வெள்ளி, 23 செப்டம்பர், 2022

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் வங்கி கணக்குகள் முடக்கம்.. அமலாக்கத்துறை பரபரப்பு உத்தரவு!

tamil.oneindia.com  -  Shyamsundar  :  டெல்லி: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை முடக்க வேண்டும், அதை தடை செய்ய வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள், அமைச்சர்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள் தெரிவித்து வருகிறார்கள். 2006ல் இந்த அமைப்பு கேரளாவில் தொடங்கப்பட்டது.
தற்போது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதே 1993ல் கேரளாவில் தேசிய அபிவிருத்தி முன்னணி என்ற அமைப்பு இஸ்லாமியர்கள் மூலம் உருவாக்கப்பட்டது.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா
இந்த அமைப்பு மற்றும் மற்ற இஸ்லாமிய அமைப்புகள் சில இணைந்துதான் 2006ல் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பு கடந்த 2014ல் இருந்து பல்வேறு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. 2014க்கு பின் இந்த அமைப்பை சேர்ந்தவர்களின் வங்கி கணக்குகளுக்கு பல கோடி முதலீடு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை அமலாக்கத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது.

கைது
2 வருடங்களுக்கு முன் இந்த அமைப்பின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் ரவூப் செரீப் கைது செய்யப்பட்டார். அவரின் வாங்கி கணக்கில் பல கோடி முதலீடு செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியது. அதோடு கோர்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் இந்த அமைப்பின் பல்வேறு கணக்குகளில் கணக்கில் வராத 100 கோடிக்கும் அதிகமான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று கூறியது. இந்தியாவில் நடந்த சிஏஏ போராட்டங்கள், டெல்லி கலவரம் ஆகியவற்றில் இந்த அமைப்பிற்கு தொடர்பு உள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது.

கர்நாடகா ஹிஜாப்
அதோடு கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் போராட்டத்திற்கும் இந்த அமைப்பின் மாணவர் பிரிவுதான் காரணம் என்று கர்நாடக பாஜகவினர் மூலம் புகார் வைக்கப்பட்டது. ‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' (பி.எப்.ஐ) மிகவும் ஆபத்தான இயக்கம் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியும் குறிப்பிட்டு இருந்தார். . மனித உரிமை, அரசியல் - மாணவர் இயக்கம் போல முகமூடி அணிந்து இவர்கள் செயல்படுகிறார்கள். இவர்களுக்கு பின் தீவிரவாத அமைப்புகள் உள்ளன என்று ஆர். என் ரவி தெரிவித்து இருந்தார்.

முடக்கம்
இந்த நிலையில்தான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல் பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ. 68.62 லட்சம் மதிப்பிலான வங்கிக் கணக்குகளை முடக்கியது அமலாக்கத்துறை.

முடக்கம்
அதேபோல் இந்த அமைப்போடு தொடர்புடைய Rehab India Foundation என்று அமைப்பின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் 23 கணக்குகள், Rehab India Foundation அமைப்பின் 10 கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த அமைப்பு தடை செய்யப்படலாம் என்று செய்திகள் வந்த நிலையில்தான் அதன் கணக்குகளை முடக்குவதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: