ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

சங்கரன்கோவில் சிறுவர்களுக்கு இனிப்பு விற்க மறுத்தவர் கைது.. தீண்டாமை - கடைக்கு சீல்! | Sankarankovil

மின்னம்பலம் - monisha :  சங்கரன் கோவில் தீண்டாமை பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் இந்நிகழ்விற்கு இன்று (செப்டம்பர் 17) விளக்கம் அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியலின பள்ளி குழந்தைகளுக்குத் தின்பண்டம் அளிக்க கடைக்காரர் ஒருவர் மறுத்தார். ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்றும் கடைக்காரர் குழந்தைகளுடன் கூறினார்.
கட்டுப்பாடு என்றாலே என்னவென்று தெரியாமல் குழந்தைகள் “கட்டுப்பாடுன்னா என்ன?’ என்று கேட்க, ’ஊர் கூடி முடிவெடுத்துள்ளது. அதனால் உங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது. உங்கள் வீட்டிலேயும் சென்று சொல்லுங்க” என்று குழந்தைகளிடம் கூறினார்.
இதனைக் கேட்ட குழந்தைகள் தின்பண்டம் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானது. மேலும் பலரும் இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து கடைக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் கடைக்காரரைக் கைது செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த பெட்டிக்கடைக்குச் சீல் வைக்கப்பட்டு 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் விளக்கம்

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 17) மாலை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், பெரும்புத்தூர் கிராமம், மஜரா பாஞ்சாகுளத்தில் பட்டியல் இன பறையர் சமுதாய மக்களின் குழந்தைகளுக்கு யாதவர் இனத்தைச் சேர்ந்தவரின் கடையில் எவ்வித தின்பண்டங்களும் வழங்கக் கூடாது எனக் கூறி வாட்ஸ்-அப் மூலம் வீடியோ பதிவு பரவியதைத் தொடர்ந்து, உடனடியாக விசாரணை செய்யப்பட்டதில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு யாதவர் சமுதாயம் மற்றும் பட்டியல் இன பறையர் சமுதாய மக்களுக்கு இடையே நடந்த பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கானது இன்று வரையிலும் நிலுவையில் உள்ளது.

தற்போது யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராமகிருஷ்ணன் என்பவர் மத்திய அரசுப் பணிக்குத் தேர்வாகியுள்ள நிலையில் யாதவர் சமுதாய மக்கள் பறையர் சமுதாய மக்களிடம் சென்று ராமகிருஷ்ணன் என்பவர் மேல் உள்ள வழக்கை வாபஸ் பெறக் கேட்டுள்ளனர்.

இதற்குப் பறையர் சமுதாய மக்கள் தங்கள் சமுதாயத்தினர் மேல் யாதவர் சமுதாய மக்களால் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்றால் மட்டுமே பதிலுக்கு ராமகிருஷ்ணன் மேல் போடப்பட்டுள்ள வழக்கினை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட கிராமத்தில் உள்ள யாதவர் சமுதாய நாட்டாண்மை மகேஷ் என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் பறையர் சமுதாய சிறுவர் சிறுமிகள் தின்பண்டங்கள் கேட்டதற்குத் தர மறுத்துள்ளதாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வரப்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் காவல்நிலைய குற்ற எண்.377/2022 பிரிவு 153 கிளாஸ் ஏ ஐபிசி -ன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் மகேந்திரன் மற்றும் இராமச்சந்திரன் என்ற மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட சம்பவம் குற்ற விசாரணை முறைச்சட்டம் 1973 பிரிவு 133 (1) (ஆ)-ன் கீழ் வருவதால் மகேஷ் என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடைக்குச் சங்கரன் கோவில் வட்டாட்சியரால் இன்று (17.09.2022) தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது” என்று மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மோனிஷா

கருத்துகள் இல்லை: