திங்கள், 19 செப்டம்பர், 2022

இந்தியாவில் உள்ள இலங்கையர்கள் தாயகம் திரும்ப மறுப்பு! இலங்கை தமிழ் கட்சிகளின் வாக்குவேட்டைக்காக அமைப்பு' (OFERR) ?

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதை இலகுபடுத்த விசேட குழு  நியமனம் | Kuruvi

பிரபுராவ் ஆனந்தன் -     பிபிசி தமிழுக்காக  :  இலங்கை இறுதி கட்ட போரின்போது இந்தியாவில் அகதியாக தஞ்சம் அடைந்த இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்கே அழைத்து வர இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழு ஒன்றை நியமித்துள்ளார். ஆனால், தங்களுடைய இலங்கைக்கு திரும்ப பெரும்பாலான இலங்கை தமிழர்கள் விரும்பவில்லை என்று தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையரை மீண்டும் இலங்கை அழைத்து வர வேண்டும் என 'ஈழ அகதிகள் புனர் வாழ்விற்கான அமைப்பு' (OFERR) வேண்டுகோள் முன்வைத்திருந்தது. இது குறித்து பேசுவதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
அப்போது இலங்கை ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்து அதில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அதிகாரி, வெளிவிவகார அமைச்சரக உயர் அதிகாரிகள், மற்றும் நீதி அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரிகளை உறுப்பினர்களாக நியமித்தார்.



இந்தியாவில் தற்போது அகதிகளாக தங்கியுள்ள இலங்கையர்கள் 3,800 பேர் மட்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு தயாராக இருப்பதாகவும் அப்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கை அழைத்து வருவதற்காக சென்னையிலுள்ள இலங்கை துனை தூதரகமும் இச்செயல் முறையை எளிதுபடுத்துவதற்கான ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, வெளிவிவகார அமைச்சகத்தின் செயலாளர் அருணி விஜேவர்தன, நீதி அமைச்சகம் மற்றும் குடிவரவு, குடியகல்வு துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஈழ அகதிகள் புனர்வாழ்வுக்கான அமைப்பின் பிரதம செயற்பாட்டாளர் சி.எஸ்.சந்திரஹாசன், எஸ்.சூரியகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கு மீண்டும் அழைப்பதில் என்ன நியாயம்?

இலங்கையில் இறுதிகட்ட போர் நடைபெற்றபோது அங்கிருந்து அகதியாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருப்பர் மோகன்ராஜ். இவர் 2006ஆம் ஆண்டில் அகதியாக தமிழ்நாடு வந்தார்.

தற்போது இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் தாயகத்துக்கு அழைத்து செல்ல இலங்கை அரசு சிறப்புக் குழு அமைத்து அதற்கான வழிமுறைகளை எளிமைபடுத்துவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து மோகன்ராஜிடம் கேட்டபோது, "அது இலங்கை அரசின் கண்துடைப்பு நாடகம்," என்று கூறினார்.

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களை இலங்கைக்கு அழைத்து அதையே காரணமாகக் கூறி வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதற்காக இலங்கை அரசு முயற்சி இது என்று அவர் தெரிவித்தார்.

"2012 முதல் 2019 வரை அதாவது கொரோனா பரவலுக்கு முன்பு சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டில் இருந்து மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்வதற்கு முயற்சி செய்தோம். ஆனால் அப்போது இலங்கை அரசு எங்கள் கோரிக்கைகள் எதையும் பரிசீலிக்கவில்லை. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தால் எங்களை மீண்டும் இலங்கைக்கு அழைக்கின்றனர்," என்கிறார் மோகன்ராஜ்.

"இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் பலரும் இந்தியாவில் புகலிடம் தேடி அகதியாக தமிழகம் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், எங்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அழைப்பது எந்த விதத்தில் நியாயம்? இலங்கை அரசு சுயலாபத்திற்காக மட்டுமே இந்த குழுவை அமைத்துள்ளது," என்கிறார் மோகன்ராஜ்.

தமிழர்களின் வாக்குகளை பெற மீண்டும் நாட்டுக்கு அழைக்கிறதா?
"இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு சென்றால் அது நாட்டின் மீதுள்ள பாசத்தால் இருக்காது. இலங்கைக்கு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல நினைப்பர்.

தமிழக முகாம்களில் தங்கியுள்ள 25 சதவீத இலங்கை தமிழர்கள் மீண்டும் சொந்த நாட்டுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர்களை பொறுத்த அளவு இந்தியாவில் அகதிகளாக வாழ்வதை விட சொந்த நாட்டில் வாழ்வோம் என்ற எண்ணத்தில் செல்கின்றனர்.

அப்படி இலங்கைக்கு திரும்பிச் செல்லும் இலங்கை தமிழர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் ஓராண்டுக்கு தேவையான நிதி உதவியை அளிக்க வேண்டும், தங்க வீடு உள்ளிட்டவற்றை கொடுத்தால் நிச்சயம் மக்கள் தாயகத்துக்கு திரும்பி செல்வார்கள்," என்கிறார் அவர்.

"இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசின் மீது சிங்கள மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வரும் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்கு கிடைக்காது என்பதால் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து அவர்களின் வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கையாக கூட இந்த நடவடிக்கை இருக்கலாம்," என்கிறார் மோகன்ராஜ்.

குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இலங்கை அரசு உத்தரவாதம் உண்டா?

இலங்கைக்கு குடிமக்களை மீண்டும் அழைப்பது தொடர்பாக மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள 75 வயது மூதாட்டி மணியம்மாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

"நான் என் குடும்பத்துடன் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக தஞ்சம் அடைந்தேன். 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி உள்ளேன். என்னுடைய மகன், மகளுக்கு இந்தியாவில் திருமணமாகி என்னுடைய பேரக்குழந்தைகள் இங்குதான் பிறந்தார்கள். அவர்களுக்கு இலங்கையை பற்றி ஒன்றும் தெரியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களை எப்படி மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்வது?" என்று கேட்கிறார் மணியம்மா.

என்னுடைய பேரக்குழந்தைகள் அனைவரும் இங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் படிப்பை நாங்கள் இலங்கைக்கு சென்றால் எப்படி தொடர முடியும்? மீண்டும் இலங்கைக்கு திரும்பினால் அங்கு நாங்கள் அகதியாகதான் இருக்க வேண்டும்.

இங்கு படித்து பெற்ற இந்த சான்றிதழ்கள் இலங்கையில் பயன்படாது. இங்கு எங்கள் குழந்தைகள் அரசு வேலைக்கு செல்ல முடியாவிட்டாலும் தனியார் நிறுவனங்களில் நல்ல வேலையில் உள்ளனர்.

எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் திடீரென்று இலங்கை திரும்பிப் போகச் சொன்னால் எப்படி செல்வது? ஒரு நல்ல கட்டமைப்பை ஏற்படுத்தி கொடுத்து இங்கிருந்து எங்களை அனுப்பி வைத்தால் பரவாயில்லை.

ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பு குறிப்பிடுவதுபோல் 3,000 பேர் இலங்கைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்ததிருந்தனர். ஆனால் அது 7 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவிக்கப்பட்ட தகவல்.

இலங்கை தமிழர்கள் அவர்களுடைய பொருட்களை கப்பலில் எடுத்துக் கொண்டு மீண்டும் இலங்கைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறியதை அடுத்து இந்த விருப்பத்தை அவர்கள் தெரிவித்தனர். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நிச்சயம் இலங்கை தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள்.

இலங்கை அரசு நாட்டுக்கு திரும்பி அழைத்து கொண்டால் இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்து அரசியல் சட்டத்தின்படி இலங்கையில் குடியுரிமை அளிக்க வேண்டும், பிள்ளைகளுக்கு கல்வியை உறுதிப்படுத்த வேண்டும், அதேபோல் எங்களுடைய வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தை ஏற்பாடு செய்து கொடுத்தால் மட்டுமே இந்தியாவில் இருந்து இலங்கை தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி செல்ல வாய்ப்பு இருப்பதாக மணியம்மா தெரிவித்தார்.

நிச்சயம் திரும்பி போக மாட்டேன்:

பட்டதாரி பெண்ணான மேரி, 2006ஆம் ஆண்டில் நிலவிய பிரச்சினை காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். இவரும் அகதியாக மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி உள்ளார்.

இலங்கைக்கு திரும்பிப் போகும் எண்ணத்தில் தாம் நிச்சயம் இல்லை என்கிறார் அவர். அதற்கான காரணத்தையும் அவர் விளக்குகிறார்.

"தமிழ்நாட்டில் தான் நான் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். இந்த படிப்பிற்கான சான்றிதழ் இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, என்னுடைய படிப்பு முற்றிலும் பயனற்றுப் போய்விடும். எனவே, நான் இங்கிருந்து இலங்கை செல்ல விரும்ப மாட்டேன்.

இந்தியாவில் இருந்து நாங்கள் அனைத்து நாடுகளுக்கும் செல்லக்கூடிய பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. இதனால் நான் 4 ஆண்டுகளுக்கு முன் இலங்கை சென்று எனது உறவினர்கள் வீட்டில் சில மாதங்கள் தங்கி அடையாள அட்டை பெற்றேன். பின்னர் அனைத்து நாடுகளுக்கும் செல்லக்கூடிய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் தற்போது இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியால் எனது உறவினர்கள் சாப்பிட கூட வசதி இல்லாமல் உள்ளனர். இந்த நிலையில் நான் எப்படி அங்கு சென்று தங்க முடியும்?" என்று கேட்கிறார் மேரி.

"தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளை அறிவித்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் இருந்து மீண்டும் இலங்கை செல்வதாக முடிவு செய்திருந்த பலரும் மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுத்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 150 பேர் குடும்பம், குடும்பமாக இலங்கை செல்ல விண்ணப்பித்தனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பத்துடன் செல்ல மறுத்து இந்தியாவில் தங்க விருப்பம் தெரிவித்து விட்டனர்.

இலங்கை அரசு மீண்டும் எங்களை அழைத்தாலும் பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் அங்கு செல்ல விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை," என்கிறார் பட்டதாரி பெண் மேரி.

தமிழ்நாடு வந்தது ஏன்?

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகம் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார் தலைமன்னாரை சேர்ந்த சசிகுமார். இவரும் இலங்கைக்கு திரும்பி அழைத்து வர அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை ஆதரிக்கவில்லை.

"இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக எனது வீடு, நகைகள் உள்ளிட்டவற்றை விற்று குடும்பத்துடன் அகதியாக படகு மூலம் தமிழகம் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளேன். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இந்திய அரசு எங்களை அகதியாக பதியவில்லை. இந்தச் சூழ்நிலையில் இலங்கை அரசு மீண்டும் எங்களை அழைத்துள்ளது," என்கிறார் சசிகுமார்.

"எங்களை மீண்டும் இலங்கைக்கு அழைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இலங்கை அரசு சுய லாபத்திற்காக எங்களை மீண்டும் இலங்கைக்கு அழைக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்திருந்தால் எப்பவோ எங்களுக்கான உரிமையை கொடுத்து இருக்கலாம் ஆனால், எங்களை இலங்கையில் இன்னும் அகதிகளாகதான் இலங்கை அரசு வைத்துள்ளது," என்கிறார் சசி.

இலங்கையில் வாழ வழியில்லாமல் தான் இந்தியா வந்தோம். எப்படி மீண்டும் இலங்கைக்கு செல்வது. அங்கிருக்கும் அனைத்தையும் விற்று விட்டு வந்த என்னால் எப்படி குடும்பத்துடன் இலங்கை சென்று வாழ முடியும்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 150க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்து மண்டபம் முகாமில் தங்கி உள்ளனர். அதில் 130 பேர் முன்னதாகவே இலங்கையில் இருந்து இந்தியா வந்து அகதியாக தங்கி இருந்து இலங்கையில் அமைதி திரும்பியதால் தாய்நாட்டுக்குச் சென்றவர்கள். கடந்த மார்ச் மாதம் முதல் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு மீண்டும் வந்தவர்கள். ஆனால், இம்முறை அவர்கள் அகதியாக பதிவு செய்யப்படாமல் மனிதாபிமான அடிப்படையில் உணவு, உறைவிடம் கொடுத்து ஆதரிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் தங்களை அகதியாக பதிவு செய்யக் கோரியும் இந்திய வெளியுறவுத்துறை எந்த முடிவும் எடுக்காததால் தமிழ்நாடு அரசு இவர்களை மற்ற அகதிகள் வாழும் மண்டபம் அகதிகள் முகாமிலேயே ஒரு பகுதியில் தங்க அனுமதித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளாக அகதியாக தஞ்சம் அடைந்த இலங்கையர்களை தாயகத்துக்கே அழைத்து வர இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் நியமித்துள்ள குழு, இந்தியாவில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது.

இலங்கை அரசின் முழு அறிவிப்பு இன்னும் கிடைக்கவில்லை

இதற்கிடையே, சிறப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஈழ அகதிகள் புனர்வாழ்வுக்கான அமைப்பின் பிரதம செயற்பாட்டாளர் சி.எஸ்.சந்திரஹாசனிடம் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கபட்ட கருத்துக்கள் குறித்து கேட்டபோது அவர் அறிக்கை ஒன்றை பிபிசி தமிழுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தார்.

அதில், 'செப்டம்பர் 5, 2022 அன்று இலங்கை அரசு தமிழகத்தில் வாழும் இலங்கை ஏதிலியர் மற்றும் நாடு திரும்பியவர்கள் தொடர்பான அக்கறை கொண்ட துறைகள் ஒரு சந்திப்புக்காக அழைத்திருந்தது. இச்சந்திப்பு 2012 முதல் OFERR நிறுவனம் அரசாங்கத்துடன் ஏதிலியர் மற்றும் நாடு திரும்பியவர்கள் சம்பந்தமான சந்திப்புகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது.

இச்சந்திப்பின் நோக்கமானது நாடு திரும்பியவர்களின் நிலையை அறிவதற்கும் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப உத்தேசிப்பவர்களின் நிலையை புரிந்து கொள்வதற்காகவும் நடத்தப்பட்டது. இச்சந்திப்பில் இலங்கை அரசாங்கம் இப்பிரச்னையை கூர்ந்து நோக்குவதற்காக ஒரு குழுவை அமைப்பதாக அறிவித்தது. அதனடிப்படையில் ஒரு குறுஞ்செய்தியும் வெளியிடப்பட்டது.' என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: