தங்களது சுயநலத்துக்காக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் போய் தஞ்சமடைந்துள்ள சிலர், தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக நடந்து வருகின்றனர். இவர்களது வலியுறுத்தலுக்குப் பயந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்தால் கடும் விளைவுகளை கிரிக்கெட் சந்திக்க நேரிடும் என்று முன்னாள் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
இலங்கைக்கு கிரிக்கெட் ஆடப் போகக் கூடாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தை அங்குள்ள தமிழர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. எனவே ஆகஸ்ட் 6ம் தேதி தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுயள்ளது.
2வது தி ஏஜ் பத்திரிக்கை நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பு. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்குப் போகலாமா என்று கேட்டு வெளியான அந்தக் கருத்துக் கணிப்பில், 81 சதவீதம் பேர் போகக் கூடாது என்று தெரிவித்துள்ளனர். இதனால்தான் இலங்கைக்குப் போவதை மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.
ஆகஸ்ட்6ம் தேதி தொடங்கவுள்ள தொடரில் ஐந்து ஒரு நாள் போட்டி, 2 டுவென்டி 20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முரளிதரன் மூலம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் புறக்கணிப்பு முடிவு குறித்து முரளிதரன் கருத்து தெரிவிக்கையில்,
ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதை அவர்கள் வெளிப்படுத்தலாம். அதேசமயம், ஒரு நாட்டுடனான கிரிக்கெட் உறவைத்
துண்டிப்பது, புறக்கணிப்பது என்பது தவறான முடிவாகவே இருக்கும்.அதனால் பல கடுமையான விளைவுகளை அந்த விளையாட்டு சந்திக்க நேரிடும்.
அரசியல் வேறு, விளையாட்டு வேறு. இன்று இலங்கை, நேற்று பாகிஸ்தான், ஜிம்பாப்வே என்று ஆஸ்திரேலியா அணி தனது புறக்கணிப்பை தொடருமானால், நாளை அது சில நாடுகளுடன் மட்டுமே கிரிக்கெட் ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இதனால் கிரிக்கெட் செத்துப் போகும். ஐபிஎல் போட்டிகள் தலை தூக்கி முன்னணி இடத்தைப் பிடிக்கும்.
இங்கிலாந்தைச் சேர்ந்த, ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து வசித்து வரும், சில தமிழர்களே இந்த செயல்களுக்குப் பின்னணியில் உள்ளனர். தாயகத்திற்குத் திரும்ப முன்வராத அவர்கள் தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். சுயநலத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர்.
இலங்கை அணி இங்கிலாந்தில் விளையாடியபோது மைதானத்திற்குள்ளும் புகுந்து அவர்கள் பிரச்சினை ஏற்படுத்தினார்கள். மைதானத்திற்கு வெளியேயும் போராட்டம் நடத்தினர்.
ஆனால் இவர்கள் எல்லாம் தங்களது சுயநலத்திற்காக செயல்படக் கூடியவர்கள். இவர்களால் இலங்கைக்கு எந்தவிதப் பிரச்சினையும் வராது என்றே நான் கருதுகிறேன். வேறு ஒரு நாட்டில் புகலிடம் பெற்று வாழ்ந்துவரும் இவர்கள் சொந்த நாட்டுக்கு எதிராக செயல்படுவது கண்டனத்துக்குரியது என்றார் முரளிதரன்.
இதற்கிடையே, இலங்கை பயணம் குறித்து ஆஸ்திரேலிய அரசிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் கருத்து கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக