செவ்வாய், 20 செப்டம்பர், 2022

நக்கீரன் குழுவினரைத் தாக்கிய 10 பேர் மீது வழக்கு; 5 பேர் கைது

நக்கீரன்  : கள்ளக்குறிச்சி அருகே செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் முதன்மை செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமரா மேன் அஜீத் ஆகியோர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கிராமத்தில் இயங்கி வருகிறது சக்தி தனியார் பள்ளி. இந்த பள்ளியில், கடந்த ஜூலை 13ம் தேதி, மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இதையடுத்து, அப்பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்றது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி உள்ளிட்ட ஐந்து பேரை கைதுசெய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, முதல்வர் உத்தரவின் பேரில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில், பள்ளி மானவியின் மர்ம மரணம் குறித்து நக்கீரன் தொடர்ந்து புலனாய்வு செய்து வருகிறது.  
பலமுறை நேரடியாக கள்ளக்குறிச்சிக்கே சென்று நேரடி கள ஆய்வில் நக்கீரன் டீம் ஈடுபட்டது. இதில், பல்வேறு தகவல்கள் வெளியானது. இதற்கு முன்னால் அந்தப் பள்ளியில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள மாணவன் ஆர்.எஸ்.ராஜா, பிரகாஷ் உள்ளிட்ட குடும்பத்தாரை நக்கீரன் டீம் அணுகி, பல ரகசியங்களை அம்பலப்படுத்தியது. இது, பள்ளி நிர்வாகத்துக்கு பெரும் குடைச்சலாக பார்க்கப்பட்டது. பள்ளியை வேறொரு இடத்தில் நடத்திவருவதாக கிடைத்த தகவலின் பேரில், நக்கீரன் டீம் அங்கும் சென்று விசாரணை மேற்கொண்டது. இதைக் கண்டு அஞ்சிய பள்ளி நிர்வாகத்தினர், நக்கீரனை தொடர்புகொண்டு பேரம் பேசினர்.

ஆனால், அதற்கு மசியாத நக்கீரனை எப்படி சரிகட்டுவது எனத் தெரியாமல் பள்ளி நிர்வாகத்தினர் கையைப் பிசைந்து வந்தனர். இந்த பேர விவகாரங்களை நாம் பகிரங்கமாக பொதுவெளியில் முன்வைத்துள்ளோம். பணத்தால் அடக்க முடியாத நக்கீரனை அடக்குமுறையால் அடக்கிவிடலாம் என நினைத்த, பள்ளி நிர்வாகத்தினர், பலமுறை கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனால், எதற்கும் அஞ்சாத நக்கீரன் டீம், இதையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, பின்னணயில், ரவிக்குமாரின் தம்பி அருள்பிரகாஷ் இருக்கிறார் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தோம். இதிலிருந்து அருள்பிரகாஷ் செய்தி சேகரிக்கச் செல்லும்போது எல்லாம், ஆட்களை விட்டு நம்மை மிரட்டுவதை வாடிக்கையாக வைத்துக்கொண்டார்.

இதன் நீட்சியாக, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரை சந்தித்து பேட்டி காண்பதற்காக சில தினங்களுக்கு முன்பு நக்கீரன் அணி மீண்டும் கள்ளக்குறிச்சி விரைந்தது. இந்நிலையில், செப்டம்பர் 19 திங்கட்கிழமை மாலை சரியாக 5 மணியளவில், பள்ளியின் வெளிப்புறத்தை படம்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். பின்னர், பள்ளியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் போய்க்கொண்டிருந்த போது, நமது செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமரா மேன் அஜீத் ஆகியோர் சென்ற காரை சில நபர்கள் வழிமறித்துள்ளனர். ராயல் என்பீல்ட் கிளாசிக் பைக் உள்ளிட்ட 5 டூ வீலர்களில் வந்திருந்த நபர்கள், காரில் இருந்த அஜீத்தின் சட்டையைப் பிடித்து தாக்கியுள்ளனர். இதில், அஜீத்தின் சட்டை கிழிந்துள்ளது. காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர்.

மொத்தம் 10 பேர் காரை சூழ்ந்துகொண்டு தாக்கும்போது, என்ன நடக்கிறது என்பதை உணரவே சில நேரம் ஆகியுள்ளது. பின்னர், சுதாரித்துக்கொண்ட நமது செய்தியாளர் மற்றும் கேமரா மேன், உடனடியாக வண்டியை ரிவர்ஸ் கீர் போட்டு விரைந்துள்ளனர். ஒருவழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என 15 கிலோ மீட்டர் கடந்து, தலைவாசல் சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்து ஓய்வு எடுப்பதற்காக வெளியே வந்துள்ளனர். அப்போது, பின்னாலேயே வந்து கொண்டிருந்த அடியாட்களில், ரவிக்குமாருக்கு நெருக்கமான அருள்சுபாஷும் இருந்துள்ளது தெரியவந்தது. மீண்டும், காரில் ஏற முயன்ற நமது செய்தியாளர் பிரகாஷ் மற்றும் அஜீத் மீண்டும் தாக்கப்பட்டுள்ளனர். இதில், செய்தியாளர் பிரகாஷின் தலை உடைக்கப்பட்டு, அஜீத்தின் பல் நொறுக்கப்பட்டது. அப்போது, பச்சை சட்டை அணிந்திருந்த ஒருவன், 'நக்கீரனில் உண்மையா எழுதுறீங்க... அதுதான் அடிக்கிறோம்..' என சொல்லிக்கொண்டே அடித்துள்ளான். ரத்தக் காயத்தில் நின்றுகொண்டிருக்கும் நமது நக்கீரன் டீமை கண்ட பொதுமக்கள் என்ன ஏது என விசாரித்துள்ளனர். மக்கள் கூடியதால், இதைப் பயன்படுத்திக்கொண்ட நக்கீரன் டீம் அங்கிருந்து தப்பி தலைவாசல் போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளது.

நடந்த விவரங்களை சொல்லி அங்கு புகார் அளித்தோம். பின்னர், நமது பாதுகாப்புக்காக இரண்டு போலீசாரை நம்முடன் அனுப்பி வைத்த போலீஸ் அதிகாரிகள், நம்மை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், பல முக்கிய ஆதாரங்கள் இருந்த நக்கீரன் பிரகாஷின் மொபைல் போனை அந்த மர்ம கும்பல் பறித்துச் சென்றுவிட்டது.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர்  அருண் சுபாஷ் உட்பட 10 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் செல்வராஜ், தீபன் சக்கரவர்த்தி, செல்வக்குமார், பாலகிருஷ்ணன், ராஜசேகர் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கருத்துகள் இல்லை: