செவ்வாய், 20 செப்டம்பர், 2022

பிரிட்டன் இந்து - முஸ்லிம் மோதல்.. கலவர பகுதிகளில் பிரிட்டன் போலீஸ் கடும் நடவடிக்கை

tamil.oneindia.com  - Noorul Ahamed Jahaber Ali  லண்டன்: பிரிட்டனில் இந்து - முஸ்லிம்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கும் இந்து மத அடையாளங்கள் தாக்கப்பட்டதற்கும் இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லெய்செஸ்டர் நகரத்தில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 28 ஆம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மத மோதல்
இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மோதல் வெடித்தது. ஒருவரை ஒரு தாக்கிக்கொள்ளும் காட்சிகளும், பாட்டில்களை வீசும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "வன்முறை மற்றும் ஒழுங்கீன செயல்பாடுகளை எந்த வகையிலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வழிபாட்டு தலம்
அத்துடன் மத வழிபாட்டு தலம் அருகே இருந்த கொடியை ஒருவர் கீழே இறக்கும் காட்சிகள் வெளியாகி பதற்றத்தை அதிகரித்தன. இந்த வீடியோவை பார்வையிட்ட போலீசார், ''வன்முறை காரணமாக பல இடங்களில் சேதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்." என்றனர்.

கைது
இரண்டு மதங்களை சேர்ந்த முக்கிய நபர்களை அழைத்து அமைதிகாக்க அறிவுறுத்துமாறு பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். பதற்றத்தை தணிக்க அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் ஈடுபட்டதற்காக இதுவரை 15 பேரை பிரிட்டன் போலீஸ் கைது செய்துள்ளது.

இந்திய தூதரகம்
இதுகுறித்து பிரிட்டனுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "லெய்செஸ்டர் நகரத்தில் இந்திய மக்கள் மீதும் இந்து மதத்தின் புனித தலங்கள் மற்றும் அடையாளங்களின் மீதும் நடத்தப்பட்ட இந்த வன்முறையை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க பிரிட்டன் அதிகாரிகள் இந்த விவகாரத்தை கொண்டு செல்வோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க அதிகாரிகளிடம் கோரியுள்ளோம்." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: