சனி, 24 செப்டம்பர், 2022

காங்கிரஸ் தலைவர் ரேஸ்: யார் இந்த அசோக் கெலாட்?

minnambalam.com  -  monisha  : 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக தீவிரமாக வேலை பார்க்க ஆரம்பித்துள்ளது காங்கிரஸ். அதில் முக்கிய விஷயமாக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன.
தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 17ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்த போட்டியில் முதலாவதாக அடியெடுத்து வைத்திருப்பவர் ராஜஸ்தான் முதலமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான அசோக் கெலாட்.
இந்திரா காந்தியை ஆச்சர்யப்படுத்தியவர்
அரசியல் பின்னணி இல்லாத ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்தான் அசோக் கெலாட். அவரது தந்தை ஊர் ஊராக சென்று மேஜிக் செய்யும் தொழில் செய்து வந்தவர்.
அசோக் கெலாட் சட்டம் படித்தவர். பொருளாதாரத்திலும் முதுகலை பட்டம் வாங்கியிருக்கிறார். மகாத்மா காந்தியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட அவருக்கு, மாணவப் பருவத்திலேயே அரசியலிலும் ஈர்ப்பு வந்தது. இந்தியா- பாகிஸ்தான் சுதந்திரம் வாங்கிய பிறகு வங்காளம் இரண்டாக பிரிந்தது. கிழக்கு வங்காளத்தில் இருந்து அகதிகளாக வந்தவர்கள், முகாமில் தங்க வைப்பட்டிருந்தனர். அப்போது அவர்களுக்காக ஓடி ஓடி வேலை பார்த்தவர்தான் அசோக் கெலாட். முகாமிற்கு வந்த இந்திரா காந்தி, அசோக் கெலாட்டின் பணிகளை பார்த்து ஆச்சரியமடைந்தார்.

இப்படி சமூக வேலைகளில் ஆர்வமாக இருந்த கெலாட்டை அரசியலுக்கு கைபிடித்து கூட்டி வந்தவர் இந்திரா காந்தி. அதன்பிறகு ராஜஸ்தானில் ஒவ்வொரு பதவியாக அவரை தேடி வந்தது. காங்கிரஸின் தேசிய மாணவர் சங்கத்தின் முதல் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார் அசோக் கெலாட்.

மோட்டார் சைக்கிளை விற்று முதல் தேர்தல்!

முதன்முதலாக 1977ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். சர்தார்புரா தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியை சந்தித்தார். இந்த முதல் தேர்தலுக்கான செலவுகளுக்காக அவர் தனது மோட்டார் சைக்கிளையும் விற்கும் நிலை ஏற்பட்டது.

1980ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ஜோத்பூர் தொகுதியில் களமிறங்கிய அவர், 52,519 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1984ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மத்திய அமைச்சர் பதவி அவரை தேடி வந்தது. சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் விமான போக்குவரத்து துறை இணையமைச்சராக மாற்றப்பட்டார். அதன்பிறகு நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் 1991 முதல் 1993ம் ஆண்டு வரை ஜவுளித்துறை அமைச்சராக இருந்தார்.

இதற்கிடையில் ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் என பல பொறுப்புகள் அவருக்கு கிடைத்தது. 2004ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராகவும் நியமிக்கப்பட்டார் அசோக் கெலாட்.

ராஜஸ்தான் முதல்வர்

இந்த நிலையில் 1998ம் ஆண்டு ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். அப்போது முதலமைச்சர் வாய்ப்பை அசோக் கெலாட்டுக்கு கொடுத்தது காங்கிரஸ் தலைமை. இதுவரை முதலமைச்சர் பதவி அவருக்கு மூன்று முறை கிடைத்திருக்கிறது. 1998, 2008, 2018 தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ராஜஸ்தானில் முதலமைச்சர் இருக்கையை மூன்று முறை அலங்கரித்திருக்கிறார் அசோக் கெலாட்.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல்காந்தி என காங்கிரஸ் தலைமையின் நம்பிக்கைக்குரியவராக அசோக் கெலாட் இருந்து வருகிறார். கட்சி தொடர்பாகவோ, தலைமை தொடர்பாகவோ அவர் இதுவரை அதிருப்தியாக கருத்துகள் எதையும் பொதுவெளியில் பேசியதில்லை. அவரது அனுபவம் மற்றும் நம்பகத்தன்மையை கருத்தில் வைத்தே காங்கிரஸ் தலைமை அவரை தேர்தலில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.

சோனியா. ராகுலின் வேட்பாளர்

சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் எனும் பெயருடன் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் களமிறங்கி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் ஏராளமான தலைவர்கள் இருக்கும் போது அசோக் கெலாட்டை சோனியா, ராகுல் தேர்வு செய்ய என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.

2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் களம் இறங்கிய காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் இந்த முறை காங்கிரஸ் தலைவராக வேறு ஒருவரை பணியமர்த்திவிட்டு அடிமட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்த முடிவு செய்திருக்கிறார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் கட்சி காந்தி குடும்பத்தின் வாரிசு கட்சி என பா.ஜ.க. செய்து வரும் விமர்சனத்தையும் இதன் மூலம் தகர்க்க நினைக்கிறது காங்கிரஸ் கட்சி.

2024 பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸை ஓரம் கட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவும் முயற்சித்து வருகின்றனர்.

இதனால் மாநில கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்க அசோக் கெலாட்டால் முடியும் என ராகுல், சோனியா நம்புகின்றனர்.

இதே போல ஏற்கனவே 90-களின் இறுதியில் காந்திகுடும்பம் அல்லாத சீதாராம் கேசரி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அப்போது காங்கிரஸ் கட்சிக்குள் காந்தி குடும்பம் ஓரங்கட்டப்பட்டது.

இதனால், அதே நிலை மீண்டும் ஏற்படாதவாறு தங்களுக்கு விசுவாசமான ஒருவரை தலைவராக்க வேண்டும் என ராகுலும் சோனியாவும் நினைக்கின்றனர். இதனால் தான் இதுவரை காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் காந்தி குடும்பத்துக்கும் எதிராக செயல்படாத கட்சியின் மூத்த உறுப்பினரான அசோக் கெலாட்-டை ராகுலும் சோனியாவும் தேர்வு செய்துள்ளனர்.

இதனால் தான் சோனியாவும் ராகுலும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன் என அறிவித்துள்ளார் அசோக் கெலாட்.

அவருக்கு எதிராக மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான சசிதரூர் களமிறங்குகிறார். இவர் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் குழுவான ஜி 23-ல் ஒருவராக இருப்பதால் கட்சியினர் மத்தியில் எந்த அளவுக்கு ஆதரவு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜெயப்பிரியா

கருத்துகள் இல்லை: