக் கூலியான ரூ.3,500 ஐப் பெற்றுக் கொண்டு பொறுமையாக நிர்வாகத்தின் இழிச்சொற்களையும் கால நீட்டிப்பையும் தாங்கிக் கொண்டு வேலை செய்தார்.
கடந்த 5-.7.-2011 அன்று நீட்டிக்கப்பட்ட பயிற்சி காலம் முடிந்த தேவிக்கு  பணிநிரந்தர ஆணை கிடைக்கும் என நம்பி இருந்தார். ஆனால், அன்று ஆலையில் இவர் எதிர்பார்க்காத வகையில் மூன்றாவது முறையாக ஆறுமாதங்கள் பயிற்சி காலம் நீட்டிப்பு என்று கூறி, இதனை ஏற்றுக் கொண்டு கையெழுத்து இடுமாறு நிர்பந்தித்தான் பெரியசாமி. அதிர்ச்சியடைந்த தேவி, தனது கணவரின் ஒப்புதல் பெறாமல், கையெழுத்து போடமுடியாது என்று மறுத்தார். தனக்கு அடிமையாக வேலை செய்து வந்த தொழிலாளி அதுவும் ஒரு பெண் தனது உத்தரவை மீறி இவ்வாறு பேசுவதை எதிர்ப்பார்த்திராத பெரியசாமிக்கு, தேவியின் இந்த பதில் எரிச்சலை ஏற்படுத்தியது. மாடு போல உழைக்கும் தேவியை மிரட்டி பணியவைத்துவிடலாம் என்று கருதினான். இதனால், தேவியிடம் தகாத முறையில் பேசத் தொடங்கினான்.
“உன் புருசன் தான் உனக்கு இண்டர்வியூ வைச்சானா? உன் புருசன் தான் உன்னை வேலைக்கு வைச்சானா? உன் புருசன் தான் உனக்கு சம்பளம் தர்றானா?” என்று கேவலமாக பேசியுள்ளான். கூலிக்கு வேலை செய்கிறோம் என்பதற்காக, தனது கணவரை இழுத்து பேசுவதை சகித்துக் கொள்ள முடியாத தேவி, தனக்கு உரிய பி.எஃப்., எஃப்.பி.எஸ். போன்ற கணக்குகளை செட்டில் செய்து  கொடுக்குமாறும், வேலையைவிட்டு செல்வதாகவும் தேவி கூறியுள்ளார். “பணம் தாண்டி உனக்கு வேணும், வா, என்னோட வந்து படு எவ்வளவு வேணாலும் பணம் தர்றேன்..” என்றெல்லாம் ஆபாசமாக பேசியுள்ளான். கேவலம் பணத்திற்காக இவ்வளவு கேவலமான இழி வார்த்தைகளை சகித்துக் கொள்ள முடியாத தேவி நிலை குலைந்து போயுள்ளார்.

ஆணுக்குப் பின்னால் பெண் என்பதல்ல.. தேவிக்குப் பின்னால் ஒரு ஆண்!

மனநிலை கடுமையாக பாதித்த நிலையில் தனது கணவரிடம் நடந்ததையெல்லாம் கூறி தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி புழுங்கியுள்ளார். தனது மணைவிக்கு நேர்ந்த இந்த அவமானத்தைக் கேட்டு செல்வராஜும் ஆற்றாமைக்குள்ளாகியுள்ளார். இந்த ஆபாச வார்த்தைகளை சகித்துக் கொண்டு வேலைக்கு சென்றால் என்ன ஆகும்? வாய்க்கொழுப்பாக பேசியவன், நாளை கையைப்பிடுத்தும் இழுக்கமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இந்த கொடுமையை இனியும் பொறுப்பதா என்றெல்லாம் கொதித்துள்ளார்.
இவ்வளவு கேட்டபின் செல்வராஜ், “சாராசரி” மனிதரைப் போல வருத்தப்பட்டு ஒதுங்கிவிடவில்லை. மீசை முறுக்கிய “ஆண்கள்”  பலர் வீரம் பேசி ஒதுங்கி இருப்பது போல இவர் ஒதுங்கி இருக்கவில்லை. ஆண்மை என்றால், பெண்களை அடக்கியாள்வது என்பதல்ல, பெண்மைக்கு ஒரு அநீதி என்றால் அதற்கு எதிராக போராடுவது என்று உணர்ந்துள்ளார். தேவிக்கு நடந்த அவமானத்தை துடைக்கவில்லை என்றால், பெரியசாமியின் வக்கிர வார்த்தைகளை உமிழும் ஆணாதிக்க வாயை மூடமுடியாது என்று முடிவுக்கு வந்துள்ளார்.
தேவி- செல்வராஜ்
கணவரிடம் ஒத்துழைப்பு கிடைத்த தேவி, தனது அவமானத்தை துடைக்க மறுநாள் 06.07.2011   ஆலைக்குச் சென்றுள்ளார். தேவியை ஆலைக்குள் பார்த்த பெரியசாமி, தனக்கு ஒரு விசுவாசமான அடிமை தொடரப்போகிறது என்ற சந்தோசத்தில் இருந்துள்ளான். முதலாளித்துவத்தின் இந்த வக்கிர புத்திக்கு தேவியிடமிருந்து கிடைத்ததோ, வேறு! தனக்கு பணிநிரந்தம் செய்ய கோரிய தேவியிடம், ஆறு மாதங்கள்  பயிற்சி காலத்தை ஒப்புக்கொண்டு கையெழுத்து இடுமாறு கேட்க வேண்டிய பெரியசாமியோ, மேலும், ஆபாசமாக பேசத் தொடங்கினான். எப்படியும் பெரியசாமி நேற்று பேசியதற்கு வருத்தப்படுவதற்கு பதிலாக மேலும் மேலும் ஆபாசமாக பேசத் தொடங்கிய பின்னர், பேசிய வாய்கள் மூடுவதற்கு முன்பாக, பெரியசாமியின் முகத்தில் விழுந்தது, மிளகாய் பொடி! ஆபாச வார்த்தைகள் பேசிய பெரிய சாமியின் மூக்கிலும் வாயிலும் ஏறியது மிளகாய் பொடி.
தேவியின் உள்ளம் கொதிப்படைந்த அளவைவிட அதிகமாக, பெரியசாமியின் நுரையீரல் எரிச்சலடைந்தது. இறுமினான், ஊருக்கே கேட்கும் வகையில் இறுமினான், அந்த இறுமல் சத்தத்திலேயே முகத்திலும் வாயிலும் கன்னத்திலும் தேவியின் செருப்புகள் விளையாடின. கன்னம் வீங்க அலறினான். ஐயோ, ஐயோ என ஓலமிட்டான்! ஆலையின் சுவர்கள் எல்லாம் எதிரொலித்தன. பெரியசாமியின் வார்த்தைகள் செல்வராஜ், தேவியின் உள்ளங்களை எரித்ததோ, அதே அளவிற்கு தேவி வீசிய மிளகாய் பொடியும், செருப்படியும் பெரியசாமியை எரித்தது.
தொழிலாளர்கள் யாரும் நெருங்கவில்லை. அடிமைகள் எப்போதும் புரட்சியைப் பார்த்து திகைத்து நிற்பது போல, அதிர்ச்சி கலந்த சந்தோசத்தில் திக்கித்து நின்றனர். பெண் தொழிலாளர்கள் இது நாள் வரை அனுபவித்து வந்த அத்தனை துன்பங்களுக்கும், அத்தனை ஒடுக்குமுறைகளுக்கும் தனது செருப்பின் மூலம் பதிலடி கொடுத்தார் தேவி! புரட்சி என்பது ஒரு மாலை விருந்தோ, ஒரு அழகிய பூ வேலைப்பாடோ, ஒரு கவிதையைப் போன்றோ அவ்வளவு அழகானதல்ல. அது பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட வர்க்கம், தன்னை ஒடுக்கி வந்த வர்க்கத்தை தூக்கியேறியும் பலாத்கார நடவடிக்கை என்ற மாவோவின் சிந்தனைகள் உண்மை என்பதை தேவியின் இந்த நடவடிக்கைகள் நிரூபித்தன.

 ‘பெரியசாமி’ ஸ்டேசன்!

பெரியசாமியை அடித்த பின்னர், தனக்கு நிகழ்ந்த அநீதிக்கு ‘நீதி’ கிடைக்கும் என நம்பினார் தேவி. தேவி தான் ஏன் அடிக்க நேர்ந்தது என்றும், பெரியசாமியின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் போலீசுக்கு புகார் கடிதம் கொடுத்தார். ஆனால், போலீசோ பெரியசாமியின் அண்ணன்கள் தான் தாங்கள் என்பதை தேவிக்கு உணர்த்தத் தொடங்கினர். தேவியின் புகார் கடித்தத்தை வாங்காமல், போனில் பெரியசாமி சொன்னதற்கு விசுவாசமாக செயல்படத் தொடங்கினர். வழக்கம் போல, ஆலையின் உள்ளே நுழைந்து முதலில் தேவியைக் கைது செய்தது போலீசு. தேவியின் புகார் மனுவை வாங்க முடியாது என நிராகரித்தது.
தேவியின் புகார் மனு
தேவியின் புகார் மனு
தேவியின் புகார் மனு
தேவியின் புகார் மனு
தேவி மேலும் கொதிப்படைந்து தனக்கு நேர்ந்த அவமானத்தை போலீசிடம் தெரிவித்தார். “அவன் அப்படி பேசினா, நீ வந்து என்கிட்ட சொல்லவேண்டியதானே, சட்டத்தை நீயே கையில எடுத்துக்குவியா” என்று போலீசு கேட்கத்தொடங்கியது. பெரியசாமி பேசிய ஆபாச வார்த்தைகளைவிட போலீசின் இந்த வார்த்தைகள், அருவருப்பானதாகவும் ஆபாசமாகவும் தேவியின் காதில் ஒலிக்கத் தொடங்கியது.
இவர்கள் சொல்லும் சட்டப்படி பார்த்தால், ஒரு பெண்ணை ஆபாசமான வார்த்தைகளால் விளித்தது, பாலியல் ரீதியான வார்த்தைகளால் துன்புறுத்தியது, படுக்கைக்கு அழைத்தது, தொழிலாளி என்ற முறையில் பணிநிரந்தரம் செய்யாமல் ஏமாற்றியது ஆகிய அநீதிகளுக்கு முதலில் பெரியசாமியைத் தான் தண்டித்திருக்க வேண்டும். இவர்கள் சொல்லும் ‘உத்தமர்’ காந்தி, “ஒரு பெண் தனக்கு ஆபத்து நேரும் போது, தனது நகங்களை ஆயுதமாகப் பயன்படுத்தினால் கூட குற்றமாகாது” என்றார். ஆனால், இந்த காந்தியின் தேசத்தில் பட்டபகலில் பலர் முன்னால் தினம் தினம் சொல்லொனா கொடுமைகளை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள். இதனை கேட்க துப்புக்கெட்ட காந்தியின் போலீசு, பாதிக்கப்பட்ட பெண்ணை கைது செய்து தங்களை ‘வீரர்’களாக காட்டிக் கொண்டது.

‘ஆபத் பாண்டவன், அனாத ரட்சகன்… ‘ பு.ஜ.தொ.மு.!

“எங்கு எப்போது அநீதி நடந்தாலும், அங்கு அப்போது நான் தோன்றுவேன்” என்று சனாதான தர்மத்தை மீறி செல்பவர்களை தண்டிக்க கண்ணன் சொன்னதாக கூறுகிறது பார்ப்பன கீதை!  அந்த கண்ணனும் பாஞ்சாலியின் சேலையை உருவியவனின் கண்ணத்தில் அடிக்கவில்லை… சேலையைத்தான் நீட்டித்துக் கொண்டே சென்றான். காரணம், பாஞ்சாலி கண்ணனை அழைக்கவில்லையாம்! ஆனால், தொழிலாளர்கள் அழைத்தாலும், அழைக்கவில்லை என்றாலும், தொழிலாளர்களுக்கு ஒரு அநீதி என்றால், வர்க்க ஒற்றுமையை கட்டிக் காக்க அங்கே, பு.ஜ.தொ.மு. தோழர்கள் தோன்றுவார்கள்.
அசோக் லேலாண்டு-2வது பிரிவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சி.எல். தொழிலாளர்கள் ஆறுமாத காலத்திற்கு தற்காலிகமாக வேலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ஆறுமாத காலம் முடிந்த பின், மீண்டும் புதிதாக சேர்க்கப்படுவர். இவர்களுக்கு எந்த வித உரிமையும் லேலாண்டு நிர்வாகம் வழங்கியதில்லை. தரமற்ற  உணவு; கேண்டீனில் செக்யூரிட்டியை நிறுத்தி அவர்களை சிறைக் கைதிகளைப் போல கண்காணித்தது. அவமானம் பொறுக்காமல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். வேலை நிறுத்தத்தில் இறங்கிய மறுநிமிடமே தாங்கள் விரட்டியடிக்கப்படுவோம் என்பதை அறிந்து போராட்டத்தில் இறங்கினர்.
பெரிய தொழிற்சங்கங்கள் எல்லாம் வாய் மூடி மௌனமாக இருந்த போது, புஜதொமு மட்டும் களமிறங்கி அவர்களுக்காக குரல் கொடுத்தது. அதன் பின் அவர்கள் வேலையிலிருந்து உடனடியாக விரட்டியடிக்கப்படாமல் நீடிக்கப்பட்டனர். உணவும் தரமானதாக மாறியது; கேண்டீனில் செக்யூரிட்டி வைத்து கண்காணிப்பதும் நின்றது. இது போன்று புஜதொமுவின் பல போராட்டங்களைக் கண்டு மனதிற்குள் வாழ்த்தியவர்கள் பலர். நேரடியாக உதவியவர்கள் சிலர். அந்த வகையில் லேலாண்டு தொழிலாளியான செல்வராஜ், வேறொரு அமைப்பு என்றாலும் புஜதொமு-வின் நியாயமான தன்முனைப்பான பங்களிப்புகளை பாராட்டி வந்துள்ளார்.
அவர் தனக்கு நேர்ந்த இந்த அநீதிக்கு பின், உடனடியாக அவருடைய நினைவுக்கு வந்தவர்கள்,’ஒளிவட்டம் போடப்பட்ட அவர்களது தலைவரல்ல, தொழிற்சங்க மாமேதையல்ல”. நக்சலைட் என்று பீதியூட்டப்படும் புஜதொமு மாவட்ட தலைவர் பரசுராமன் தான்! இ.பி.கோ.வில் இந்தத் தோழர்கள் கைது செய்யப்படாத சட்டங்கள் இல்லை என்றே சொல்லலாம்!
மதியம் 1.30 மணியளவில் பு.ஜ.தொ.முவின் தோழர்கள் ஹட்கோ போலீசு நிலையத்திற்கு சென்றனர். அங்கு நடந்த விசயங்களை விசாரித்தனர். தேவியின் புகார் மனுவை படித்துப் பார்த்தனர். “தேவியின் தைரியமான செயல்பாட்டைப் பாரட்டினர். உங்களால், ஒசூர் பெண்களுக்கு மரியாதை கிடைத்துள்ளது” என்று தெரிவித்தனர். “நீங்கள் தைரியமாக இருப்பீர்களா” என்று கேட்டதற்கு அவரும் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
போலீசு நிலையத்தில் வந்த பின்னர், திக்குத் தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டதாக  தேவிக்கு சிந்தனைகள் மனதில் நிழலாடிக் கொண்டிருந்த பொழுது, புஜதொமு தோழர்களின் அணுகுமுறையும் வார்த்தைகளும், சோர்வுற்றிருந்த போராளிக்கு புது இரத்தம் பாய்ச்சுவதாக, சமூகத்தின் அவலநிலைமை மீது அதிருப்தி கொண்டிருந்த தேவிக்கு போராட புது வழி கிடைத்துள்ளதாக, போராட்டம் இத்துடன் முடிந்தது என்று கருதிய தேவிக்கு இனிதான் போராட்டமே தொடங்குகிறது என்பதை உணர்த்துவதாக… பு.ஜ.தொ.மு. தோழர்களின் வார்த்தைகள் நம்பிக்கை ஊட்டியது.
புகார் மனுமீது நடவடிக்கை எடுக்கவில்லையா? என்று அருகில் உள்ள காவலரிடம் கேட்ட போது, “இது தொடர்பாகத் தான் ஐயா உள்ளே பேசிக்கிட்டுருக்கார்” என்று தெரிவித்தார். அங்கு வந்த கியூ பிரிவு போலீசு, “என்ன நடந்தது என்று தெரியாமல் பேசாதீங்க,? அந்த பெண்ணை கம்பெனியிலேயே போயி, ஸ்பாட்ல விசாரிச்சிட்டுதான், இந்தம்மாவை புடிச்சிட்டு வந்திருக்கிறோம். இந்த அம்மா இங்க வந்து முதல்ல புகார் கொடுக்கல்ல தெரியுமா?” என்று கோபமாக கூறினார். “பெரியசாமியை போயி பாருங்க, ஜி.ஹச்.ல இருக்காரு, அவரோட கன்னமெல்லாம் என்னமா செவந்து வீங்கி போயிருக்கு தெரியுமா?” என்று பெரியசாமியின் மீது கரிசனையுடன் பேசினார்.
“அதிகாரி தவறா பேசுறாருன்னா, உடனே செருப்பைக் கழற்றி அடித்துவிடுவதா?” என்று நியாயம் கேட்கத் தொடங்கினார். தேவியின் புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்கான காரணங்கள், அந்த கியூ பிரிவு போலீசு கேட்ட கேள்விகளில் அடங்கி இருப்பதை தோழர்கள் உணர்ந்து கொண்டனர். போலீசின் மூளை எல்லாம், பெரியசாமியைப் போலவே சிந்திக்கும் போது, தேவிக்கு எப்படி நீதி கிடைக்கும்? பெரியசாமியுடன் மட்டுமல்ல… தேவி இனி போலீசுடனும் போராடித்தான் ஆகவேண்டும்.
மற்றொரு போலீசு அங்கு வந்தார், அவருடன் “ஒரு புகார் மீது விசாரித்து வழக்கு பதிவு செய்ய எவ்வளவு நேரமாகும்? மனு கொடுத்து மூன்று மணி நேரமாகுது, ஏன் எப்.ஐ.ஆர் போடவில்லை? ஆள் பற்றாக்குறையா?” என்று கேட்டுக் கொண்டிருந்த போது, ஆய்வாளர், அறையிலிருந்து வெளியே வந்தார். செல்வராஜ் கையில் இருந்த புகார் மனுவை வாங்கினார், நீங்கள் யார் என்று தோழர்களைப் பார்த்து கேட்டார். தோழர்.பரசுராமன், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தேவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். ஆனால், அதற்குள், அசோக் லேலாண்டு-2 சங்க செயலாளரை அழைத்து அவரிடம், தேவியின் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், பிணையில் எடுப்பதற்கான வேலையை செய்யுமாறு தெரிவித்துள்ளார். செல்வராஜ், என்ன செய்வது என்று திகைத்து நின்றபோது, செல்வராஜிடம் தோழர்கள் பேசத் தொடங்கினர்.
“செல்வராஜ், இது உங்கள் மனைவி ஒருவரின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சனை, தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரு அநீதி என்றால், தேவி மாதிரிதான் பதிலடி கொடுக்க வேண்டும், இது மற்ற பெண்களுக்கு ஒரு நம்பிக்கையை விதைக்கும்” என்று உணர்த்தினர். தேவியை சிறையிலிருந்து மீட்பதற்காக பு.ஜ.தொ.மு தோழர்கள் உடனே அங்கு குவியத் தொடங்கினர். இதற்குள் அசோக் லேலாண்டு தொழிலாளர்களும் குவியத் தொடங்கினர். மாலை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் எழுச்சிகரமாக புஜதொமு தலைவர் பரசுராமன் தலைமையில் நடத்தப்பட்டது. “காமவெறியனுக்கு செருப்படி கொடுத்த வீரப் பெண்மணி தேவி வாழ்க! முதலாளித்துவ பயங்கரவாதம் ஒழிக!! வீரப் பெண்மணி தேவியை விடுதலை செய்! காமவெறியன் பெரியசாமியைக் கைது செய்!!” என்று விண்ணதிரும்படி முழங்கினர்.
ஓட்டுக் கட்சி தலைவர்களுக்கு ஒரு சிறு தும்பல் என்றாலும் அதற்காக சாலை மறியல், கடையடைப்பு நடத்தும்  குண்டர்களை போலீசு என்னைக்கும் தட்டிக் கேட்டது கிடையாது. அவர்களுடன் கொஞ்சிக் குலாவி வந்துள்ளது. ஆனால், முதலாளிகளின் அநீதிக்கு எதிராக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், கொதிப்படைந்து போனது. குறிப்பாக, போலீசு இந்த பிரச்சனையை அமுக்கிவிடலாம் என்று கருதி இருந்த போது, புஜதொமு தோழர்கள் தலையிட்டதால், ஆர்ப்பாட்டமாக வளர்ந்ததை அடுத்து எரிச்சலடைந்தது. உடனே உள்ளூர் செய்தியாளர்களை மிரட்டி, ஆர்ப்பாட்ட செய்தி பத்திரிக்கைகளில் வராத வகையில் தடுத்தது.
பரசுராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இருப்பதாக பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது. தொழிலாளர்களுக்கு எந்த அநீதி நடந்தாலும், அடிமைகள் போல கேட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான், போலீசு நீதி! இந்த போலீசு நீதி கேள்விக்குள்ளான பின்னர், தோழர்.பரசுராமன் மற்றும் 20 பேர் அனுமதியின்றி சாலையை மறித்ததாக செய்ததாக பொய் வழக்கு பதிவு செய்து தோழர்.பரசுராமனைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
தேவியை விடுதலை செய் - போஸ்டர்
பரசுராமன் கைது செய்யப்பட்டதால், தேவி பிரச்சனை திசைதிருப்பட்டுவிடும் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த போலீசுக்கும், பெரியசாமி போன்ற காமவெறி கும்பலுக்கும் இடியென இறங்கியது புஜதொமுவின் சுவரொட்டி! “ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் பெண் தொழிலாளி மீது பாலியல் துன்புறுத்தல்! காம வெறி பிடித்த அதிகாரி பெரியசாமிக்கு செருப்படி கொடுத்தார் பெண் தொழிலாளி!” என்ற தலைப்பில் சுவரொட்டிகள் பளிச்சிட்டது. ஒசூர் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. நாள் தோறும் முகம் தெரியாத பலரும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு புஜதொமுவுக்கு பாரட்டுக்கள் தெரிவித்தனர்.
இதன் பின்னர், தோழர்.பரசுராமன், பிணையில் வெளியே வரும் போது, தொழிலாளர்கள், தோழர்கள் சிறை வாசலில் கூடி, மாலையணிவித்து, முழக்கமிட்டு வாழ்த்தினர். ஆனால், உண்மையில் இதில் பரசுராமன் பாராட்டுக்குரியவர் என்று பலரும் கருதுகின்றனர். அது புஜதொமுவை பொருத்தவரை பெரிய விசயமல்ல. உண்மையில் பாராட்டுகுரியவர் வீரப்பெண்மணி தேவிதான்! பரசுராமன் பிணையில் வெளிவந்ததற்காக பலரும் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். vinavu.com

கருத்துகள் இல்லை: