செவ்வாய், 20 செப்டம்பர், 2022

பெங்களூரு காதலியின் நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த டாக்டர் அடித்து கொலை

மாலாமலர் : பெங்களூரு:கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் விகாஸ் ராஜன்(வயது 27). உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்த இவர், \சென்னையில் சில காலம் மருத்துவராக பணியாற்றியிருக்கிறார்.
பின்னர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். அத்துடன், வெளிநாட்டிற்கு சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.
இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சமுக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர்.


இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
பின்னர், இவர்களின் காதல் குறித்து இரு வீட்டாருக்கும் தெரிவிக்கப்பட்டு திருமணத்திற்கும் சம்மதம் பெற்றுள்ளனர்.
இன்னும் சில மாதங்களில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி விகாஸ் ராஜன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோமா நிலைக்குச் சென்ற அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடந்த சம்பவம் குறித்து விகாஸ் ராஜனின் காதலி மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

மருத்துவர் விகாஸ் தனது காதலியின் நிர்வாண படங்களை இன்ஸ்ட்ராகிராமில் போலி ஐடி ஒன்றை உருவாக்கி பதிவேற்றம் செய்து பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை சில நண்பர்களுக்கும் அவர் பகிர்ந்துள்ளார். விகாசின் காதலி, தனது நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி விகாஸ்சிடம் கேட்டதற்கு, ஜாலியாக தான் இதை செய்தேன், நீ பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என சமாதானம் கூறியுள்ளார். ஆனாலும் ஆத்திரம் தணியாத அவர் விகாசுடன் சண்டை போட்டுள்ளார். அத்துடன் விகாசை பழிவாங்க வேண்டும், அவருக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதுபற்றி தனது ஆண் நண்பர்களிடம் கூறியுள்ளார். அதன்படி, ஒரு ஆண் நண்பரின் வீட்டுக்கு விசாசை அழைத்து வந்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த விகாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக விகாசின் காதலி மற்றும் 3 ஆண் நண்பர்களை போலீசார் கைது செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

கருத்துகள் இல்லை: