செவ்வாய், 20 செப்டம்பர், 2022

நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல்; பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்

 நக்கீரன்  : கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்தார்.
இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனில் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்று நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.
இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.


அதேபோல் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம், நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் கடந்த (19-09-2022) கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

தலைவாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் சென்ற காரை பின்தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார் மீதும் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் தமிழக அரசை  திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துகிறது.

புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம்: நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் கடந்த 19-09-2022 அன்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு காரில் திரும்பி வரும்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த சிலர், இருவர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பின்னணியில் உள்ளோரையும் கைது செய்ய வேண்டும்.


திண்டுக்கல் பிரஸ்கிளப்: கடந்த 19ம்தேதி நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்துவிட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தலை வாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் சென்ற காரை பின்தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார் மீதும் நிருபர் பிரகாஷ் மற்றும் போட்டோகிராபர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை திண்டுக்கல் பிரஸ்கிளப் வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ், போட்டோகிராபர் அஜித் குமார் ஆகிய இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரும் கூடிய விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறோம். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதோடு இந்த கொலை வெறி தாக்குதலை தூண்டிவிட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை திண்டுக்கல் பிரஸ்கிளப் வலியுறுத்துகிறது.

மதுரை பிரஸ் கிளப்: நக்கீரன் இதழின் முதன்மை செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனடியாக கைது செய்யுமாறு தமிழக அரசை பிரஸ் கிளப் ஆப் மதுரை அமைப்பு வலியுறுத்துகிறது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி இறந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள், செய்தி நிறுவனங்கள் பரபரப்பான செய்திகள், புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. இந்த வழக்கில் உள்ள மர்மம் நீங்க வேண்டும் என நக்கீரன் இதழ் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளிக்கு நேற்று செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் முதன்மை செய்தியாளரை தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோரின் காரை தலைவாசல் அருகே தடுத்து நிறுத்திய குண்டர்கள் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் படுகாயடைந்துள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை பிரஸ் கிளப் ஆப் மதுரை அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. குண்டர்களில் தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு தமிழக அரசைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக காவல் துறைக்கு உரிய வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வழங்க வேண்டும் என வேண்டுகிறோம்.

விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம்: நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், 19-09-2022.அன்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தலைவாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ்  சென்ற காரை பின்தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார்மீதும் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பின்னணியில் உள்ள சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் தமிழக அரசை விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை: